மலைப்பகுதியில் இயற்கை வழி மூலிகை சாகுபடி

பொதுவாக, ‘பசுமைக் குடில் விவசாயம், மலைப்பகுதி விவசாயம் போன்றவற்றுக்கு இயற்கை விவசாயம் சரிப்பட்டு வராது’ என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இக்கருத்தைத் தகர்க்கும்விதமாக, நீலகிரி மலைப்பகுதியில் முழு இயற்கை முறையில் மூலிகைகள் மற்றும் நறுமணப்பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள், சகோதரர்களான பிரவீண்குமார், சிவராமகிருஷ்ணன் ஆகியோர்.

நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இந்தச் சகோதரர்கள். அக்கிராமத்தின் மலைச்சரிவில் அமைந்திருக்கிறது, இவர்களது தோட்டம். நண்பகல் வேளையன்றில் தேடிச் சென்றபோது… தோட்டத்தில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர் சகோதரர்கள் இருவரும்.

”எங்க குடும்பத்துக்கு வாழ்வாதாரமே விவசாயம்தான். நாங்க சின்னக் குழந்தைங்களா இருக்கிறப்ப, எங்க தாத்தா நந்தி கவுடர் பெள்ளத்தி கிராமத்து மலைச்சரிவுல இருந்த ரெண்டரை ஏக்கர் நிலத்துல தேயிலை விவசாயம் பண்ணிட்டிருந்தார். அவர் அப்பவே இயற்கை விவசாயம்தான். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா அந்த நிலத்தை, கவனிக்க முடியாமப் போயிடுச்சு. நான் பயோ-கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு சொந்தமா பிசினஸ்ல இறங்கினேன். ஆனா, எதுவும் சரிப்பட்டு வரல. அதனால, ‘விவசாயம் பாக்கலாம்’னு வந்துட்டேன். பரம்பரைத் தொழில்ங்கிறதைவிட எனக்கு விவசாயம்தான் ஆத்மார்த்தமான தொழிலா தெரிஞ்சுச்சு.

 

பாடம் புகட்டிய காட்டு விலங்குகள் !

தொழுவுரம், பஞ்சகவ்யானு முழு இயற்கை விவசாயம் செய்ததால… நல்ல விளைச்சல் கிடைச்சுது. ஆனா, எங்க நிலம் ரிசர்வ் ஃபாரஸ்டுக்குப் பக்கத்துல இருந்ததால… மான், காட்டுமாடு, கரடினு வரிசையா விலங்குகள் வந்து தோட்டத்தை துவம்சம் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. அதையெல்லாம் மீறி, கிடைக்கறதைத்தான் வித்துக்கிட்டிருந்தோம். ஒரு கட்டத்துல ஒண்ணுமே மிஞ்சாத சூழ்நிலை வந்து, வெறுத்துப் போயி… காய்கறி சாகுபடியையும் நிறுத்தியாச்சு.

ஆனாலும், விவசாயத்தை விட்டு வெளிய போகக் கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தேன். ‘விலங்குகளால பிரச்னை வரக்கூடாது, அதேசமயத்துல வருமானமும் வர்ற மாதிரியான பயிரா இருக்கணும்’னு தேட ஆரம்பிச்சேன். அப்போதான், ரோஸ்மேரி, தைம், ஸ்வீட் பேசில்… மாதிரியான நறுமண மூலிகைப் பயிர்கள் பத்தித் தெரிய வந்துச்சு. இது எல்லாமே, சமையல் பொருட்களாகவும், நறுமணப் பொருட்களாகவும் பயன்படுறதால… உள் நாட்டுலயும், வெளி நாட்டுலயும் நல்ல வரவேற்பு இருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன். அதையெல்லாம் இயற்கையில சாகுபடி பண்ண முடியும்கறதையும் உறுதிப்படுத்திக்கிட்டேன்.

இணைந்த சகோதரர்கள் !

அந்த சமயத்துல ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சுட்டு பெங்களூருல வேலை பார்த்திட்டிருந்த தம்பி சிவராமகிருஷ்ணனும் வேலையை விட்டுட்டு எங்கூட விவசாயத்துக்கே வந்துட்டான். ரெண்டு பேரும் சேர்ந்து, போன வருஷம் மூலிகை வளர்ப்புல இறங்கினோம்.

தாத்தா வெச்சுருந்த நிலம், பக்கத்துல வாங்கிப் போட்டிருந்த நிலம்னு மொத்தம் எட்டு ஏக்கர் கையில இருந்துச்சு” என்ற அண்ணன் பிரவீண்குமாரைத் தொடர்ந்தார், தம்பி சிவராமகிருஷ்ணன்.

தானாகப் பாயும் தண்ணீர்

”மலைச்சரிவு நிலத்தை டிராக்டர் மாதிரியான இயந்திரங்களை வெச்சு உழவு செய்றதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். முள்கம்பி மாதிரியான உபகரணங்கள் மூலமா ஆட்கள்தான் நிலத்தைக் கீறி விடணும். அப்படித்தான் இந்த நிலத்தையும் தயார் செஞ்சு… நறுமணப் பயிர்களை விதைச்சோம். இங்க தண்ணிப் பிரச்னையும் கிடையாது. அதுக்காக மெனக்கெட வேண்டிய அவசியமும் கிடையாது.

மலையில அங்கங்க ஊத்துகள் இருக்கும். எங்க நிலத்துக்கு மேல சின்டெக்ஸ் தொட்டியை வெச்சு ஊத்துத் தண்ணியை டியூப் மூலமா கொண்டு வந்து நிரப்பிடுவோம். தொட்டியில இருந்து பள்ளத்துக்குப் பாயுறப்போ… தண்ணியோட வேகம் அதிகமா இருக்கும். ஸ்பிரிங்க்ளர் வெச்சு தெளிக்கறதுக்கும் எங்களுக்கு கரன்ட் தேவையில்லை. புவி ஈர்ப்பு விசை முலமாவே தண்ணியோட பிரஷர்ல தானாவே பாய்ச்சிடுவோம்.

விற்பனையில் பிரச்னையில்லை !

முழு இயற்கை முறையிலதான் சாகுபடி செய்றோம். போதுமான அளவுக்கு வருமானம் கிடைச்சிடுது. ஹோட்டல்கள்ல சிக்கன், மட்டன் மாதிரியான இறைச்சிகளை சீக்கிரமா வேக வெக்கிறதுக்காக ரோஸ்மேரி, தைம் மாதிரியான இலைகளைப் பயன்படுத்துவாங்க.  இதைப் பயன்படுத்தும்போது கறிக்கு நல்ல வாசனையும், சுவையும் கிடைக்கும். அதில்லாம ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள்ல இந்த இலைகளில் தேநீர் மாதிரியான பானம் தயாரிக்கவும் பயன்படுத்துறாங்க. ‘இதைக் குடிக்கிறப்போ மன அழுத்தம் விலகுது’னும் சொல்றாங்க.

சமையலுக்கு மட்டும் இல்லாம… அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கவும் இந்த மாதிரியான நறுமண மூலிகை இலைகளைப் பயன்படுத்துறாங்க. அதனால இந்தப் பயிர்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்குது. விற்பனையைப் பொறுத்தவரை எங்களுக்குப்  பிரச்னையே கிடையாது.  ‘ஊட்டி ஹெர்ப்ஸ்’னு நாங்க ஒரு கம்பெனி ஆரம்பிச்சுருக்கோம். அது மூலமாவே நாங்க வித்துடுறோம்.

ஆனா, தேவையான அளவுக்கு உற்பத்தி இல்லைன்றதுதான் உண்மை. மலைகள்ல இருக்குற இடங்கள்ல இந்த மாதிரியான பயிர்களை விளைவிச்சா… நல்ல லாபம் கிடைக்குங்கிறது உறுதி. இப்போ, இந்தப் பயிர்களை சமவெளிப் பகுதிகளிலும் சோதனை அடிப்படையில விளைவிச்சுப் பார்த்துக்கிட்டிருக்காங்க. அது வெற்றி அடைஞ்சா, எல்லா விவசாயிகளும் பயனடைய முடியும்’ என்று சந்தோஷமாகச் சொன்னார், சிவராமகிருஷ்ணன்.

ஒரு கிலோ 30 ரூபாய் !

நிறைவாக லாபக் கணக்கு பேசிய பிரவீண்குமார், ”நாங்க, 2 ஏக்கர்ல ரோஸ்மேரி;

4 ஏக்கர்ல தைம்; 1 ஏக்கர்ல ஒரிகனா; அரை ஏக்கர்ல சேஜ், அரை ஏக்கர்ல ஸ்வீட் பேசில்னு மொத்தம் எட்டு ஏக்கர்ல இந்த நறுமண மூலிகைப் பயிர்களைப் போட்டிருக்கோம். இதுபோக… வரப்பு ஓரங்கள்ல ‘லிப்பியா’ன்ற செடியையும், சேஜ் பயிருக்குள்ள ஊடுபயிரா மருகு செடியையும் நடவு செஞ்சுருக்கோம்.

இந்த நறுமணப் பயிர்களைப் பொறுத்தவரை, இலையை மட்டும்தான் அறுவடை செய்யணும். நாங்க பயிரிட்டிருக்கற செடிகளோட இலைகளை கிலோ 30 ரூபாய்னு தோட்டத்துல வந்து வாங்கிக்கறாங்க. வெளி மார்க்கெட்ல இந்த இலைகள் எல்லாம் கிலோ 40 ரூபாய்ல இருந்து 50 ரூபாய் வரைக்கும் விலை போயிக்கிட்டிருக்கு.

ஆண்டுக்கு 100 டன் மகசூல் !

முதல் வருஷத்துல எல்லா பயிர்களும் சேர்த்து… 32 டன் மகசூல் கிடைச்சுது. அதை கிலோ 30 ரூபாய்ங்கிற கணக்கு வித்ததுல… 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது. அதுல உழவு, நாத்து, இடுபொருட்கள் எல்லாத்துக்குமா சேர்த்து 6 லட்ச ரூபாய் வரைக்கும் செலவாச்சு. அதுபோக 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் லாபம். இந்த வருஷம் பயிர்களெல்லாம் நல்ல செழிப்பா வளர்ந்திருக்கு.

இனி, ஒவ்வொரு வருஷமும் 100 டன் இலைகளுக்குக் குறையாம மகசூல் கிடைக்கும்னு எதிர்பாக்குறோம். அந்த வகையில பார்த்தா… வருஷத்துக்கு 30 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதுல இடுபொருட்கள், பராமரிப்புச் செலவு போக எப்படியும் எட்டு ஏக்கர்லயும் சேர்த்து வருஷத்துக்கு 25 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்” என்று நம்பிக்கையோடு சொன்னார்!

தொடர்புக்கு,
பிரவீண்குமார்,
செல்போன்: 09442325509

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *