பாகற்காய் உடல்நலனுக்கு நல்லது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் கசப்புத் தன்மை காரணமாக, பலரும் அதை நெருங்க பயப்படுவார்கள். அப்படிக் கசப்புத்தன்மை இல்லாமல், பாகற்காயின் குணநலன்களையும், அதை விஞ்சும் மருத்துவ குணங்களையும் கொண்டது பழுப்பக்காய்.
“கசப்புத் தன்மையில்லாமல், துவர்ப்புத் தன்மை கொண்ட இந்த விநோதமான காயை எங்கள் கிராமத்தில் பன்னெடுங்காலமாக உணவாகப் பயன்படுத்திவருகிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமங்களில் விளையும் இந்த அரிய காயை அக்டோபர், டிசம்பர் பருவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சந்தைக்குக் கொண்டுவந்து கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கிறார்கள். அந்தக் காயை தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் காண்பதே அரிதாக இருக்கிறது. இதை விவசாய, இயற்கை ஆர்வலர்கள் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுபோய் சேர்க்கலாமே?” என்று கேட்கிறார் ஆர்.கணேஷ்குமார்.
துவர்ப்பான பழுப்பக்காய்
இவர், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு மருந்தியலாளர் படிப்பு படிக்கிறார். இந்தத் தாவரத்தின் மருத்துவப் பலன்கள் குறித்து, கடந்த இரண்டாண்டுகளாக ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கிறார். பழுப்பக்காய் குறித்து அவர் மேலும் பகிர்ந்துகொண்டது:
என்னுடைய சொந்த ஊர் நெல்லை சிவகிரி வட்டத்தைச் சேர்ந்த ஆத்துவழி மலைக்கிராமம். இங்குள்ள தலையணை அருவியின் அடிவாரத்தில் பழுப்பக்காய் நிறைய விளைந்து கிடக்கும். இதை பழுவக்காய் என்றும் சொல்வார்கள். இதோட தாவரவியல் பெயர் ‘மொமோர்டிகா டயோகா’ (Momordica Dioica). படர்கொடி வகையான இந்தத் தாவரம் வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்தது. இதில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. பாகற்காய்க்கு அடுத்தபடியாக மருத்துவ குணம் வாய்ந்த இந்த காய், துவர்ப்பு சுவையுடையதாக இருப்பதால் எளிதாகச் சாப்பிடலாம். பழுப்பக்காயில் துவர்ப்புத் தன்மைக்குக் காரணமாக இருக்கும் வேதிப்பொருள் ஆந்த்ராகுயினோன் கிளைகோசைட்ஸ் (anthraquinone glycosides).
மானாவாரி விளைச்சல்
பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. கரம்பக்காய் என்பது ஒன்று, சராசரியான பாகற்காய் மற்றொன்று. அதில் கரம்பைக்காய் உருண்டையாக இருக்கும். இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. அதே குணநலன்களைக் கொண்டது இது. பொரித்தும், தண்ணீரில் வேகவைத்து வெங்காயம், தேங்காய் போட்டுப் பொரியல் செய்தும் இதைச் சாப்பிடலாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். விதைகளையும் மென்று சாப்பிடலாம். இலங்கையில் மட்டன், சிக்கன் வறுவல் செய்யும்போது, இந்தக் காயையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.
மழைக்காலத்தில், எங்கள் ஊரைச் சுற்றி 40 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் மானாவாரி நிலங்களில் இது அதிகமாக விளைகிறது. குளசேகரப்பேரி கண்மாய்க்கரையோரம் வண்டல் மண்ணில் செழித்து வளருகிறது. இதன் அடிப்பாகத்தில் உள்ள கிழங்கை நட்டு வைத்தால் மூன்று மாதங்களில் கொடிபோல வளர்ந்து காய்த்து, காய்ந்து விடுகிறது. இதன் பூ, பழத்தைப் பயன்படுத்துவது இல்லை. அக்டோபர், டிசம்பர் மாதங்களில் இது காயாக இருக்கும்போது பறித்து வாசுதேவநல்லூர் பேரூராட்சி சந்தையில் நூற்றுக்கு மேற்பட்டோர் விற்பதைக் காணலாம். இதைச் சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
பரவலாக வளர்க்கலாம்
ஒரு நாளைக்கு, ஒரு நபர் கால் கிலோவரை சாப்பிடலாம். இதைச் சாப்பிடுபவர்களுக்கு மலச்சிக்கல் அகலும். குடலில் நூல்புழுக்களை அழிக்கிறது.
சிவகிரிக்கு அடுத்தபடியாக இந்தத் தாவரத்தைப் புளியங்குடியில் பார்த்திருக்கிறேன். அசாம், மேற்கு வங்கத்திலும் இந்த பழுப்பக்காய் பயன்படுத்தப்படுகிறது. இதை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்க்கலாம். குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையோரக் கிராமங்களில் நன்கு வளரக்கூடியது இந்தத் தாவரம். இதைப் பரவலாக வளர்க்கலாம்” என்கிறார் கணேஷ்குமார்.
பழுப்பக்காய் தொடர்பான இவருடைய ஆராய்ச்சிக்கு மருந்தியல் கல்லூரி ஆசிரியர்கள் சிவக்குமார், சாமுவேல், சியாமளா ஆகியோர் வழிகாட்டிகளாக இருக்கின்றனர். இது குறித்த ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார் கணேஷ்குமார்.
ஆர்.கணேஷ்குமார் தொடர்புக்கு: 09659505947
நன்றி : ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்