ரப்பர் மரங்களால் குறையும் நிலத்தடி நீர்மட்டம்

குமரி மாவட்டத்தில் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் தோட்டப் பயிர்கள் சாகுபடி அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக நிலத்தடி நீர் ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

குமரி மாவட்டத்தில் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் படிப்படியாக மாற்றம் செய்யப்பட்டு அவற்றில் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது. பல பகுதிகளில் வீட்டு மனைகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

இம் மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு வட்டங்களில் முன்காலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்கள், வாழை, தென்னைக்கு மாற்றப்பட்டு தற்போது ரப்பர் தோட்டங்களாக மாறியுள்ளன. ரப்பர் தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நிற்க வேண்டிய அவசியம் இல்லையென்பதால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து தாழ்ந்து வருகிறது.

இதுகுறித்து முன்னோடி நிலத்தடி நீர் ஆய்வாளர் பி. ரவிசந்திரன் கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து தாழ்ந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்தது 300 அடிக்கு அமைத்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

வயல் பகுதிகளில் 20 அடி ஆழத்தில் கிணறு அமைத்தால் தண்ணீர் கிடைத்து வந்த நிலையில், தற்போது குறைந்தது 50 அடி ஆழத்தில் கிணறு அமைக்க வேண்டியுள்ளது. இதனால் தண்ணீர் இறைப்பதற்கு கூடுதல் மின்சார செலவு ஏற்படுகிறது. ரப்பர் போன்ற தோட்டப் பயிர்கள் மலைப் பகுதிகளில் மட்டுமே நடப்பட வேண்டும். இல்லையேல் குடிநீருக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *