பணம் குவிக்கும் மலைவேம்பு!

ரங்களின் பலன்களைப் பட்டியலிட்டால் அது அனுமார் வால்போல் நீண்டுகொண்டே போகும். சாதாரண பென்சில் முதல் மிகப்பெரிய கப்பல்களைக் கட்டுவது வரை மரங்களின் பயன், பலன் ஏராளம்… ஏராளம்…

மரம் தானும் வளர்ந்து, தன்னைச் சார்ந்த மனிதன் உள்பட பிற விலங்கினங்களையும் வளர்க்கிறது. கண்களை சற்றே அகலமாக விரித்துப் பார்த்தால், நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை விதமான மரப் பயன்கள். குடியிருக்க வீடு கட்ட, வீட்டை அடிகூட்ட, பர்னிச்சர்கள் செய்ய, வேளாண் கருவிகளுக்கு, மின்சாரப் பயன்கள், கைத்தறி நெசவு கருவி, தண்டவாளங்களுக்கு சிலீப்பர் கட்டை, மீன்பிடிப் படகு கட்ட, விளையாட்டுக் கருவிகள் செய்ய, வார்ப்பட அச்சுகள் செய்ய, குழந்தைகளுக்கு பொம்மைகள் செய்ய என மரங்களின் பன்முகப் பயன்பாட்டை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தப் பன்முகப் பயன்பாட்டில் நவீனகால பயன்பாடான ஒட்டுப்பலகை எனும் பிளைவுட், மிக நீண்டகாலமாக பயன்பட்டு வரும் காகிதம், விறகுகளை எரிபொருளாகப் பயன்படுத்தி உண்டாக்கும் மின்சாரம் போன்றவையும் உண்டு.

இதுபோன்ற பல்வேறு புதிய தலைமுறை பயன்பாட்டுக்கு கோடிக்கணக்கான மரங்கள் தேவை. இன்றைய காலத்தின் பயன்பாட்டுக்கு இப்போது தப்பிப் பிழைத்து, குறைந்து நிற்கும் வனப்பகுதியை நம்பி வனத்துக்குள் புகுந்தால், வன வளம் நசிந்து சீர்கெட்டு, சூழலியல் சமன்பாடு குலைந்து கடும் பாலையாகிவிடும். அதனால்தான், மரப் பயிரும் பணப்பயிரே என கருதி, மரப்பயிர் சாகுபடியில் உழவர்கள் ஈடுபட வேண்டும். உணவுப் பயிர் விளைவிப்பது மட்டும்தான் வேளாண்மை எனும் காலம் மாறிவிட்டது. வேளாண்மை, மனித இனத்தின் கலாசாரம் என்ற நிலைமை மாறி, வேளாண்மை இலாப நோக்கு உடைய தொழில் எனும் கட்டத்தில் இப்போது நிற்கிறது.

மாறிவரும் பருவகாலம், பருவம் தவறி பெய்யும் பருவ மழை, வேளாண் பணிக்கென போதுமான ஆட்கள் பற்றாக்குறை, குறைந்து வரும் நீர் ஆதாரம், ஏற்ற இறக்கத்தில் ஊசலாடும் வேளாண் விளை பொருள்களின் சந்தை விலை, அரசின் ஆதார விலை எனப்படும் ஆகாத விலை நிலவரம், அரசுகளுக்கு ஏற்றபடி மாறும் ஏற்றுமதிக் கொள்கை, உள்நாட்டு விவசாயிகளை மதிக்காத இறக்குமதிக் கொள்கை, தடையில்லா வர்த்தகம், பன்னாட்டு கம்பெனிகளுக்கு கட்டியம் கூறும் கார்ப்பரேட் கலாசாரம்… என பலமுனைத் தாக்குதலால் உயிர் ஊசலாட்டத்தில் இருக்கும் விவசாயி, தப்பிப் பிழைக்க மாற்று வழி மரம் வளர்ப்பு. பெரிய அளவில் அதிக நிலப்பரப்பில் மரம் வளர்ப்பது சுற்றுச் சூழலுக்கு உகந்ததுதான். ஆனால், உணவு தானிய உற்பத்தி குறைந்துபோகும், பொருளாதார வளர்ச்சி முடங்கும் என்று கூக்குரல் எழுப்புவோர், பறிப்புக் கூலிகூட கொடுக்க முடியாமல் விளைந்த தக்காளியை வீதியில் கொட்டும் விவசாயிகளின் உள்ளக்குமுறலை ஒருபோதும் அறியமாட்டார்கள்.

மரம் வளர்ப்பதும் மகாத்மாவின் ஒருவகையான ஒத்துழையாமை இயக்கம்தான். மரம் மட்டும் நட்டால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்று யோசிக்கவேண்டுமல்லவா? இதற்குத்தான் குறுகிய காலத்தில் பண வருவாய் வழங்கக்கூடிய மரப்பயிர் வகைகள் உள்ளன.

நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவில் வனவளம் இருப்பின், நாடு சுபிட்சமாக இருக்கும். உயிர்ச்சூழல் காடுகள், காப்புக் காடுகள், சமூகக் காடுகள் என எத்தனையோ வகையில் வனத்துறை முயற்சித்தாலும் 33.33 சதவீத அளவை எட்டிப்பிடிக்க முடியவே முடியாது. மரம் வளர்ப்பை தனிப்பட்ட விவசாயிகள் மேற்கொண்டால் மட்டுமே வனப்பரப்பு அதிகரிக்கும். தனிப்பட்ட விவசாயி, ஒரு மரப்பயிரை சாகுபடி செய்ய நினைத்தால், அதன் பொருளாதார நன்மையையும் ஆய்ந்தறிய வேண்டும். தற்போது விஞ்ஞானிகளாலும், மர வியாபாரிகளாலும், விவசாயிகளாலும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள மரப் பயிர் என்றால் அது மலைவேம்புதான்.

விரைவில் முதிர்ச்சி அடையும் பண்பு, பல்வேறு தட்பவெட்பச் சூழலில் வளரும் தன்மை, குறைந்த அளவிலான பராமரிப்பு, பல்வேறு நிலைகளிலும் விற்பனை வசதி, வியாபாரிகளிடம் உள்ள வரவேற்பு போன்ற காரணிகளால், விவசாயிகளால் மலைவேம்பு பெரிதும் விரும்பப்படுகிறது.

மீலியா டூபியா (Melia dubia) என்ற தாவரப் பெயரை உடைய மலைவேம்பு, மசவேம்பு என்றும் அழைக்கப்படுகிறது. சாதாரணமான வெளிப்புற தோற்றம், இலைகளின் வடிவம், மரப்பட்டையின் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு, மலைவேம்பு மரத்தை எளிதில் கண்டறியலாம். குறைந்தபட்சம் 20 அடி முதல் 100 அடி உயரம் வரை வளரக்கூடிய இயல்பை உடையது. ஆரம்பகால வளர்ச்சியின்போது பசுமையான, மிருதுவான, வழுவழுப்பான பட்டையுடன் காணப்படும் மரம், வயது ஏற ஏற, ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் நீளவாக்கில் பிளவுபட்ட செவ்வக வடிவ செதில் போன்ற மரப்பட்டையுடன் வளர்கிறது.

இலை உதிர்க்கும் குணம் உடைய மலைவேம்பு, கடும் கோடைக்காலத்தில் அதிகப்படியான இலைகளை உதிர்த்து இலைவழி நீராவிப்போக்கை கட்டுப்படுத்துகிறது. அதிக பக்கக் கிளைகள் இன்றி, 25 அடி உயரத்துக்கு மேலும் வளரக்கூடியது. இலைகள் குறைவாக இருப்பதால், இதன் அடிமரம் ஒரே சுற்றளவுடன் உருளை வடிவத்தில், உயரமாக, செங்குத்தாக வளர்கிறது. இதனால், இதன் விற்பனை வாய்ப்பு பெரிய அளவில் இருக்கிறது.

வேம்பு மர இலைகளைப் போலவே இதன் இலைகளும் இருப்பதால் என்னவோ இதை மலைவேம்பு என்று சொல்கின்றனர். ஆனாலும், வேம்பு இலைகளைவிட இதன் இலைகள் அதிகப்படியான பசுமையுடனே காணப்படும். இந்த மரத்தின் ஆங்கிலப் பெயர் பீட் ட்ரீ (Bead Tree). இதை பிரைட் ஆஃப் இந்தியா (Pride of India) என்றும் சொல்கின்றனர்.

 

தமிழகம் முழுதும், மலைவேம்பு தனிப் பயிராகவும், வரப்பு ஓர, வேலி ஓர பயிராகவும் வளர்க்கப்படுகிறது. மலைவேம்பின் ஆரம்பகட்ட வளர்ச்சி அசாத்தியமானது. அதனால், விவசாயிகளிடையே மலைவேம்பு வளர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மலைவேம்பு நடவு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ததும், நாம் செய்ய வேண்டியது நம்பிக்கையான, தரமான நாற்று உற்பத்தியாளர் ஒருவரைத்தான். போட்டி மிகுந்த நுகர்வு கலாசார உலகில், தரமானதை தேர்வு செய்வது சற்று கடினமான பணி.

முதலில் தவிர்க்க வேண்டியது, இளஞ் செடியில் அச்சு அசலாக மலைவேம்பு போன்றே தோற்றம் தரும் மீலியா அசாடிராக் எனப்படும் துலுக்க வேம்பு. இது சாலை ஓரத்தில் அழகுக்கென வளர்க்கப்படும் மர வகை. இது, கோணல் மாணலாக, அதிகக் கிளைகளை உடையதாக வளரும் இயல்பை உடையதால், மரப்பயிர் சாகுபடிக்கு ஏற்றதல்ல.

துலுக்க வேம்பு
துலுக்க வேம்பு

மலைவேம்பில் விதை நாற்றுகளும் குளோனிங் நாற்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மலைவேம்பு விதையின் முளைப்புத் திறன் குறைவு என்பதால், மலைவேம்பு விதை நாற்றின் விலை அதிகம். குளோனிங் தொழில்நுட்பம் மூலமாக விதையில்லா இனப்பெருக்கம் மூலம் குறைந்த செலவில் தாய் மரத்தின் 100 சதவீத இயல்பை ஒத்திருக்கும் நாற்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், குளோனிங் நாற்றுகளில் ஆணிவேர் இருக்காது. இதுதவிர, சாதாரண வேம்பை வேர்ப் பகுதியாகவும், மலைவேம்பை செடிப் பகுதியாகவும் வைத்து ஒட்டு கட்டும் முயற்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்றைய நிலையில், ஆணிவேருடன் கூடிய நாற்றுகள் வறட்சியையும், காற்றின் வேகத்தையும் தாங்கக்கூடிய வகையில் வளர்கின்றன. ஒரு ‘மலைவேம்பு தனிப்பயிர் தோட்டம்’ அமைக்க வேண்டும் என விரும்பினால், தோட்டத்துக்குள் சாலைகள், போதுமான வடிகால் வசதி, வேலி, காற்றுத் தடுப்பு வசதி, நீர்ப்பாசன முறை போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். மலைவேம்பு நாற்றுகள், என்ன உபயோகத்துக்காக பயிரடப்படுகின்றன, மண்ணின் வளம் எப்படி இருக்கிறது, நீர்ப்பாசன வசதி எப்படி இருக்கிறது என்பது போன்ற பல காரணிகளால் தீர்மானிக்கப்பட்டு நடப்படுகின்றன. அத்துடன், ஒரு நாற்றுக்கும் இன்னொரு நாற்றுக்கும் இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும் என்பதும் முன்னரே தீர்மானிக்கப்பட வேண்டும்.

சதுர வடிவ நடவு முறை (Square System), செவ்வக முறை நடவு (Rectangular System), வரப்பு நடவு அல்லது ஒற்றை வரிசை நடவு (Single Row System), சதுர – மைய வடிவ நடவு முறை (Quincumx System), அறுங்கோண வடிவ நடவு (Hexagonal System), முக்கோண வடிவ நடவு முறை (Triangular System), நெருக்கு நடவு முறை (High Density Planting System) என பலமுறைகளில் நடவு முறையை மேற்கொள்ளலாம். நடவு முறையை தேர்வு செய்த பிறகு, நிலத்தை சங்கிலி அல்லது டேப் மூலம் அளந்து குழியை அடையாளம் செய்ய வேண்டும். 1.5 அடி X 1.5 அடி X 1.5 அடி அல்லது 2 அடி X 2 அடி X 2 அடி என்ற அளவில், துளையிடும் கருவியால் வட்ட வடிவில் குழி எடுத்து ஆறவிட வேண்டும்.

பருவ மழை துவங்கும் முன், மரக் கன்றுகளுக்கான குழிகளை எடுத்து இரண்டு வாரம் கழித்து மக்கிய தொழு உரம், மேல் மண், நிலக்கரித் தூள், முசோரிபாஸ் 50 கிராம், எலும்புத் தூள் உரம் கொண்ட கலவை ஆகியவற்றைப் போட்டு மூடி, சொட்டு நீர்ப்பாசன வசதியோ, வாய்க்கால் வசதியோ செய்ய வேண்டும்.

5 அடி X 5 அடி இடைவெளியில் அடர் நடவு முறையில் நடவு செய்தால் காகித ஆலைக்கும், அதில் ஒன்று விட்டு ஒன்று வெட்டி 10 அடி X 10 அடி இடைவெளியில் வளர்த்தால் பிளைவுட் தயாரிக்கவும் மரத்தைப் பயன்படுத்தலாம். பக்கவாட்டுக் கிளைகள் எரிபொருளாகப் பயன்படும். வேலியோரங்களில் பல்வேறுவிதமான இடைவெளியில் நட்டு வளர்க்கப்படும் மரங்கள், பல ஆண்டுகள் வளர்ந்த பிறகு மரச் சாமான்கள் செய்வதற்கும், கப்பல், லாரி பாடி கட்டும் தொழிலுக்கும், பிளைவுட் நிறுவனத்துக்கும் பயன்படும். மரங்களுக்கான இடைவெளி என்பது நிலவளம், நீர்வளம், நடப்படும் நோக்கம் மூன்றையும் ஒருங்கிணைத்துச் செய்யப்பட வேண்டும்.

மலைவேம்பு, அவசியம் நீர்ப்பாசனத்தை எதிர்நோக்கும் மர வகை. போதுமான நீர்ப்பாசன வசதி இருக்கும் இடத்தில் மலைவேம்பு பயிரை வளர்ப்பது நல்லது. மானாவாரியிலும் மலைவேம்பு வளர்க்கலாம் என்பது வெறும் பேச்சு. ஏனெனில், மரப்பயிரும் பணப்பயிரே. சிரமத்தை குறைத்து லாபத்தை அதிகம் பெறத்தான் மரப்பயிரே பயிரிடப்படுகிறது. தண்ணீர்தான் மரங்களின் பிரதான உணவு. மலைவேம்பு மரத்தின் எடையில், இளம் பருவத்தில் அதிக அளவு இருப்பது தண்ணீர்தான். இந்தப் பாசன நீர்த் தேவையும், மேலாண்மையும் மலைவேம்பின் வளர்ச்சியை அனுசரித்து மாற்றிக்கொள்ள வேண்டும். இளஞ்செடிகளுக்கு குறைந்த அளவு நீரை அடிக்கடி பாய்ச்சுவது மூலமும், இளஞ்செடியைச் சுற்றி எப்போதும் ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில், மலைவேம்பு இளஞ்செடிகளின் வளர்ச்சி அசுரத்தனமான இருக்கும். வளர்ந்த மரங்களுக்கு, காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருந்தால் போதுமானது. ஏனென்றால், வளர்ந்த மரத்தின் வேர்கள் அதிகரித்து பாசன நீரைத் தவிர்த்து, இதர ஈரத்தையும் எடுத்து மரத்துக்குக் கொடுக்கும்.

மலைவேம்பு மரத்தை முறையாகப் பராமரிப்பு செய்தால் மட்டுமே நல்ல உருண்டையான அடி மரத்தை உருவாக்க முடியும். மரத்தின் பராமரிப்பு இரண்டு வகைப்படும். முதலாவது, பூச்சி நோய்த் தாக்குதலில் இருந்து மரத்தைக் காத்து, எரு இட்டு வளர்த்தல். இரண்டாவது, கவாத்து (பக்கக் கிளைகளை நீக்குதல்) மூலம் மரத்தை விற்பனை வசதிக்கு ஏற்ப வளர்த்தல்.

காட்டில் வளரும் மரத்துக்கு எந்தப் பூச்சி நோய் தாக்குகிறது, யார் அதை பராமரிக்கின்றனர் என கேள்வி வரும். பல்வேறு மரங்களின் ஊடே தன்னிச்சையாக இயற்கையாக வளரும்போது எந்த நோயும் தாக்குவதில்லை. ஆனல், மரத்தை தனிப் பயிராக, தோட்டப் பயிராக, தோப்பாக வளர்க்கும்போது பூச்சி நோய் பிரச்னை வருவது இயற்கையே. இளம் மலைவேம்பு செடிகளில் சிவப்பு சிலந்திப் பூச்சிகள் (Red Spider Mite), இலைகளின் கீழ்புறப் பகுதியில் கூட்டமாகக் காணப்படும். இவை, இலைகளின் புறத்தோல் திசுக்களை உண்பதால், பச்சையம் வெளுப்பதைப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் 0.3 மில்லி டெர்ரிமாக்ஸ் (Derrimax) கலந்து தெளித்து, இந்தச் சிவப்பு சிலந்திப் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். இலை உண்ணும் புழுக்களின் பாதிப்பு இருந்தால், அதன் தாய் அந்துப் பூச்சியை விளக்குப் பொறிவைத்து கவர்ந்து அழிக்கலாம். பெரிய அளவிலான தாக்குதல் என்றால், ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி மெதில் பாரத்தியான் கலந்து தெளித்து அழிக்கலாம்.

மரப்பயிரும் பணப்பயிரே என்ற அடிப்படை எண்ணம் நம்மிடம் இருக்க வேண்டும். ஆகவே, உர மேலாண்மை அவசியம். இளஞ்செடி நடவு செய்யும்போது குழியில் மேல் மண், மக்கிய தொழு உரம், மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியம், முசோரிபாஸ் அல்லது எலும்புத் தூள் உரம் அத்துடன் VAM எனப்படும் வேர் நுண்உட் பூசணம் கலந்து நடவு செய்வதுடன், நிலத்தை அடிக்கடி உழவு ஓட்டி, களை நீக்கம் செய்து, மரத்துக்கு தீப்பெட்டி அளவு 17:17:17 காம்ப்ளக்ஸ், அத்துடன் அரை கிலோ நிலக்கரித் தூளுடன், 100 மில்லி ஹியூமிக் அமிலமும் கொடுக்கலாம்.

மார்பின் அளவில் அளக்கும்போது, சுமார் ஐந்து அடி சுற்றளவுடன் 60 அடி உயரம் வரை, மிக நேராக பக்கக் கிளைகள் இல்லாமல் உருண்டையாக ஒற்றைத் தடி மரமாக வளர்க்க வேண்டும். இப்படிப்பட்ட மரங்களிலங் மட்டுமே நல்ல முறையில் பிளைவுட், வீனியர் கட்டைகள் போன்றவை அதிக அளவில் எடுக்க முடியும். மரம் வாங்க வரும் வியாபாரிகள், அதிகபட்ச உயரத்துக்கு பக்கக் கிளைகள் இல்லாமல், சுருட்டுகள் இல்லாமல், காயங்கள் இல்லாமல் இருக்கும் வாளிப்பான மரங்களுக்கு நல்ல விலை கொடுப்பார்கள். மலைவேம்பை வளர்ப்பது ஒரு தனிக் கலை. தேர்ந்தெடுக்கும் இடைவெளி, மரத்தின் நேரான, ஒழுங்கான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

மலைவேம்பு செடிகள் வளர வளர, இயற்கையாகவே இலைகள் கொட்டி மரம் நேராக வளரும். சில சமயம், செடிகள் வளர வளர, பக்கக் கிளைகளுக்கான துளிர்கள் வரும். இந்தப் பக்கக் கிளைக்கான துளிர், இலையும் மரமும் சேரும் இடைவெளியிலிருந்து துளிர்க்கும். இளம் துளிர்களிலேயே கிள்ளி எடுப்பது சிறந்த பலனைக் கொடுக்கும். அலுமினியம் அல்லது மூங்கில் ஏணி கொண்டு எவ்வளவு உயரத்துக்கு முடியுமோ, அவ்வளவு உயரத்துக்கு பக்கக் கிளைக்கான துளிர்களைக் கிள்ளி எடுக்க வேண்டும். மலைவேம்பு, அதிக வளர்ச்சி உடைய மரம் என்பதால், தவறாமல் துளிர்களைக் கிள்ளி எடுக்க வேண்டும். கத்தி கொண்டு வெட்டும் அளவுக்குப் பக்கக் கிளைகளை வளர விடவே கூடாது. கத்தியால் வெட்டினால், மரத்தின் பட்டையில் காயம் பட்டு பட்டை உரியவும் வாய்ப்பு உள்ளது.

இளம் கன்றாக இருக்கும்போது, மரத்தின் அருகில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மரம் வளர வளர தண்ணீர் பாசன முறையை தூரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். தண்ணீரைத் தேடி வேர்கள் நிலம் முழுவதும் பரவிப் படர்ந்தால் மட்டுமே மரத்துக்கு அதிக அளவு ஊட்டச்சத்து கிடைக்கும். வேர்கள் பரவினால், மண்ணில் பிடிப்பு ஏற்பட்டு, எவ்வளவு பலத்த காற்று வீசினாலும் மரம் சாய்ந்துவிடாமல் இருக்கும்.

மலைவேம்பு கடினத்தன்மை குறைந்த இலகு ரக மரம் (Soft Wood). வளர வளர, மரத்தின் நடுவில் உள்ள வைரப் பகுதி வெளிர் சிவப்பு நிறத்துடன் காணப்படும். மரத்தின் தண்டுப் பகுதியில் காணப்படும் வரி வளையங்கள்தான், மரத்தின் வயதைக் கண்டறியும் ரேகைகள். மலைவேம்பு மரத்தின் உயர வளர்ச்சி மிக அபரிமிதமானது. ஒரு ஆண்டே வயதுள்ள மலைவேம்பு மரமே 20 அடி உயரத்தையும் தாண்டி நிற்கும். ஆனால், நமக்கு மரத்தின் சுற்றளவு வளர்ச்சியே மிக முக்கியம். நன்கு பராமரிக்கப்படும் மலைவேம்பு மரமானது, மாதத்துக்கு ஒரு அங்குல சுற்றளவு வீதம் வருடத்துக்கு குறைந்தது பத்து அங்குல சுற்றளவாவது வளரும் இயல்பை உடையது. சுமார் பத்து ஆண்டுகளில், நான்கு அடி சுற்றளவும், சுமார் 80 அடி உயரமும் கொண்டதாக வளரும். வெட்டப்பட்ட மரமானது, போதுமான கடினத்தன்மை உடையதாகவும், 12 சதவீதம் ஈரப்பதத்தில் ஒரு கன அடிக்கு 45 கிலோ எடை உடையதாகவும் இருக்கும்.

வெட்டப்பட்ட மலைவேம்பு மரம், அபரிமிதமான ஈரத்தன்மை உடையதாக இருக்கும். ஆனால், மரத்தை பதப்படுத்தினால் (Seasoning) மிக நேர்த்தியாகவும், உறுதியானதாகவும் ஆகிவிடும். கரையான் அரிக்காத இதன் தன்மையால், கட்டட உள் அலங்காரப் பணிகளுக்குப் பெரிய அளவில் பயன்படுகிறது. மேஜை, நாற்காலி போன்ற பொருள்கள் செய்யவும், தேயிலை பேக்கிங் பெட்டி, கட்டுமரம் செய்யவும் பயன்படுகிறது.

மலைவேம்பு மரத்துக்கே உரிய தனித்துவமான சந்தை வாய்ப்பு, ஒட்டுப்பலகை எனப்படும் பிளைவுட் இண்டஸ்ட்ரீ. பிளைவுட்டின் தேவையும், பயனும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெட்டிக் கொண்டு வரப்பட்ட மரங்களை ஈரப்பதத்துடன் தேவையான அளவு தடிமனில் காகித ரோல்போல் சீவி எடுக்கின்றனர். இதை ‘வீனியர்’ என்று சொல்வார்கள். வீனியர் இரண்டு வகைப்படும். ஒன்று, ஃபேஸ் (Face) வீனியர். இன்னொன்று, கோர் (Core) வீனியர்.

ஃபேஸ் வீனியர் என்பது பிளைவுட்டின் மேலும் கீழும் உள்ள பகுதி. நல்ல அழகான ரேகை வரி அமைப்புடன், ஓட்டை, சுருட்டை இல்லாத தரமான மரங்களின் சீவி எடுக்கப்படும் பகுதி இதற்குத் தேவை. இது நமது பார்வைக்குத் தெரியும் முன்-பின்புறப் பகுதி. இந்த ஃபேஸ் வீனியர்தான், பிளைவுட்டின் தரத்தை எடுத்துக்காட்டும். இதுவரை இந்த ஃபேஸ் வீனியர் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இறக்குமதி தரத்துக்கான ஃபேஸ் வீனியர் மலைவேம்பிலும், சில்வர் ஓக் மரத்திலும் கிடைக்கிறது. இந்த இரண்டிலும் அழகான ரேகை வரி அமைப்பாலும், நைஸ் மெருகு ஏற்ற வசதியாலும் மலைவேம்பு முன்னிலை வகிக்கிறது. சந்தையிலும் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதனால், பிளைவுட் தொழிற்சாலைகள் மலைவேம்பு மரத்தை தேடித்தேடி வாங்குகின்றன.

மலைவேம்பு பயிரிட ஆகும் செலவை (ஒரு ஏக்கருக்கு) மனித நாள்கள் (Man Days) கணக்கில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணி

ஆண்டு

 

1

2

3

4

5

முதற்கட்ட வேலை

4

குழி எடுக்க

14

செடி நட

2

களை நீக்க

8

6

6

4

4

தண்ணீர் பாய்ச்ச

6

8

8

8

8

காவல்

1

1

1

1

1

உரம் நட

2

1

1

1

1

இதர பணிகள்

1

1

1

1

1

மொத்தம்

38

17

17

15

15

இவையெல்லாம் உத்தேசக் கணக்கு. ஈரோடு மாவட்டம், தாளவாடி, கல்மண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அங்கசெட்டி, தன் தோட்டத்து எருக்குழியின் ஓரத்தில் தானே முளைத்த இருபது ஆண்டுகால மலைவேம்பு மரத்தை வெட்டி அறுவை மில்லுக்கு கொண்டு சென்று அறுத்து வந்ததில், சுமார் 100 கன அடி மரம் கிடைத்தது. இந்த மரத்தை வெட்டி, தோட்டத்தில் இருந்து மில்லுக்கு கொண்டு சென்று, கட்டைகளாக அறுத்து இழைத்து மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வந்த செலவுகளுக்கு, அடிமரம் தவிர மீதம் இருந்த மர விறகின் விற்பனையே ஈடுகட்டிவிட்டது. மிகமிக குறைந்த விலையாக, 2012-ம் ஆண்டு அவர் மரம் வெட்டும்போது காட்டு ஜாதி மரமே 700 ரூபாய்க்கு விற்றது. அந்த விலைக்கே கணக்கிட்டாலும், ஒற்றை மரத்தின் விலை ரூ.70 ஆயிரம்.

கற்பனைக்கு எட்டாததுபோலத் தெரியும் இதை கண் கொண்டு அளவு செய்து பார்த்தோம். தாளவாடி பகுதியில் வீடுதோறும் செழித்து வளர்ந்து பசுமைக் குடை வைத்த ராக்கெட்டுகளாக மலைவேம்புகள் இருக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக நடப்படும் மலைவேம்பு, கர்நாடகாவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

சின்ன மரம் வளர்ப்புதானே என்று அலட்சியம் காட்டாமல் சின்சியராக செய்தால் மரம் வளர்ப்பும் பணப் பயிர் வளர்ப்பே என்று உறுதியாகச் சொல்லலாம்!

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “பணம் குவிக்கும் மலைவேம்பு!

  1. Narayanan says:

    நம்ம செம்மறி கூட்டம் நெறய நட்டுட்டாங்க மேழும் நட்டு யாமாந்திராதிங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *