2015: தமிழகத்தை உலுக்கிய சுற்றுச்சூழல் சர்ச்சைகள்

கடந்து சென்ற 2015-ம் ஆண்டு உக்கிரமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சந்தித்தது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரித்துவருவது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு புறம் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதையும் இது சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் சந்தித்த முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள், ஒரு பார்வை:

பாதரசக் கழிவு

சர்ச்சைக்கு இடமாகி கொடைக்கானலில் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்ட ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் பாதரச தெர்மாமீட்டர் நிறுவனம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு, அப்பகுதி மக்களை பாதித்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்தப் பிரச்சினை மீண்டும் உலகின் கவனத்துக்கு வந்தது. அது பரவலான கவனத்தைப் பெற்றதற்கு ராப் பாடகி சோஃபியா அஷ்ரஃப் பாடிய ‘கோடைக்கானல் வோன்ட்’ என்ற பாடலும் முக்கிய காரணம். பாதரச ஆலை இருந்த பகுதியில் மண்ணில் பாதரசக் கழிவு கலந்திருந்த விகிதம் பிரிட்டனில் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அளவைப்போல 20 மடங்கு அதிகம் என்ற தகவல், யுனிலீவர் நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்தே தெரிய வந்திருக்கிறது.

விலை போகும் தண்ணீர்

உள்ளூர் மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோக்கோ கோலாவின் குளிர்பான ஆலைக்கு ஒதுக்கப்பட்ட 71 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏப்ரல் மாதம் ரத்து செய்தது. ஆனால், அதேநேரம் நெல்லை மாவட்டத்தின் பெருமையான தாமிரபரணி ஆற்றில் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் கோக்கோ கோலா ஆலை, ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீரை நீண்டகாலமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. அதே பகுதியில் லிட்டருக்கு ரூ. 3.75 கட்டணத்தில் பெப்சி நிறுவனமும் தண்ணீர் எடுக்க புதிதாக அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அரசுக்கு எதிரான குரல்

எந்த ஒரு பெரும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னாலும் சுற்றுச் சூழல் சீர்கேடு, மாசுபாடு தொடர்பாக மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்பது சட்ட நடைமுறை. இந்த நடைமுறை பெரும்பாலும் சடங்காகச் சுருங்கிவிடும் நிலையில், செய்யூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், அரியலூர் சிமெண்ட் ஆலை, அரியலூர் ராம்கோ சிமெண்ட் ஆலை, பெரம்பலூர் எம்.ஆர்.எஃப். ஆலை விரிவாக்கம், ராமநாதபுரம் ஒ.என்.ஜி.சி. இயற்கை எரிவாயுத் திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும், உள்ளூர் மக்களும் கடந்த ஆண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்தது கவனத்தைப் பெற்றது.

முற்றுப்புள்ளி இல்லா மணல் கொள்ளை

மணல் கொள்ளைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவலான ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பும் எழுந்தன. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள களத்தூர் கிராமத்தில் பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிராக 350-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் தொடர்ந்து பல மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. கடும் அடக்குமுறையை எதிர்கொண்ட இப்பகுதி மக்களில் 18 பேர் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர்.

தாமிரபரணி ஆறு, வாலாஜாபேட்டை வன்னிமேடு, திருச்சி லால்குடி, அன்பில் ஆகிய பகுதிகளில் ஆற்றில் மணல் அள்ளவும், மணல் குவாரி அமைப்பதற்கு எதிராகவும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன் முந்தைய ஆண்டில் தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் தாது மணல் எடுக்கும் பிரச்சினையில் மட்டும் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் செய்த மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.

மனிதர்கள் உருவாக்கிய பேரழிவு

நமக்கு நினைவு தெரிந்த நாட்களில் சென்னை சந்தித்த மிகப் பெரிய பேரழிவு, டிசம்பர் 1-ம் தேதி வந்த வெள்ளம்தான். நூறு வருடங்களில் இல்லாத மழையே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், நவம்பர் 15, நவம்பர் 23 என அதற்கு முன்னதாக இரண்டு சிறு வெள்ளங்கள் தலைகாட்டிப் போனதற்குப் பிறகு அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது சென்னைவாசிகளுக்குத் தெரியும். இரவில், கடும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டது காரணமாகக் குறிப்பிட்டாலும், கடந்த 40 ஆண்டுகளில் சென்னை மாநகரம் கண்மூடித்தனமாக 20 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதே மோசமான பொருள்சேதம், உயிர்சேதத்துக்குக் காரணம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள். புவியியல் ஆராய்ச்சிகளின்படி தட்டையான நிலப்பரப்பைக் கொண்ட சென்னை, சதுப்புநிலங்கள், இயற்கைக் கால்வாய்கள் என வெள்ள வடிகால்களை பரவலாகக் கொண்டிருந்தது. அந்த வடிகால்கள் அழிக்கப்பட்டதே தற்போதைய மோசமான பேரழிவுக்குக் காரணம்.

குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளில் சுனாமி, தானே என அடுத்தடுத்து பேரிடர்களை எதிர்கொண்டுவரும் கடலூரை மீட்பதிலும், எதிர்கால பேரிடர்களில் இருந்து அந்த ஊரை பாதுகாப்பதிலும் என்னவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதும் பதில் இல்லாத கேள்வியில் ஒன்றே.

ஏரியை மூட தீர்ப்பாயம் தடை

சென்னையின் நீர்நிலைகள் அழிக்கப்பட்டதும் ஆக்கிரமிக்கப் பட்டதும்தான் வெள்ளத்துக்குக் காரணம் என்ற நிலையில், தற்போது எஞ்சியுள்ள போரூர் ஏரியை அழிவிலிருந்து தடுக்க இந்த ஆண்டின் மத்தியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உள்ளூர் மக்களும் திரண்டனர். இதற்கிடையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு, போரூர் ஏரியில் எந்தவிதமான கட்டுமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்வதை டிசம்பர் மாதம் தடை செய்துள்ளது. போரூர் ஏரியில் கரையை பலப்படுத்துவதாகச் சொல்லி போடப்பட்டுள்ள மண்ணை பொதுப் பணித் துறை அகற்ற வேண்டும் என்பதுடன், ஏரியிலிருந்து தனியார் தண்ணீர் எடுப்பதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரம் கோடி கிரானைட் முறைகேடு

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் குவாரி தோண்டிய முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் 2014-ல் நியமித்தது. சகாயம் தனது 600 பக்க அறிக்கையை டிசம்பர் மாதம் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையுடன் பல்வேறு பிரச்சினைகளை விவரிக்கும் 7,000 இணைப்புகளையும், 100 ஒளிப்பட ஆதாரங்களையும் அவர் அளித்துள்ளார். அறிக்கையில் சி.பி.ஐ. விசாரணை கோரி இருப்பதாக சகாயம் சார்பிலான வழக்கறிஞர் வி. சுரேஷ் கூறியுள்ளார். கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக முன்வராத நிலையில், இரவு முழுக்க சம்பவ இடத்திலேயே சகாயம் தங்கியது பரவலான கவனத்தைப் பெற்றது.

மீத்தேன் போனது, ஷேல் வாயு வந்தது

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகையிலிருந்து மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு எழுந்த கடுமையான எதிர்ப்பை அடுத்து, கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் தனது செயல்பாடுகளை 2014 இறுதியில் நிறுத்திக்கொண்டது. மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிப்பதை முழுமையாக நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் அரசாணை அக்டோபர் 8-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகளை கலக்கமடைய வைத்தது ஷேல் வாயு. டெல்டா பகுதியில் 30 இடங்களில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் ஷேல் வாயு துரப்பணம் குறித்து ஆய்வு நடத்தியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் வாடும் டெல்டா விவசாயிகளுக்கு வேறு பல பிரச்சினைகளும் இப்படி சேர்ந்துகொண்டுள்ளன.

நகராத நியூட்ரினோ

தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இந்திய நியூட்ரினோ ஆய்வகப் பணி கடந்த ஏழு மாதங்களாக எந்த நகர்வும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காததே, இதற்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் நியூட்ரினோ ஆய்வகத்தில் எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் 2015 மே மாதம் பணிகளுக்குத் தடை விதித்தது. இந்த ஆராய்ச்சித் திட்டம் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடும், கதிரியக்கமும் வெளிப்படும் என்று சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், அரசியல் வாதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கைவிடப்படாத வழக்குகள்

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது. இந்தக் காலத்தில் 2.27 லட்சம் பேருக்கு எதிராக 380 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 248 வழக்குகளை மாநில அரசு திரும்பப் பெற்றது. ஆனால், இன்னும் 132 வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. வெடிமருந்து வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்குகள் இதில் உள்ளன. இந்த வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த முகிலன் டிசம்பர் மாத மத்தியில் காவல்துறையில் சரணடைந்தார்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *