கண்வலி கிழங்கு மூலிகை பயிரானது, ‘செங்காந்தள்’ என்ற பெயரில் தமிழகத்தின் மாநில மலராகும். இப்பயிர் பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தியுள்ளது.
குறிப்பாக கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக பயிர் செய்யப்பட்டாலும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதிகளில் விவசாயிகள், இப்பயிரை குழந்தை போல் கவனித்து சாகுபடி செய்கின்றனர்.
அதற்கு காரணம் இப்பயிரின் மகசூல் மற்றும் லாபமே. கடந்த மாதம் அதிகபட்சமாக ஒரு கிலோ கண்வலி கிழங்கு விதை 3,000 ரூபாய் வரை விற்பனையானது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 150 முதல் 200 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
மருத்துவ குணம்
இதன் கிழங்குகள் மருத்துவ குணமுடையது. எனினும் விதையே பிரதான மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகளில் இருக்கும் ‘கொன்ச்சிசைன்’ என்ற பொருள் நரம்பு, தோல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் புற்று நோய்களுக்கான மருந்துகள் தயாரிப்பிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இவை பெருமளவில் வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் இதன் ஏற்றுமதி பல மடங்கு உயர்ந்துள்ளது.
உறங்கும் கிழங்கு
இப்பயிரின் கிழங்கானது மண்ணிற்கடியில் உறக்க நிலையில் இருக்கும். மழைக்காலம் (ஜூன் – ஆகஸ்ட்) வந்ததும் செடிகள் வளர்ந்து வெளியில் வரும். 5 முதல் 8 வாரம் வளர்ந்து அதிகப்படியான பூக்களை உருவாக்கும். சுமார் ஏழு வாரங்கள் பூத்து, காய்களையும், விதைகளையும் உருவாக்கிய பின் செடிகள் மடிந்து விடும். கிழங்குகள் மீண்டும் உறக்க நிலையை அடையும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு செடி 2 முதல் 3 புதிய கிழங்குகளை உருவாக்கும். ஒரு முறை கிழங்கு நடுவதன் மூலம் சுமார் 3 முதல் 5 ஆண்டுகள் வரை பராமரிக்கலாம்.
நிலம் தேர்வு
வடிகால் வசதி, செம்மண், மணல் பாங்கான நிலப் பகுதி ஏற்றது. ஜூன், ஜூலையில் நடவு செய்யலாம். இப்பயிருக்கு பிரத்தியேக ரகம் இல்லை.
நல்ல தரமான ‘எல்’ வடிவிலான 60 முதல் 80 கிராம் எடையுடைய கிழங்குகளை நடவுக்கு பயன் படுத்தலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய 800 முதல் 900 கிலோ வரை கிழங்குகள் தேவைப்படும். நடவுக்கான கிழங்குகளை ‘கார்பென்டசிம்’ என்ற மருந்தில் 2 கிராமை ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் 20 நிமிடம் ஊற வைத்து, நடுவதால் அழுகல் நோய் வராது. கிழங்குகளை 60க்கு 30 செ.மீ., இடை வெளியில் 5 – 6 செ.மீ., ஆழத்தில் கிடை மட்டமாக நட வேண்டும். குறைந்த இடைவெளியில் நடுவதால் அயல் மகரந்த சேர்க்கை எளிதாகும்.
நோய் தொற்று
செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப ஓரடுக்கு அல்லது ஈரடுக்கு முறையில் நீண்ட வரிசையில் பிரம்பு அல்லது கம்பிகள் கொண்டு பந்தல் அமைப்பதால் அதிக பூக்கள் பூக்கவும், எளிதாக அயல் மகரந்த சேர்க்கை செய்யவும் வழி கிடைக்கும்.
விவசாயிகள் அதிக ரசாயன உரங்களை குறைந்த கால இடை வெளியில் பயன்படுத்துவதால் மண்ணில் தன்மை மாறுவதோடு, கிழங்குகள் எளிதில் நோய் தொற்று அடைகிறது. எனவே அதிகளவு மக்கிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் உயிர் உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தழை, மணி மற்றும் சாம்பல் (என்:பி:கே) உரங்களை முறையே 50:20:30 கிலோ ஒரு ஏக்கர் என்ற அளவில் இரண்டு முறையாக பிரித்து இட வேண்டும்.
மகரந்த பைகள்
ஏக்கருக்கு 2 கிலோ ‘டிரைக்கோடெர்மா விரிடி’, ‘சூடோமோனாஸ்’, ‘புளோப்ரோசென்ஸ்’ போன்ற உயிரில் மருந்துகளை இடுவதன் மூலம் அழுகல், வாடல் நோயிலிருந்து பாதுகாக்கலாம்.
இப்பயிருக்கு பொட்டாஷ் (சாம்பல் சத்து) மற்றும் சிங் தேவைப்படும். எனவே ஏக்கருக்கு 10 கிலோ சிங்சல்பேட்டை முதல் உரத்துடன் கலந்து இட வேண்டும். இப்பயிரின் பூக்கள் அயல் மகரந்த மற்றும் தன் மகரந்த சேர்க்கை வகையை சார்ந்தது. மகரந்த பைகள், சூல் முடியிலிருந்து நேர் எதிர் திசையில் நீட்டி கொண்டிருப்பதால், இவற்றில் சிறு பூச்சிகளாலும் இயற்கையாகவும் மகரந்த சேர்க்கை கடினமாகிறது.
உதவும் கைகள்
காலை 8:00 முதல் காலை 11:00 மணிக்குள் கைகளால் மகரந்த சேர்க்கை செய்வதன் மூலம் காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இவற்றின் கிழங்குகள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை மண்ணில் இருந்து ஆண்டுக்கு ஆண்டு தளைத்து மகசூல்
அளிக்கும்.
எனவே மழைக் காலங்களில் வடிகால் செய்து தண்ணீர் தேங்குவதை தவிர்ப்பதன் மூலம் கிழங்கு அழுகலை தடுக்கலாம். கிழங்குகள் முளைக்கும் தருணத்தில் களைக்கொல்லி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
அறுவடை முடிந்த பின் அடுத்த பருவம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் தக்காளி, மிளகாய், பாகற்காய் போன்ற பயிர்களை இடைப்பட்ட கால பயிர்களாக பயிரிடுவதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம்.
நடவு செய்த 100 முதல் 110 வது நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும்.
காய்கள் வெளிர் பச்சை நிறத்தை அடைந்தவுடன் அறுவடை செய்யலாம். முதல் ஆண்டு 100 முதல் 150 கிலோவும், அதற்கு அடுத்த ஆண்டுகளில் ஏக்கருக்கு 200 முதல் 225 கிலோ வரை விதைகள் கிடைக்கும்.
விதைகளை நன்கு உலர்த்தி சேமிக்க வேண்டும். இதனால் விதைகளை நீண்ட நாட்களுக்கு சேமிப்பதுடன், பூஞ்சான் தொற்றிலிருந்து பாதுகாக்கலாம்.
கண்வலி கிழங்கு விவசாயம் அதிகளவு லாபம் தரக்கூடிய பயிர். இதன் சாகுபடிக்கான முறைகளும், செலவுகளும் சற்று அதிகம். விவசாயிகள் முறையான வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் மகசூலை அதிகரிப்பதோடு செலவை குறைக்கலாம்.
– முனைவர் ந.சுகந்தி
விவசாய ஆலோசகர் கோவை.
09443543372
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்