மருத்துவ குணமுள்ளது மிளகு உணவு, மருந்து தயாரிப்பு, உணவு பதப்படுத்தலில் அதிகம் பயன்படுகிறது. ஐரோப்பியர்கள் இதுபோன்ற வாசனை திரவியங்களை வியாபாரம் செய்யவே இந்தியா வந்தனர்.
கரு மிளகு, பச்சை, வெள்ளை மிளகு எ3 வகை உண்டு. சில மாநிலங்களில் மட்டுமே விளைவித்த மிளகு, தமிழ்நாட்டில் தண்ணீர் வசதியுள்ள தோப்பு, கீரை தோட்டம், அகத்தி கீரை போடும் இடங்களில் ஊடுபயிராக போட தொடங்கி விட்டனர். இதற்கு காரணம் இன்றைக்கு ஒரு கிலோ மிளகு 1,000 ரூபாய்க்கு விற்பது தான்.
முன்பு தேக்கு மரம், சந்தனமரம், செம்மரம் தமிழகத்தில் வளராது என்றனர். இன்று இவை சிறப்பாய் வளருகின்றன. அப்படி தான் மிளகும் கேரளாவில் மட்டும் வளரும் என்றனர். இன்று தமிழகம் முழுவதும் பயிரிட துவங்கி விட்டனர். முதலில் இந்தியா மிளகு ஏற்றுமதியில் முன்னிலை வகித்தது.
இன்றைக்கு இந்தோனேசியா, பிரேசில், இலங்கை முதலிடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமானில் விளைகிறது. மிளகு ஈரப்பதமுள்ள பிரதேசங்களில் வளரும். 10 – 40 டிகிரி வெப்பத்தில் சிறந்த மகசூல் தரும். 125 – 250 செ.மீ., வரை மழைக்கு ஏற்ற பயிர். பூ பூக்கும் நேரத்தில் மழை பெய்தால் அதிக மகரந்த சேர்க்கை நடக்கும்.
கேரளாவில் மே, ஜூனில் பூக்கள் பூக்கும் போது மழை பெய்வதால் அங்கு விளைச்சல் அதிகரித்திருக்கும். இப்பருவத்தில் மழையில்லாவிட்டால் தினமும் நீர் தெளிக்க வேண்டும். களிமண் பாங்கான மண்ணில் அதிகம் விளையும்.
தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் மாவட்டங்களில் தென்னை, பாக்கு, மாங்காய், தேக்கு, தேயிலை, கீரை, கொடிக்கால், மரப்பயிர்கள் நிலங்களில் ஊடுபயிராக மிளகு பயிரிடுகின்றனர்.
பாக்கு தோப்பில் நிழலை விரும்பும் கர்முண்டா வகை மிளகு பயிரிடலாம். முருங்கை, பூவாகை மரங்களை நட்டு பின் ஏப்ரல், மே மாதத்தில் மிளகை மூங்கில் கொம்புகளை வைத்து ஜூலை, செப்டம்பரில் பயிரிடலாம்.
சில இடங்களில் ஊடுபயிராக போடாமல், முக்கிய பயிராக சாகுபடி செய்கின்றனர். பனையூர், கிரிமுண்டா, நாடன், பஞ்சமி, ஐ.ஐ.எஸ்.ஆர்., என பல ரகம் உண்டு. தமிழகத்தில் பனையூர் 5 வது ரகம் அதிகம் பயிரிடுகின்றனர். இது நிழலை தாங்கி வளரும். பாக்கு தோப்புகளுக்கு ஏற்ற ரகம்.
கன்னியாகுமரி, நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு பசுமை பகுதிகள், கீழ்பவானி மலையை சுற்றியுள்ள பகுதிகள், நல்ல மழை பெய்யும் மாவட்டங்களிலும், வெற்றிலை கொடிக்கால், அகத்திக்கீரைகள் வளர்க்கும் பகுதிகள், சேலம் ஆத்துாரில் பாக்கு தோப்பில் பயிரிடுகின்றனர்.
நல்ல மழை பெய்யும் பகுதியில் ஜூன் – டிச., வரை மானாவரியாக பயிரிடுகின்றனர். மிளகு பயிர் கொடியின் துண்டுகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் கொடியை 2 – 3 கணு துண்டுகளாக வெட்டி பைகளில் வளர்த்து, வேர் பிடித்ததும் நடலாம்.
மத்திய அரசின் ‘ஸ்பைசஸ் போர்டு’ மூலம் நாற்றுகள் விற்பனை செய்கின்றனர். ஏக்கருக்கு 5 டன் கிடைக்க தொழு உரம், 2 டன் இயற்கை உரம், 500 கிலோ தேங்காய் நாரை உரமாக இடலாம். மண் பரிசோதனை செய்து, வேளாண்மை அதிகாரிகள் ஆலோசனைப்படி நடவு செய்து லாபம் பெறலாம்.
– எம்.ஞானசேகர்
விவசாய ஆலோசகர் சென்னை.
தொடர்புக்கு : 9566253929 .
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்