இயற்கையை ரசிப்பதற்காக வாரம் தவறாமல் கானுலா செல்வது வழக்கம். அப்படித்தான் அன்றும் சென்றிருந்தேன். அங்குதான் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்குத்தொடர்ச்சி மலைக்கு வலசை செல்லும் அந்தப் பட்டாம்பூச்சியையும் பார்த்தேன்.
பெயின்டடு லேடி (Painted Lady)
இயற்கையின் சூழலை ரசிப்பதற்காக வாரம் தவறாமல் பறவைநோக்கல், வண்ணத்துப்பூச்சிகள், ஏனைய பூச்சிகள் அவதானிப்பு எனக் காட்டுக்குள் கானுலா செல்வது வழக்கம்.
கானுலா என்பது உயர்ந்த மலைச்சிகரங்களில் உள்ளடங்கிய சோலைக் காடுகள் மட்டுமல்லாது சமவெளிக் காடுகள், வறண்ட சிறு குன்றுகள், புதர்க்காடுகள், சதுப்பு நிலங்கள், வயல்வெளிகள் எனப் பல இடங்களிலும் தேடல்கள் மூலமாகச் சூழல் அறிவை வளர்த்துக்கொள்வது என்பது எனக்கு விருப்பான ஒன்று.
இந்த ஞாயிறு அன்றும், அதுபோலவே வீட்டின் அருகில் ராக்கியாபாளையத்திலுள்ள ஓரளவு தண்ணீர் நிற்கும் குட்டைப்பகுதிக்கு நானும் நண்பரும் ஔிப்படக்கருவியுடன் அதிகாலையில் சென்றிருந்தோம்.
கோடைக்காலம் முடிந்து தென்மேற்குப் பருவக்காற்று பரவலாக வீசிக்கொண்டிருந்தது. வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டது. இருந்தவற்றை ரசித்தவாறு வறண்ட புற்களும் கொஞ்சம் பச்சையாக இருந்த புதர்ச்செடிகளும் அடங்கிய குளத்தின் அருகில் உள்ள வெளியில் நடக்க ஆரம்பித்தோம்.
அது சிறுமரங்களும் புற்களும் எருக்கஞ்செடிகளும் புதர்ச்செடிகளும் நிறைந்த ஒரு சிறிய இடம். ஒருபுறம் கற்றாலைச் செடிகள் வேலிபோல் அமைந்திருப்பதால் பார்ப்பதற்கு வளமாகக் காணப்படும்.
பூச்சிகளையும் அதன் வாழிடங்களையும் பார்த்துப் பதிவு செய்யச் சென்ற நாங்கள் மிகக் கவனமாகத் தரையை உற்று நோக்கியபடியே தேடலை ஆரம்பித்தோம்.
சிலந்தி வலைகளும் கருவண்டுகளின் ரீங்காரமும் நிறைந்த அப்பகுதியில் மயில்களும் மைனாக்களும் இரைதேடிக் கொண்டிருந்தன. சின்னஞ்சிறு புதர்க்குருவிகளும் சிறிய புழுக்களைத் தேடிப்பிடித்து இரையாக்கிக் கொண்டிருந்தன.
மெல்ல மெல்லக் கவனமாக அடியெடுத்து வைத்த நாங்கள் குச்சிப்பூச்சி (Stick Insect) ஒன்றைப் பார்த்தோம். தேடினாலும் தெரியாதவாறு இருந்த சூழலோடு ஒன்றிப்போய் உருமறை தோற்றத்தில் இருந்தது. அதைப் பார்த்துப் பதிவு செய்த பின்னர் மெல்ல நகர்ந்து பக்கத்தில் இருந்த செடிகளுக்குள் சிறிதுநேரம் பார்வையைச் செலுத்தியபோது, இருவரும் அதிசயப்பட்டு நின்றோம். ஆம், நாங்கள் ஆசைப்பட்ட தயிர்க்கடைப் பூச்சி (Praying Mantis) ஒன்று அங்கே தனது இரைக்காகக் காத்துக்கொண்டிருந்தது.
அதன் பக்கத்தில் காய்ந்த சிறுமரத்தின் குச்சி ஒன்று தீயில் கருகிக் கிடந்ததைக் கவனித்தோம். இவ்விடத்தில் இதுமட்டும் எப்படித் தீயில் கருகியதென்ற கேள்வியோடு உற்றுநோக்கியபோதுதான் இயற்கையின் மகத்தான பரிணாமத் தகவமைப்பு வியப்பைக் கொடுத்தது. அது கருகிய குச்சியல்ல. அது ஒருவகையான புழு என்பதைப் பார்த்து பிரமித்து நின்றோம். அருமையான உருமறை தோற்றம் கொண்ட அது எந்த பட்டாம்பூச்சியினுடைய புழுப்பருவம் எனக் கண்டுபிடிக்க இப்போதுவரை முயற்சி செய்து வருகிறோம்.
மேலும், நாங்கள் அந்தக் குட்டையின் கரையோரமாக நடந்தபோது ஒருசில தட்டான்களையும் ஒரேயொரு ஊசித்தட்டானையும் ஓவியச் சிறகன் (common picture wing) ஒன்றையும் பார்த்தோம். மேலும், அங்கே ஒரு கிணற்றுப்பாசான் (Coat Buttons) செடியின் தண்டுப் பகுதியில் நண்டுச் சிலந்தி (Crab spider) ஒன்று ஒரு பாட்டாம்பூச்சியை உணவாக்கிக் கொண்டிருந்தது.
மனதுக்கு இதமான காலைநேரத்தில் வேப்பமரத்தில் அமர்ந்திருந்த ஒரு குயில் விடாமல் கூவிக்கொண்டிருந்தது. சில பச்சைக்கிளிகள் கீ…கீ… எனக் கத்திக்கொண்டே எங்களைக் கடந்து சென்றன. பக்கத்துக் குட்டையிலிருந்து நீர்க்கோழிகளின் இடைவிடாத சத்தங்கள் சூழலுக்கு இனிமை சேர்த்தவாறு இருந்தன.
துத்திச்செடிகள் (Country Mallow) நிறைந்திருந்த அந்தப் பகுதியில் இருந்த தொரட்டிச் செடியில் (Capparis sepiaria) வண்ணத்துப்பூச்சியின் இளம்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றதா எனக் கவனித்தபடியே சென்றபோது காட்டு ஈ மற்றும் சில குளவிகளையும் காண முடிந்தது.
நாங்கள் ஓரளவு அன்றைய தேடுதலை நிறைவு செய்யலாம் என்றெண்ணித் திரும்பியபோது, துத்திச்செடிகள் அடர்ந்த பகுதியினுள்ளே ஏதோ அசைந்ததுபோல் உணர்ந்தேன். சிறிது நேரம் அசையாமல் அவ்விடத்தில் இருந்தபடியே கூர்ந்து நோக்கினேன்.
நான் பார்த்தது பொய்த்துப் போகவில்லை. ஏனெனில் அங்கே மிகச்சிறிய கட்டைவிரல் அளவே கொண்ட பச்சோந்திக் (Chameleon) குட்டியொன்று தென்பட்டது. மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றோம். பெரும் வனத்திலுள்ள புலியைக்கூடக் கண்டுவிடலாம். ஆனால், கைக்கு எட்டும் தூரத்திலிருக்கும் இதைக் காண்பது அரிதானது என்பது போன்றக் கச்சிதமான உருமறை தோற்றத்தில் தென்பட்டது. நாங்கள் கண்களை வேறுபக்கம் செலுத்திவிட்டால் மீண்டும் தேடித்தான் அதைக் கண்டுபிடிக்க முடியும். அந்தளவுக்கு அது துத்திச் செடியினுள் பொருந்தியிருந்தது வியப்பாக இருந்தது.
மிக அழகான பச்சோந்திக் குட்டி தனது பிளவுபட்ட பாத அமைப்பைக்கொண்டு துத்திச்செடியின் சிறு தண்டுப்பகுதியைப் பற்றியவாறு மெள்ள மெள்ள அசைந்து சென்றதைப் பார்த்து லயித்துப் போனோம். அதன் கண்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் திரும்பும் வண்ணம் அமைந்திருப்பது மாபெரும் அழகு. தனது வாலின் நுனியைத் தண்டுப் பகுதியில் சுற்றியவாறு செடிகளினூடே நிதானமாகச் சென்றதைப் பார்த்து மகிழ்ந்தோம்.
இனிமையான அத்தருணத்திலிருந்து மீளமுடியாமல் மீண்டு வந்த எங்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்வான காட்சி. ஆம், வேகமாகப் பறந்து வந்து தரையில் அமர்ந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி.
அது மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்குத்தொடர்ச்சி மலைக்கு வலசை செல்லும் Painted lady (பெயிண்டடு லேடி) என்ற வண்ணத்துப்பூச்சி. கட்டாந்தரையில் அமர்ந்திருந்தாலும் அதைக் கண்டுபிடிப்பது எளிதானதல்ல என்பது போன்ற உருமறை வண்ணங்களைக் கொண்டிருந்தது.
இறுதியாகக் கருவேலம்பூக்கள் நிறைந்த மரமொன்றில் எண்ணற்ற நீலவரியன் (Blue Tiger) வண்ணத்துப்பூச்சிகள் தேனருந்த, குறுக்கும் நெடுக்கும் பறந்துசென்ற வண்ணத்துப்பூச்சிகளான நீல வசீகரனையும்(Blue pansy) மயில் வசீகரனையும் (Peacock pansy) பார்த்தவாறு அன்றைய தேடலை நிறைவுசெய்தோம்
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்