லாபம் தரும் தேனீ வளர்ப்பு

மழைப்பொழிவு குறைந்து வறட்சியால் விவசாயம் செய்ய முடியாமல் நஷ்டத்தைச் சந்தித்து வரும் விவசாயிகளிடையே, மாற்றி யோசித்து தண்ணீர்த் தேவையின்றி தேனீ வளர்ப்பில் மாதம் ரூ. 50,000-க்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறார் பொள்ளாச்சி விவசாயி விவேக்.

வறட்சி, நோய்த் தாக்குதல், விளைபொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயத்தைக் கைவிட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடன் தொல்லையால் சில விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தற்போதைய விவசாயத்தின் நிலை இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் சில விவசாயிகள் மட்டும் விவசாயத்துடன், விவசாயம் சார்ந்த மாற்றுத் தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.


இத்தகைய சூழலில், பொள்ளாச்சியை அடுத்த பெரியபோதுவைச் சேர்ந்த விவசாயி விவேக், தேனீ வளர்ப்பின் மூலமாக மாதம் ரூ. 50,000-க்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறார்.

ஆனைமலையைச் சேர்ந்த எம்.வி.சுப்ரமணியம் என்ற விவசாயி வாயிலாக கடந்த 2015- இல் தேனீ வளர்ப்பு குறித்து விவேக் அறிந்துகொண்டார். அவரிடமிருந்து 7 பெட்டிகளுடன் தேனீயை வாங்கி வளர்க்கத் துவங்கினார். தேனீ வளர்ப்பில் அனுபவம் இல்லாவிட்டாலும் முன்னோடி விவசாயியான எம்.வி.சுப்ரமணியத்தின் ஆலோசனைப்படி செயல்பட ஆரம்பித்தார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அங்கும் தேனீ வளர்ப்புக்குப் பயிற்சி பெற்றார். அந்தமான்- நிகோபார், புதுதில்லி ஆகிய இடங்களிலும் தேனீ வளர்ப்பு குறித்துத் தெரிந்து கொண்டார்.

ஆரம்ப காலத்தில் தேனீ வளர்ப்பு அவருக்கு கடினமாகத் தோன்றியது. அவரால் வருவாய் ஈட்ட முடியவில்லை. ஆனால், தனது விடாமுயற்சியால் தொடர்ந்து தேனீக்களின் வாழ்க்கை முறை பற்றி படிப்படியாகத் தெரிந்து கொண்டார். 7 பெட்டிகளில் வளர்க்கப்பட்ட தேனீக்கள், 14, 100 என அதிகரித்து தற்போது ஆயிரம் பெட்டிகளை எட்டிவிட்டன.

விவேக் தனது தென்னந்தோப்பின் பல இடங்களில் தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்துள்ளதுடன், சுற்றுவட்டார விவசாயிகளின் தோட்டங்களிலும் தேனீ பெட்டிகளை வைத்து தேனை சேகரித்து வருகிறார்.
இது தவிர, கேரள மாநிலத்தின் சில பகுதிகள், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று, தேனீப் பெட்டிகளை வைத்துள்ளார். ஆரம்பத்தில் தேனீ வளர்ப்பில் தடுமாறிய விவேக், தற்போது பிற விவசாயிகளுக்கும் தேனீ வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேனீக்களுடன் பெட்டிக்கு ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரையிலான விலையில் விற்பனை செய்கிறார். அவற்றை வாங்கிச் செல்பவர்களின் இடத்துக்கே சென்று பராமரிப்பு விளக்கமளித்தும் வருகிறார்.

குறிப்பாக, கேரள வனத்துறையினருக்கு தேனீக்களுடன் பெட்டிகளை இவர் விற்பனை செய்துவருகிறார். ஒரு தேனீப் பெட்டியில் ஓர் ஆண்டுக்கு 9 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை தேன் எடுக்கலாம். ஒரு லிட்டர் தேன் ரூ. 350 முதல் ரூ. 400 வரை விற்பனையாகிறது. தேன்மெழுகும் விற்பனையாகிறது. இதன்மூலமாக மாதம் ரூ. 50,000-க்கு மேல் வருவாய் ஈட்டி மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக விவேக் திகழ்கிறார்.
தனது விவசாயத் தோட்டத்தில் தேனீக்களை வளர்ப்பதால், தென்னை மரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று மகசூல் அதிகரிப்பதாகவும் அவர் கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது:

தேனீ வளர்ப்பு என்பது விவசாயம் சார்ந்த உபதொழில். தேனீக்கள் விவசாயத்துக்கு உதவிகரமாக இருக்கின்றன. தேனீ வளர்ப்புக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுவதில்லை. தேனீக்களை வளர்க்க நிழல்தரும் இடம், அதிகப் பூக்கள் உள்ள இடம், இயற்கை சார்ந்த சூழல் போன்றவை இருந்தால் சிறப்பாக இருக்கும். குறைந்த முதலீட்டில், ஒரு விவசாயி தனது இடத்தில் 50 பெட்டிகளில் தேனீக்களை வளர்த்தாலே மாதம் ரூ. 10,000 வரை வருவாய் ஈட்ட முடியும். இதற்கு பராமரிப்புப் பணி குறைவுதான்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் என்னை சிறந்த தேனீ வளர்ப்பாளர் என கௌரவித்தனர். கோவை மாவட்டத்தில் சிலர் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். சிறு, குறு விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த சிறந்த வர்த்தக வாய்ப்பு இது. கால்நடை வளர்ப்பை விட அதிக லாபம் கிடைக்கும். இந்திய வகை தேனீக்கள் வளர்ப்புக்கு எளிதாக உள்ளன என்றார்.

ரூ. 250 கட்டணத்தில் பயிற்சி

தேளீ வளர்ப்பு குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் ஸ்ரீநிவாசன் கூறியதாவது:

தேனீ வளர்ப்பு, விவசாயிகளுக்கு சிறந்த வகையில் பயன்தரும். தேன் எடுப்பதற்காக மட்டும் தேனீக்கள் வளர்க்கப்படுவதாக நினைக்கக் கூடாது. தேனீ வளர்ப்பதால் அயல் மகரந்தச் சேர்க்கை வாயிலாக விவசாயத்தில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கும். தேனீக்கள் வளர்ப்பு தொடர்பாக, ஒவ்வொரு மாதமும் 6-ஆம் தேதி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி தேவைப்படுவோர் ஒவ்வொரு மாதமும் 6-ஆம் தேதி பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரை, காலை 9 மணிக்கு அனுகினால், ரூ. 250 கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியும். பயிற்சியுடன் சான்றிதழும் வழங்கப்படுகிறது என்றார்.

நன்றி: தினமணி

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *