நிம்மதி கொடுக்கும் மலைப்பயிர்கள் சாகுபடி!

பொதுவாக, மலைப்பாதைகளில் பயணம் மேற்கொண்டால் மனது லேசாகிவிடும். திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூர் மலைப்பகுதியில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் தில்லை நாதனைச் சந்திக்கச் சென்றபோதுதான் அந்த அனுபவம் கிட்டியது.

ஒட்டன்சத்திரத்திலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் பாச்சலூர் சாலையில் பயணிக்கும்போது, வழி நெடுக உள்ள மலைத்தோட்டங்களில் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், எலுமிச்சை எனச் செழிப்பாகக் காட்சியளித்தன. ஒட்டன்சத்திரத்தில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கடைசிக்காடு. அங்கிருந்து வலது பக்கமாகத் திரும்புகிறது, செம்பரான்குளம் செல்லும் மண்பாதை. அந்தப் பாதையில் ஒரு மைல் தூரத்தில் சாலையோரத்திலேயே நம்மை வரவேற்கிறது, ‘வெண்பா நாச்சியார் இயற்கை வேளாண்மைப் பண்ணை’.

பண்ணையில் நுழையும்போது தில்லைநாதனுடன் சேர்ந்து மழையும் நம்மை வரவேற்றது. “பத்து நிமிஷம் பெய்யும்… அப்பறம் வெறிக்கும்… மறுபடியும் லேசா தூறும். அதைப்பத்தியெல்லாம் யோசிக்காம நம்ம வேலையைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்” என்றபடியே நம்மிடம் பேச ஆரம்பித்தார், தில்லைநாதன்.

“எனக்குப் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பக்கத்துல இருக்கிற பம்மனேந்தல் கிராமம். படிச்சுட்டு நில அளவைத்துறையில சர்வேயரா வேலைக்குச் சேர்ந்தேன். திண்டுக்கல் மாவட்டத்துல போஸ்டிங் போட்டதால இங்க செட்டில் ஆகிட்டேன். நான் பாரம்பர்ய விவசாயக் குடும்பத்துல இருந்து வந்திருந்தாலும்… அரசாங்க வேலைக்கு வந்துட்டதால, விவசாயம் பக்கம் கவனம் செலுத்த முடியலை. இடையில் ‘ஃபெட்காட்’ங்கிற நுகர்வோர் அமைப்புல சேர்ந்தேன். அங்கதான் ‘நெல்’ ஜெயராமன் எனக்கு அறிமுகமானார். ஜெயராமன் அந்த அமைப்போட விவசாயப் பிரிவு இயக்குநரா இருந்தார். அந்த அமைப்பு மூலமாத்தான் இயற்கை விவசாயம் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தச் சமயத்துல நம்மாழ்வார் ஐயாவைச் சந்திக்கிற வாய்ப்பும் கிடைச்சது. அவரை அழைச்சுட்டு வந்து ஒட்டன்சத்திரம் பகுதியில மூணு தடவை இயற்கை விவசாயப் பயிற்சி முகாம் நடத்தியிருக்கேன்.

எனக்கு மூணு பசங்க. மூணு பேருமே இன்ஜினீயரிங் முடிச்சுருக்காங்க. ஒருத்தர் வெளிநாட்டுல இருக்கார். இன்னொருத்தர் சென்னையில் இருக்கார். மற்றொருவர் எங்களோடவே இருக்கார். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ‘ஹார்ட் அட்டாக்’ வந்து ‘பைபாஸ் சர்ஜரி’ பண்ண வேண்டியதாப் போச்சு. அதுக்குப் பிறகு விருப்ப ஓய்வு வாங்கிட்டு வந்துட்டேன். ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையை எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு விவசாயியா வாழ்வோம்னு தோணுச்சு.

அதுக்காக நிலம் தேட ஆரம்பிச்சப்போ, இந்த இடம் அமைஞ்சது. ஆரம்பத்துல ரெண்டு ஏக்கர் கிடைச்சது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வாங்கினதுல, இப்போ மொத்தம் ஆறு ஏக்கர் நிலம் இருக்கு. மலைப்பகுதியில விவசாயம் செய்யணும்னு அவசியமில்லை. சும்மா உட்கார்ந்து இருந்தாலே போதும்… உடம்புக்கும் மனசுக்கும் புத்துணர்ச்சி கிடைச்சுடும். மாசுபடாத காத்து, மூலிகைகள், காட்டுச்செடிகளோட மணம் எல்லாம் சேர்ந்து மனசை மயக்கிடும். அதனாலதான் மலைப்பகுதியைத் தேர்ந்தெடுத்தேன்.

நான், ‘பசுமை விகடன்’ புத்தகத்தைத் தொடர்ந்து, வாங்குவேன். சொல்லப்போனா, என்னோட விவசாய ஆசையைத் தூண்டிவிட்டதே அதுதான். அதுல, ‘தண்டோரா’ பகுதியைப் பார்த்து, சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில இருக்குற ‘பஞ்சாப் நேஷனல் வங்கி’யோட பயிற்சி மையத்துல சில பயிற்சிகளை எடுத்துகிட்டேன். இப்ப நானே, அந்த மையத்துல விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்துட்டுருக்கேன்” என்று முன்கதை சொன்ன தில்லைநாதன் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

தோட்டத்தின் தரைப்பகுதி முழுவதும் இலைதழைக் கழிவுகளால் மூடப்பட்டு மண், பஞ்சுப் பொதியைப்போல் ‘மெத்’தென்றிருந்தது. காபி, வாழை, பலா, கல்யாண முருங்கை, மிளகுக்கொடிகள், ஆரஞ்சுச் செடிகள், காட்டு மரங்கள், மலை மிளகாய்ச் செடிகள், செர்ரி தக்காளி, திப்பிலி, சௌசௌ எனப்பல பயிர்களுடன் வனம்போலக் காட்சியளித்தது. பலா மரத்தில் ஒரு ‘கஞ்சிப்பலா’ப் பழத்தைப் பறித்துக் கைகளால் பிளந்து சாப்பிடக் கொடுத்தார். அருமையான சுவையுடன் இருந்தது, அச்சுளைகள். அவற்றை ருசித்துக்கொண்டே தோட்டத்தைச் சுற்றி வந்தோம்.

“இந்த நிலத்தை வாங்கும்போது ஒரு வயசுல காபிச் செடிகள் இருந்துச்சு. கொஞ்சம் வாழை இருந்துச்சு. எனக்கு நிலத்தை விற்பனை செஞ்சவங்க ரசாயன உரம் பயன்படுத்தித்தான் விவசாயம் செஞ்சுருக்காங்க. நான் வாங்கிய பிறகு, முழுமையான இயற்கை விவசாயப் பண்ணையாக்கிட்டேன். ‘இயற்கை விவசாயப் பண்ணை’னு தமிழ்நாடு அங்கக வேளாண் துறையில அங்கீகாரம் வாங்கியிருக்கேன். நான் வாங்கினப்போ, 19 மிளகுக்கொடிகள் இருந்துச்சு. இப்போ 600 மிளகுக்கொடிகளை நட்டுருக்கேன். வாழைக்கு இடையில கல்யாண முருங்கை மரங்களை நட்டு, அதுல மிளகுக்கொடிகளை ஏத்தி விட்டுருக்கேன். இடையில காபிச் செடிகளையும் ஆரஞ்சு செடிகளையும் நட்டு வெச்சிருக்கேன். இந்தத் தோட்டத்துல எந்த இடத்தையும் சும்மா விடுறதில்லை. தோப்பு அடர்த்தியா இருக்கும்போது, மரங்கள்ல இருந்து விழுற இலைதழை சருகுகளே இயற்கையான மூடாக்கா மாறிடுது. மழையை நம்பிதான் விவசாயம் நடக்குது. ஒரு ஆழ்துளைக் கிணறும் இருக்கு. மழையில்லாத காலங்கள்ல அதைவெச்சு சமாளிச்சுட்டுருக்கேன்.

ரசாயன உரத்தைப் பயன்படுத்தக் கூடாதுங்கிற முடிவுக்கு வந்தவுடனே ரெண்டு மாடுகளை வாங்கிட்டேன். தினமும் பகல்ல ஒரு தம்பதி வேலைக்கு வருவாங்க. அவங்கதான் மாடுகளைப் பார்த்துக்கிறாங்க. அவங்களோடு சேர்ந்து நானும் களையெடுக்கிறது, கவாத்து பண்றதுனு ஏதாவது தோட்ட வேலைகளைச் செய்வேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் வீட்டுக்குப் போவேன். வாரம் முழுக்கத் தோட்டத்துலதான் இருப்பேன். இங்க இருக்கற ஒவ்வொரு செடியும் எனக்கு அத்துபடி. மழை, வெயில்னு பார்க்கமாட்டேன். எப்பவும் நிலத்துலதான் இருப்பேன். படுக்க மட்டும்தான் வீட்டைப் பயன்படுத்துவேன். மத்த நேரங்கள்ல, என்னோட குழந்தைகளோடதான் (செடி, கொடிகளோடு) பேசிக்கிட்டு இருப்பேன். நிலத்துல இருக்குற நேரத்துல, எனக்குக் கிடைக்கிற சந்தோஷம் வேற எதிலேயும் கிடைக்கிறதில்லை.

நான் வாங்கும்போது இந்த நிலத்துல அசுவினிப் பூச்சித் தாக்குதல் அதிகமா இருந்துச்சு. ‘பூச்சி’ செல்வம் ஐயாவோட ஆலோசனைபடி… வசம்பு, வேப்பங்கொட்டை, புகையிலைக்கட்டை மூணுலயும் ஒவ்வொரு கிலோ எடுத்து மாட்டு மூத்திரத்துல ஊறவெச்சு, தண்ணி கலந்து தெளிச்சேன். பூச்சிகள்லாம் ஓடிடுச்சு. அப்பப்போ இந்தக் கரைசலைத்தான் தெளிச்சு விடுறேன். இப்போ, பூச்சித்தாக்குதலே இல்லை. அதே மாதிரி காபியில வர்ற மஞ்சள் புள்ளி நோய்க்குத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோமசுந்தரம் ஓர் ஆலோசனை சொன்னாரு. கடலைப் பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்கு, இலுப்பைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு நாலையும் சம அளவு எடுத்து மாட்டு மூத்திரத்துல, ஏழு நாள் ஊற வெச்சு வடிகட்டி தண்ணி கலந்து தெளிச்சா, அந்த நோய் குணமாகிடுது.

காபியில் கொட்டைகளை எடுத்தபிறகு கிடைக்கிற கழிவுத்தோலோட சூடோமோனஸ் கலந்து அதைச் செடிகளுக்கு உரமாகக் கொடுத்துட்டுருக்கேன். அதோட பஞ்சகவ்யாவையும் தயாரிச்சுப் பயன்படுத்திக்கிறேன். வாராவாரம் முப்பது மில்லி பஞ்சகவ்யா குடிச்சுட்டுருக்கேன். பைபாஸ் சர்ஜரி பண்ணின பிறகு தொடர்ச்சியா மாத்திரை சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். பஞ்சகவ்யா குடிக்க ஆரம்பிச்ச பிறகு, மாத்திரை சாப்பிடுறதை விட்டுட்டேன். மலை முழுக்க ஏறி இறங்கி விவசாயம் பார்க்க உடம்பு ஒத்துழைக்கிறதுக்குப் பஞ்சகவ்யாவும் ஒரு காரணமா இருக்கலாம்னு நினைக்கிறேன். இங்க இருக்குற மூலிகைகளைப் போட்டுதான் டீ தயாரிச்சுக் குடிக்கிறேன். மண்பானையில தான் சமைச்சுச் சாப்பிடுறேன். இந்த மூலிகைக் காத்தும் உணவு முறையும்தான் இப்போ என்னை ஆரோக்கியமா வெச்சுருக்கு” என்ற தில்லைநாதன் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“இங்க வருமானத்துக்காக விவசாயம் செய்யலை. என்னோட மனநிறைவுக்காகச் செய்றேன். லட்சக்கணக்குல வருமானம் இல்லாட்டியும், தோட்டப்பராமரிப்பு, பணியாளர் சம்பளம், என்னோட செலவுனு எல்லாத்துக்கும் சேர்த்துப் போதுமான வருமானம் கிடைச்சுட்டுதான் இருக்கு. வாரம் ஐந்நூறுல இருந்து ஆயிரம் வாழைக்காய்கள் எடுக்குறேன். சென்னையில என் மகன்கூட வேலை பாக்குறவங்களே வாழைப்பழங்களை வாங்கிக்கிறாங்க. புதன்கிழமை பாச்சலூர்ல நடக்குற சந்தையிலயும் விற்பனை செய்றேன். ஒரு காய்க்குச் சராசரியா எட்டு ரூபாய் விலை கிடைக்கிது. வாரத்துக்கு 4,000 ரூபாய்க்கு மேல வாழை மூலமா வருமானம் கிடைக்குது.

போன வருஷம் ரெண்டு டன் காபிக்கொட்டை விற்பனை செஞ்சதுல 2,50,000 ரூபாய் வருமானம். கிடைச்சது. மிளகு மூலமா 30,000 ரூபாய் கிடைக்குது. வாழை மூலமாகக் கிடைக்கிற வருமானத்துல தோட்டப்பராமரிப்பு, வேலையாள் சம்பளம் ரெண்டையும் சமாளிச்சுக்கிறேன். காபி, மிளகு மூலமாகக் கிடைக்கிற வருமானம் அப்படியே லாபமா நிக்கும். படிப்படியா மகசூல் அதிகரிக்கிறப்போ வருமானமும் அதிகரிக்கும்” என்ற தில்லைநாதன் நிறைவாக,

“இங்க வருமானம் கிடைக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும்… இத்தனை வருஷத்துக்குப் பிறகு இப்போதான் நான் வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன்ங்கிறதுதான் முக்கியமான விஷயம். கோடி கோடியாகக் கொடுத்தாலும் கிடைக்காத நிம்மதியும், ஆறுதலையும் இந்த நிலமகள் எனக்கு அள்ளி அள்ளிக் கொடுக்குறா. அதுபோதும் எனக்கு. இந்தப் பண்ணையோட வளர்ச்சியில… ‘பசுமை விகடன்’, ‘பேராசிரியர்’ சோமசுந்தரம், ‘பூச்சி’ செல்வம், ‘அங்ககச் சான்றளிப்புத்துறை’ நாராயணன், பஞ்சாப் நேஷனல் பேங்க் பயிற்சி மையம், பல முன்னோடி விவசாயிகள்னு பலருக்கும் பங்கிருக்கு. எல்லாருக்கும் இந்த நேரத்துல என்னோட நன்றியைத் தெரிவிச்சுக்குறேன்” என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி கைகளைக்கூப்பி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

தில்லைநாதன்,
செல்போன்: 9486259323 .

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “நிம்மதி கொடுக்கும் மலைப்பயிர்கள் சாகுபடி!

  1. Mohammed Ebraheem says:

    தில்லை நாதன் சார் உங்களுடன் பேச வேண்டும்.. உங்கள் அலைபேசி எண் அணைத்து வைக்க பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *