மலர் சாகுபடியை பெருக்கும் வழிமுறைகள்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, பூமியின் வெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகி, விளைச்சலுக்கான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, மாவுப்பூச்சி அசுவிணி தத்துப்பூச்சிகள் செம்பான், சிலந்தி வகை பூச்சிகளின் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகமாகி, பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டு, விவசாயிகள் பெருமளவில் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர்.

மலர் சாகுபடியை தாக்கும் பூச்சிகள்:

தமிழகத்தில் குண்டு மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, சாமந்தி, கேந்தி, நிலச்சம்பங்கிகோழிக்கொண்டை, கனகாம்பரம், ரோஜா போன்ற வணிக மலர்களை சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த வகை செடிகளை குறிப்பாக, மொட்டுத் துளைப்பான், வெள்ளை ஈக்கள், மாவுப் பூச்சிகள் அசுவிணி, தத்துப்பூச்சிகள், செம்பான் சிலந்திவகைகள் போன்ற பூச்சி இனங்கள் தாக்குகின்றன. மேலும், சாம்பல் நோய், இலைக்கருகல் நோய், வாடல் நோய், இலைப்புள்ளி நோய் போன்ற பூஞ்சான் மற்றும் பாக்டீரியாக்கள் தாக்கி வருகின்றன.

ரசாயனப் பூச்சி மருந்தின் விளைவு:

விவசாயிகள் வேளாண் விஞ்ஞானிகளின் ஆலோசனை இல்லாமல் கடைகளுக்குச் சென்று தேவையில்லாத, ரசாயனம் ஊடுருவிப் பாயும் மற்றும் தொடு நஞ்சு வகை பூச்சி நோய்க்கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இதனால், ஒரு சில பூச்சி நோய்களுக்கு எதிர்ப்புத் தன்மை ஏற்பட்டு, அவற்றின் இனப்பெருக்கம் அளவுக்ககு அதிகமாகி, பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, செம்பான் சிலந்தி, மாவுப் பூச்சிகள் மற்றும் இலைக்கருகல் நோய்களின் தாக்குதல் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் மிகவும் அதிகளவில்,இந்த மலர் செடிகளில் தோன்றி விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

இயற்கை முறை இனக்கவர்ச்சி:

இதனால், மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள், முடிந்தவரை முன் கூட்டியே இயற்கை மற்றும் அங்கக வேளாண் முறைகளை கடைப்பிடித்தல் மிக அவசியமாகும். மலர் வகைகளை பயிரிடும்போது, வரப்புகளைச் சுற்றி, கேந்தி, சோளம் போன்ற செடிகளை இரு வரிசைகளாக அவசியம் பயிரிட வேண்டும்.

உரிய இனக் கவர்ச்சி பொறிகளை அதிகளவில் வைத்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். அதாவது, ஏக்கருக்கு 20 வீதம் நடவு செய்வதால், அதிகளவில் ஆண் அந்துப்பூச்சிகளை இதன் மூலம் கவர்ந்து, மொட்டு துளைப்பான், இலை பின்னும் புழுக்கள், புரோடினியா, ஸ்போடாப்டிரா போன்ற பூச்சியினங்களை அழிக்கலாம்.

சூரிய ஒளி அல்லதுபேட்டரி மின்சாரத்தில் இயங்கும் எல்.இ.டி. மின் விளக்குகளுடன் இயங்கும் விளக்குப் பொறிகளை, 2 ஏக்கருக்கு ஒன்று வீதம் ( இரவு 7 முதல் 7.30 வரை அரை மணி நேரம் மட்டும்) வைத்து, மேற்கூறிய பூச்சிகளின் தாய் அந்துப்பூச்சிகளையும், பயிர்களுக்கு அதிகளவில் தீங்கிழைக்கும் வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகள் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் அழிக்கலாம்.

இயற்கை பூச்சிக்கொல்லி:

பூச்செடிகளுக்கான நாற்றுகள், செடிகள் நட்டு 15 நாள்கள் கழித்து, பூச்சி நோய்த் தாக்குதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 5 சதவீத வேப்பிலைக் கரைசலை தெளிக்க வேண்டும். அதன் பிறகு 7 நாள்கள் கழித்து, 5 சதவீத வேப்பங்கொட்டைக் கரைசல், பிறகு 7 நாள்கள் கழித்து 3 சதவீத அசாடிராக்டின் எனும் வேம்பு கலந்த தாவரப் பூச்சிக் கொல்லியை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

பூச்செடிகளுக்கு அடியுரமாக 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கும், ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போபேக்டீரியா,ஒரு கிலோ பொட்டாஷ் சொலு பிளேசர், ஒரு கிலோ சூடாமோனஸ் புளுரோசன்ஸ், ஒரு கிலோ டிரைக்டோடெர்மாவிடி, ஒரு கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் போன்ற நுண்ணுயிர்களை தொழு உரத்துடன், ஊட்டமேற்றி இடுவதால், பயிர்கள் நன்கு செழித்து வளர்வதுடன், பூச்சிகள், நோய்த் தாக்குதலை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும்.

வறட்சியைத் தாங்கும் வழிமுறைகள்:

வேம்என்ற நுண்ணுயிரியை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் தொழு உரத்துடன் கலந்து செடிகள் நடும் போதும், 30 நாள்கள் கழித்து ஒருமுறையும், பிறகு இதே இடைவெளியில் இரு முறையும் இடுவதால், கோடை கால வறட்சியையும், குண்டுமல்லி, முல்லை, கனகாம்பரம், நிலச்சம்பங்கி, ரோஜா வகை மலர்ப் பயிர்கள் தாங்கி அதிக மகசூலைப் பெறலாம்.

இதனால், மலர்ச் செடி சாகுபடி விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரையின்றி அளவுக்கு அதிகமான ரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார் முன்னாள் தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *