மருத்துவக் குணம் வாய்ந்த சீத்தாப் பழம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள காப்புக்காடுகளிலிருந்து தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பருவ மழை பொய்த்த போதிலும் ஆண்டுக்கு 150 டன் ஏற்றுமதி செய்யப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
மழை தேவையில்லை
இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், அசாம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் சீத்தாப் பழம் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது. சீத்தாப் பழத்தில் 10 வகைகள் உண்டு. 100 கிராம் எடையுள்ள ஒரு சீத்தாப் பழத்தில் நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீஷியம், தாமிரம், குளோரின், வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் அடங்கியுள்ளன. இதய நோயையும் காச நோயையும் குணப்படுத்துவதற்குச் சீத்தாப் பழம் உதவும் என்று கருதப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சீத்தாப் பழம் வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட ஐந்து கிராமங்களில் மலையை ஒட்டியுள்ள காப்புக்காடுகளில் அதிகமாக விளைகிறது. நாட்றம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம், பச்சூர், லட்சுமிபுரம் ஆகிய மூன்று கிராமங்களிலிருந்து தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்குச் சீத்தாப் பழம் அனுப்பப்படுகிறது.
சீத்தாப் பழ ஆர்வம்
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பதாலும், பருவமழை கைகொடுக்காவிட்டாலும் ஆண்டுதோறும் 80 முதல் 100 டன்வரை சீத்தாப் பழம் விளைவதால், நாட்றம்பள்ளி விவசாயிகள் சீத்தாப் பழச் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து நாட்றம்பள்ளி வெலக்கல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்து கூறியதாவது:
“பொதுவாக வேலூர் மாவட்டத்தில் மழையளவு எப்போதுமே குறைவாகக் காணப்படும். இதனால் வறட்சியின் பிடியில் சிக்கும் விவசாயிகள் தண்ணீர் அதிகமாகத் தேவைப்படும் பயிர் வகைகளைச் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த டிசம்பர் மாதம் வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் மழையளவு அதிகமாகக் காணப்பட்டாலும், நாட்றம்பள்ளி தாலுகாவில் மட்டும் மழையளவு குறைவாகவே காணப்பட்டது.
இது போன்ற காலகட்டத்தில் விவசாயிகளைக் காப்பாற்றுவது சீத்தாப் பழ விளைச்சல் மட்டுமே. நாட்றம்பள்ளி தாலுகாவில் பச்சூர், பையனப்பள்ளி, வெலக்கல்நத்தம், வீரானூர், நந்திபெண்டா, லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சீத்தாப் பழம் சாகுபடியை அதிகமாக நம்பியுள்ளனர்.
நூறு டன் விளைச்சல்
நாட்றம்பள்ளியை ஒட்டியுள்ள மலைசார்ந்த இடங்களில் சீத்தாப் பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடியில் பூப்பூத்து, ஆவணியில் காய் காய்த்து, புரட்டாசி மாதத்தில் பழம் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது காய்கள் காய்த்து, பழுக்கும் தறுவாயில் உள்ளன. கடந்த ஆண்டு 130 டன்வரை வெளி மாநிலங்களுக்கு அனுப்பினோம். இந்தப் பழ வகையில் மருத்துவக் குணம் அதிகமாக உள்ளதால் கர்நாடகம், ஆந்திரம், கேரளம், சென்னை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகமாக அனுப்பிவருகிறோம். இந்த ஆண்டு 150 டன்வரை விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மழையளவு அதிகமாக இருந்திருந்தால், 200 டன்னுக்கு மேல் விளைச்சல் கிடைத்திருக்கும். வேலூர் மாவட்டத்தில் மழையளவு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. தவிர, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளைக் கட்டிவருவதால், நீர்வரத்து சுத்தமாக இல்லாமல் போகும் சூழ்நிலையும் உருவாகிவிட்டது.
தண்ணீர் தாராளமாகக் கிடைத்தால் சீத்தாப் பழம் போன்ற பழவகைகளை அதிக அளவில் சாகுபடி செய்து, அதிக அளவில் உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியும்” என்கிறார் முத்து.
ஆண்டுக்கு ரூ. 15,000
இது குறித்து பச்சூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
‘வெப்ப மண்டலத்தில்கூட இந்த மரம் நன்றாக வளரும் என்பதால், விவசாயிகளுக்குப் பெரிய செலவு இருக்காது. இம்மரங்கள், கடல் மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் மீட்டர் உயரம்வரை உள்ள பகுதிகளில் வளரும் தன்மை கொண்டவை. நல்ல தரமான மரமாக இருந்தால், ஒரு மரத்தில் ஆண்டுக்கு 80 முதல் 100 காய்கள்வரை காய்க்கும். ஒரு பழம் ரூ. 2 வரை விற்பனை செய்கிறோம். சில நேரங்களில் ஒரு ரூபாய்க்கும் கூடப் பழம் விற்பனையாகும். 10 மரங்களைப் பராமரிக்கும் விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.15 முதல் 20 ஆயிரம் ரூபாய்வரை லாபம் கிடைக்கும்.
பராமரிப்புச் செலவு குறைவாக இருப்பதாலும் லாபம் அதிகமாக இருப்பதாலும் நாட்றம்பள்ளி தாலுகாவில் சீத்தாப்பழ மரத்தை வளர்க்க விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் தற்போது ஆர்வம் காட்டிவருகின்றனர்.’
விவசாயி முத்து தொடர்புக்கு: 09791725081
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்