மண் வள அட்டை

” மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து, மண்வள அட்டை பெற்று, அதிகாரிகள் ஆலோசனைப்படி உரமிட்டால் அதிக மகசூல் பெறலாம்’ என, எலச்சிபாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் லோகநாதபிரகாசம் தெரிவித்துள்ளார்.

  • விவசாயிகளின் நலன் மண்ணின் வளத்தை பொறுத்தே அமைகிறது. பயிர் சாகுபடி செய்வதால் ஏற்படும் சத்து குறைபாடுகளை சரியான உர நிர்வாகத்தின் மூலம் சரி செய்ய வேண்டியது அவசியம்.
  • சரியான உர நிர்வாகத்துக்கு முதலில் மண் பரிசோதனையே அடிப்படையாகும்.
  • சத்துக்களின் அளவு வேறுபடுவதாலும், சத்துகளின் தேவை மாறுபடுவதாலும் மண் பரிசோதனையின் மூலமே பயிருக்கு ஏற்ப சரியான உர சிபாரிசு வழங்க முடியும்.
  • அதன் மூலம் தேவையான அளவு மட்டுமே உரமிடுவதால் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெறவதோடு அதிகப்படியான உரச்செலவையும் குறைக்கலாம்.
  • மண்ணின் தன்மைகளை அறியவும், களர், உவர் மற்றும் அமில நிலங்களை சீர்திருத்தவும் பயிருக்கு கிடைக்க வேண்டிய சத்துகளின் அளவை அறிந்து அதற்கேற்ப உரமிடவும் மண் பரிசோதனை மிகவும் அவசியமாகிறது.
  • ஆண்டுக்கு ஒரு முறை மண் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும்.
  • ஒரு மாதிரி தழை, மணி, சாம்பல்சத்து ஆய்வு செய்வதற்கு ஐந்து ரூபாய், நுண்ணூட்டசத்து ஆய்வு செய்ய ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும்.
  • பயிர் அறுவடை முடிந்த பின் அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்னும் உரமிட்ட மூன்று மாதத்துக்கு பிறகும் மண் மாதிரி எடுக்க வேண்டும்.
  • நெல், சோளம், பயறுவகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய அந்நிலத்தில் 15 செ.மீ., ஆழத்திலும், கரும்பு, வாழை, போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய 30 செ.மீ., ஆழத்திலும், பழந்தோட்ட பயிர்களாக இருந்தால் 3 அடி ஆழத்திலும் மேல் மண்ணை தவிர்த்து விடமால் “வி’ வடிவில் வெட்டி சரிவு மண்ணை அப்புறப்படுத்திய பின் “வி’ வடிவில் மேல் இருந்து மண்ணை சுரண்டி எடுத்தல் வேண்டும்.
  • ஒரு வயலில் சுமார் 10 முதல் 12 இடங்களில் எடுத்து நன்கு கலக்கி குவாட்டரிங் முறையில் அரை கிலோ வரும்படி ஒரு துணிப்பையில் எடுத்து கொள்ள வேண்டும்.
  • சேகரித்த மண் மாதிரிகளை தனித்தனியாக கட்டி சுத்தமான துணிப்பைகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ போட்டு உரிய அடையாளமிட்டு, விவசாயின் பெயர் மற்றும் முகவரி, நிலத்தின் பெயர்/சர்வே எண்/ அடையாளம், வட்டாரத்தின் பெயர், உர சிபாரிசு கோரப்படும் பயிர், பாசன நீரின் தன்மை, முன் சாகுபடி செய்த பயிர் போன்ற விபரங்களுடன் மண்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும்.
  • விவசாயிகள் சரியான தருணத்தில் மண் மாதிரி எடுத்து அனுப்பி மண்வள அட்டை பெற்று, அதன் பரிந்துரைப்படி உரமிட்டு அதிக மகசூல் பெறலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *