தமிழகத்தின் மாநில மலர் செங்காந்தள். இது பச்சை, மஞ்சள் நிறத்திலிருந்து ஆரஞ்சு சிவப்பு நிறம் போன்றவற்றால் அழகாக இருக்கும். சில மலர்கள் அடர்த்தியான சிவப்பு வண்ணம் கொண்டிருக்கும். கிராமிய பேச்சு வழக்கில் இம்மலர் கண்வலிக் கிழங்கு மலர் என்று அழைப்பார்கள்.
கண் வலிக்கிழங்கு பல மருத்துவ குணங்கள் உடையது. இம்மலரில் விதைகள் புற்று நோயை குணமாக்க உதவுகிறது. இத்தாவரத்தின் இலைகள் வயிற்று புண்ணை ஆற்றும். மலட்டுத்தன்மை சிகிச்சைக்கு பாரம்பரியமாக பயன்பட்டு வருகிறது. இத்தாவரத்தை ஹரியானா மாநில விவசாயிகள் பாம்புக்கடிக்கு விஷ மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இதிலுள்ள மோனா ஈதைல் எஸ்டர் என்ற மூலப்பொருள் தான் பாம்பின் விஷத்தை முறிக்க உதவுகிறது.
ஏற்றுமதி நோக்கில் செங்காந்தள் மலர்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடுகின்றார்கள். இத்தாவரத்தினை கால்நடைகள் சாப்பிட நேர்ந்தால் நச்சுத்தன்மையால் கால்நடைகள் இறக்கவும் நேரிடலாம். கண்வலிக் கிழங்கினை கால்நடைகள் சாப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் கழிச்சல், ரத்தத்தில் யூரியா அதிகமாதல், சிறுநீரகப் பாதிப்பு, பிற உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயல் இழத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
முடிவில் இறக்கவும் நேரிடலாம். இந்த நச்சினை வயிற்றிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். கால்நடையின் எடையில் 1 கிலோவுக்கு 2.5 கிராம் என்ற அளவில் கரித்துாளை தண்ணீரில் கலந்து வாய் வழியாக கொடுக்க வேண்டும்.
நோயின் அறிகுறிகளுக்கு ஏற்ப கால்நடை மருத்துவரை உடனடியாக அழைத்து சிகிச்சையளிக்க வேண்டும். கை வைத்தியமாக பத்து வெற்றிலை, இரண்டு தேக்கரண்டி மிளகு, இரண்டு தேக்கரண்டி உப்பு எடுத்து கொண்டு மிளகினை 5 நிமிட தண்ணீரில் ஊற வைத்து அரைத்து கொள்ள வேண்டும். இக்கலவையோடு 100 கிராம் நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்து பாதிக்கப்பட்ட கால்நடைகளின் நாக்கில் தடவ வேண்டும். வாய் வழியாக கரைசலாக ஊற்றக்கூடாது.
இக்கலவை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை தொடர்ந்து 10 தடவைகள் வரை கொடுக்கலாம். இம் மூலிகை மருத்துவத்தை கால்நடை மருத்துவ பல்கலை பரிந்துரை செய்துள்ளது.
– டாக்டர்.வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை
9486469044
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
பசுமை தமிழகம் ஏன் முன்போல் செய்திகள் வருவதில்லை?