ஐந்து ஏக்கர் நிலத்தில் மல்லிகைப்பூ சாகுபடி செய்து மாதம் ரூ.2 லட்சம் வருமானம் கிடைக்குமா? என கேட்கலாம். மதுரை மாவட்டம் மஞ்சம்பட்டியை சேர்ந்த பட்டதாரி விவசாயி ரெங்கநாதன் தனது நிலத்தில் மல்லிகை சாகுபடி செய்து பணியாளர்கள் 150 பேருக்கு தினமும் சம்பளம் வழங்குவதோடு மாதம் ரூ.2 லட்சம் வருவாய் ஈட்டுகிறார். தேசிய அளவில் சிறந்த விவசாயிக்கான விருது பெற்றுள்ளார்.
மல்லிகை விவசாயத்தை மணக்கச் செய்யும் ரெங்கநாதன் கூறுகையில், “”சொட்டுநீர் பாசனம் மூலம் ஐந்து ஏக்கரில் மல்லிகை விவசாயம் செய்கிறேன். செடியை நடவு செய்து ஆறாவது மாதத்தில் இருந்து பூக்கள் பறிக்கலாம். முறையாக பராமரித்தால் 15 ஆண்டுகள் கூட மல்லிகை கிடைக்கும். உதாரணத்துக்கு எனது மகன் அழகர்சாமி பிறந்த போது, அவரது பெயரில் மல்லிகை செடி ஒன்றை நட்டேன். அவருக்கு இப்போது வயது 15. ஐந்து ஏக்கரில் நடவு செய்த செடியில் இருந்து அதிகளவு பூக்கள் பூக்கிறது. இயற்கை அடிஉரம் மட்டுமே பயன்படுத்துகிறேன். நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். சராசரியாக கிலோ ரூ.200க்கும், முகூர்த்த நேரங்களில் கிலோ ரூ.1500க்கும் அதிகமாக விலை கிடைக்கும். மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் விலைக்கே வியாபாரிகள் பூக்களை எடுத்து கொள்கின்றனர். மஞ்சம்பட்டி குண்டு மல்லிகைக்கு மணம் அதிகம் என்பதால் ஏற்றுமதியும் செய்கின்றனர். வயல் பராமரிப்பு, களை எடுப்பு, பூக்கள் பறிப்பு, நீர் மேலாண்மை, உர மேலாண்மை என 150 பேருக்கு வேலை கொடுக்கிறேன். மாதம் வருவாய் சராசரியாக ரூ.2 லட்சத்துக்கு குறையாது. மல்லிகை விவசாயத்தில் முறையான பராமரிப்பு, உழைப்பு, இயற்கை அடிஉரம், பூச்சிக்கொல்லி முதலியவற்றை முறையாக கடைப்பிடித்தால் மல்லிகை விவசாயம் மணக்கும். எனது தொழில்நுட்ப ரகசியத்தை பிறருக்கும் கற்றுத்தருகிறேன்,” என்றார்.
தொடர்புக்கு: 09095728851
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Noi paramarepu patri kuravum