விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில், 3 லட்சம் முந்திரி ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது.
மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம் பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டது.
கடந்த 2011 டிசம்பர் 30ம் தேதி வீசிய “தானே’ புயலில் ஒரு கோடிக்கும் அதிகமான முந்திரி மரங்கள் வேருடன் சாய்ந்தன.
அதைத் தொடர்ந்து “தானே’ புயல் மறுவாழ்வு திட்டத்தில், புயலால் பாதித்த விவசாயிகளுக்கு விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம், வனத்தோட்டக் கழகம், தோட்டக்கலைத் துறை, நெய்வேலி தோட்டக்கலைத் துறை மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சரிகள் மூலம் 25 லட்சம் முந்திரி கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, வழங்கப்பட்டது.
தற்போது, “தானே’ புயல் மறுவாழ்வுத் திட்டத்தில் குழாய் கிணறு அமைத்து, சொட்டுநீர் பாசனம் மூலம் முந்திரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் 3 லட்சம் முந்திரி ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் மணிமொழி கூறுகையில், “புயல் பாதித்த விவசாயிகளுக்கு “தானே’ மறுவாழ்வுத் திட்டத்தில் குழாய் கிணறு அமைக்க தனி நபருக்கு (15 ஏக்கர் நிலம்) 50 சதவீத மானியமாக 3.8 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
அதன் மூலம் பாதித்த முந்திரி மரங்களை முழுமையாக அகற்றிவிட்டு வி.ஆர்.ஐ., -3 ரக ஒட்டுச் செடிகள் நட்டு, சொட்டுநீர் பாசனம் மூலம் பராமரிக்க வேண்டும்.
முந்திரி ஒட்டுச் செடிகள், நடவு கூலி, பராமரிப்பு செலவுக்கு மானியம்; சொட்டு நீர் பாசனத்திற்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கு “தானே’ புயல் மறுவாழ்வுத் திட்டம் மற்றும் தேசிய தோட்டக் கலை இயக்கம் சார்பில் விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 3 லட்சம் வி.ஆர்.ஐ., -3 ரக முந்திரி ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் ஆகஸ்டு மாத இறுதியிலிருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்’ என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்