டெல்லி போன்ற நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் ரசாயனம் இல்லாத காய்கறிகளைப் பற்றி மக்களிடையே விழிப்புஉணர்வு பெருகிவிட்டது. இதனால் இயற்கை விவசாயம் மீண்டும் இந்தியாவில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
இளைஞர்கள் விவசாயத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்ப ஆரம்பித்து விட்டனர். அதிலும் ஐ.டி துறை இளைஞர்களின் விவசாய ஆர்வம் மற்ற துறை இளைஞர்களை விட அதிகமாகவே உள்ளது. 1960-ம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் பசுமை புரட்சியின் விளைவால் ரசாயன உரங்கள் இந்தியாவிற்குள் நுழைய ஆரம்பித்தது. அப்போது விளைச்சல் அதிகமாகக் கண்ட விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகமாக நிலத்தில் வீசினர். மூன்று முறைக்குமேல் பயன்படுத்தத் தொடங்கிய ரசாயன உரங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியது.
இதனால் விவசாயத் தற்கொலைகள் தொடங்கி, விவசாயிகள் சந்தித்த துன்பங்கள் ஏராளம். ரசாயன உரத்தால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கத் தொடங்கியது. அதன்பின், நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்றவர்களால் ஓரளவிற்கு இயற்கை விவசாயம் மக்களிடையே பிரபலமாக ஆரம்பித்தது. இப்போது, இந்திய விவசாயத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஹைட்ரோபொனிக்ஸ் முறையும் ஒன்று. மண் இல்லாமல் அதிகமான காய்கறிப் பயிர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை இம்முறை நிரூபித்துள்ளது.
‘ஹைட்ரோஃபோனிக்ஸ் என்பது, மண் பயன்பாடு இல்லாமல் நீர் சார்ந்த, ஊட்டச்சத்துக் கொண்ட விவசாயப் பயிர்களை ஒரு பிளாஸ்டிக் குழாயில் வளர்க்கும் முறையாகும். மண்ணில் வளர்க்கப்படும் முறையை விட ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் உபயோகிக்கும் தண்ணீரின் அளவு குறைவு. சில நேரங்களில் 90 மடங்கு குறைவான தண்ணீரை, ஹைட்ரோஃபொனிக்ஸ் முறையில் வளரும் பயிர்கள் எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் நகர்ப்புற மாடித்தோட்ட ஆர்வலர்கள் இம்முறையைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
உல்லாஸ் சமராட் என்ற இளைஞர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். அவரது தாயாருக்குத் தோட்டத்தில் இருக்கும் தூசு மற்றும் வேளாண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர், தன்னுடைய பண்ணையைச் சுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்ற வழியைத் தேடிக் கொண்டிருந்தார். சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞரான துருவ், இந்தியாவில் தொழில் ஒன்றைத் தொடங்கும் குறிக்கோளுடன் இருந்தார். முன்பிருந்தே உல்லாஸ், துருவ் ஆகிய இருவரும் நண்பர்கள். ஒருமுறை ஹைட்ரோஃபோனிக்ஸ் பற்றி இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர். துருவ் சிங்கப்பூரில் உள்ள ஹைட்ரோஃபோனிக்ஸ் பண்ணைகளைப் பார்வையிட்டுத் தகவல்களை உல்லாஸ்க்குப் பரிமாறுகிறார்.
இருவரும் இணைந்து 200 ஹைரோஃபோனிக்ஸ் பண்ணைகளுக்கு மேல் சென்று பார்வையிடுகின்றனர். இறுதியில் ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில்தான் விவசாயத்தைச் செய்வது எனத் தீர்மானிக்கிறார்கள். அதன்படி தனது பண்ணையை மாற்றும் முயற்சியில் இறங்கத் தொடங்குகிறார், உல்லாஸ். இவர்கள் இதனைத் தொழிலாக நகரத்தில் தொடங்க நினைத்தபோது தீபக் குக்ரேஜா மற்றும் தேவன்சு ஷிவநானி ஆகிய இரு நண்பர்களும் இவர்களுடன் இணைகின்றனர். மொத்தம் நால்வராகச் சேர்ந்து ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்கின்றனர்.
இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அவர்கள் “நகரத்துக்குள் மாடியில் காய்கறித் தோட்டம் அமைப்பது சுலபமான ஒன்று. அதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருந்தன. முதலில் தில்லியில் உள்ள சாய்னிக் பண்ணையில் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்ப்பதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். 500 சதுர மீட்டர் நீளமுள்ள நிலத்தில் 8 டன் ஸ்ட்ராபெர்ரியை அறுவடை செய்தோம்.
ஸ்ட்ராபெர்ரியில் அதிக மகசூல் கிடைத்ததற்குச் செங்குத்தாக அமைந்த திறந்த வெளித் தோட்டம் ஒரு முக்கியக் காரணம். அதனால்தான் நகரின் மத்தியில் நாங்கள் இப்போது ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையைப் பின்பற்றி விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது ஒவ்வொரு விஷயத்துக்கும் அதிகமாகக் கஷ்டப்பட்டோம். டெல்லியில் இதை ஆரம்பிக்க லஞ்சம் கொடுக்க மறுத்தோம். அப்போது டெல்லி மாநகராட்சி எங்கள் தொழிலை அழிக்கும் வேலையில் ஈடுபட்டது. அதைக் கண்டித்து நாங்கள் டெல்லி அரசாங்கத்திடம் முறையிட்டோம். அப்போது அவர்கள் எங்களுக்கு வைத்த பெயர் ‘உணவு பயங்கரவாதிகள்’. அதன் பின்னர் சிறிய வியாபாரிகள் எங்கள் தொழிலுக்குப் பணம் கொடுத்து உதவினர். இந்தத் துறையில் பணம் பெரும் பிரச்னையாக உள்ளது. இப்போது விவசாயம் நல்லபடியாகச் சென்று கொண்டிருக்கிறது” என்கிறார்கள்.
2014-ம் ஆண்டுத் தொடங்கிய இவர்களது விவசாயப் பயணம் ”நகர்ப்புறத்திற்குள் விவசாயம் செய்ய வேண்டும், அந்த உணவை மக்களுக்கு நஞ்சில்லாததாகக் கொடுக்க வேண்டும்” என்ற குறிக்கோளுடன் தொடர்கிறது. அந்நிறுவனத்துக்குப் பெயர் ட்ரிட்டன் (Triton) ஃபுட்ஒர்க்ஸ்.
இந்த இளைஞர்களின் நிறுவனத்தை பற்றி இங்கே அறியலாம்
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்