பொதுவாக நோனி தாவரம் தனியாகவும் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராகவும் பயிரிட உகந்தது. நோனிப் பழங்கள் குளிர்காலத்தைவிட வெயில் காலத்தில் அதிகமாக விளையும் தன்மை கொண்டவை. இவை எல்லா மண் வகைகளிலும் குறிப்பாக அதிக அளவு கார்பன், ஈரப்பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக்கூடியவை.
இத்தாவரமானது (நோனி) விதைகள், தண்டுகள், வேர்த்துண்டுகள் அல்லது காற்றுப் பதியன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பொதுவாக விதை, தண்டுத் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்வது சிறந்தது. தரமான, வீரியம்மிக்க பழங்களைக் கோடைக்காலத்தில் இயற்கையாகக் காடுகளில் வளரும் தாவரத்திலிருந்து பறித்தும் விதைக்காகப் பயன்படுத்தலாம்.
விதை நேர்த்தி
இயற்கையான வனப்பகுதி மண்ணுடன் மணல், மக்கிய அங்ககப் பொருட்களைக் கலந்து நாற்று உற்பத்தி செய்யும் ஊடகமாகப் பயன்படுத்தலாம். விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்வது, விதை முளைப்புத்திறனை அதிகரிக்கும். போர்ட்பிளேரில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நோனி விதையில் கடினமாக உள்ள மேல் தோலை நீக்கி, விதையின் முளைப்பு விகிதத்தை அதிகரிக்கவும், முளைப்பு காலத்தைக் குறைக்கும் முறைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
சிறந்த பலன் பெற
தோல் நீக்கப்பட்ட நோனி விதைகள் முளைப்பதற்கு வெப்பநிலை, சுற்றுச்சூழல், ரகம், மரபுவழி அமைப்பைப் பொறுத்து 20 முதல் 100 நாட்கள் தேவைப்படும். விதைகள் முளை விட்டவுடன் பாதியளவு நிழலில் (20-30%) கொள்கலனில் நாற்றுகளைத் தனித்தனியாக வளர்க்க வேண்டும். மாற்றாக 20-40 செ.மீ. அளவு கொண்ட தண்டுத் துண்டுகள் மூன்று வாரங்களில் வேர் பிடிக்கும். பின்னர் 9-12 மாதங்களான நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன.
குட்டை ரகங்கள் 2.5×2.5 மீ. இடைவெளியிலும், நெட்டை ரகங்கள் 4.0×4.0மீ. இடைவெளியிலும் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் 0.75×0.75×0.75 மீ. குழிகளில் நடவு செய்ய வேண்டும். ஐந்து முக்கியக் கிளைகளை விட்டுவிட்டு மற்றவற்றை வெட்டிவிடுவது நல்ல மகசூல் கிடைக்க வழிவகுக்கும்.
நோய்த் தடுப்பு
காற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ள நேரத்தில், அதிக மழை அல்லது வெள்ளப் பகுதிகளில், நோனி பயிரைப் பூச்சி, பூஞ்சான நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மீன் எண்ணெய், வேம்பு, சோப்பு ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்தலாம். நாற்று அழுகல், வேர் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த டிரைகோடெர்மா விரிடி (2 கி.கி./ஹெக்டேர்) மற்றும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் (2 கி.கி./ஹெக்டேர்) அளிக்க வேண்டும்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்