மதுரையில் கோடை மழை கைகொடுத்து வருவதால் மல்லிகைப்பூ விளைச்சலில் விவசாயிகள் வெற்றி கண்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மல்லிகை பூவின் பிறப்பிடம். இங்கிருந்து தாய் செடிகள் பதிகம் செய்யப்பட்டு மதுரை, திருத்தணி, சத்தியமங்கலம் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு பயிரிடப்பட்டது. எனினும் மதுரை மண்ணின் மகத்துவத்தால் மல்லிகை அதிக மணம் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே மல்லிகையின் பெருமை உலகளவில் எட்டியது. புவிசார் குறியீடும் கிடைத்தது.
சீசன் அமோகம்
மதுரையில் தெற்கு, வடக்கு, மேற்கு தாலுகாக்களில் மல்லிகை விளைகிறது. ஜனவரி மூன்றாவது வாரத்தில் துவங்கி மே இறுதி வரை ஏக்கருக்கு 100 கிலோ வரை மல்லிகை கிடைக்கும். இதை சூப்பர் சீசன் என்பர். மே முதல் ஆகஸ்ட் வரை ஏக்கருக்கு 50 கிலோ கிடைக்கும். இது ‘ஆப்’ சீசன். ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை ஏக்கருக்கு 25 கிலோ கிடைக்கும். இது ‘குவாட்டர்’ சீசன். நவம்பர் முதல் ஜனவரி இரண்டாவது வாரம் வரை ஐந்து முதல் பத்து கிலோ கிடைக்கும். இது ‘டல்’ சீசன். கோடை மழை கை கொடுத்து வருவதால் தற்போது மல்லிகை விளைச்சல் அமோகம். இதன்மூலம் கோடையில் மல்லிகையை பயிரிட்ட விவசாயிகள் விளைச்சலில் வெற்றி கண்டுள்ளனர். கிலோ ரூ.200க்கு விற்கப்படுகிறது. ‘டல்’ சீசனில் கிலோ ரூ.2000 முதல் ரூ.3000 வரை உயரும்.
மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் தலைவர் சோ.ராமச்சந்திரன் கூறுகையில் – மல்லிகைப்பூவை ஏற்றுமதி செய்ய யாரும் முன்வருவதில்லை. திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு பார்சல் அனுப்ப ரூ.பல ஆயிரம் செலவாகிறது. மதுரையில் பன்னாட்டு விமான சேவை இருந்தால் போக்குவரத்து செலவு மிச்சம். இதனால் விவசாயிகள், வியாபாரிகள் பயனடைவர். மல்லிகைக்கு நீர் முக்கியம். பற்றாக்குறையால் விவசாயிகள் பாதிக்கின்றனர். போர்வெல் அமைக்கவும், பாசன வசதிக்காகவும் மானியம் வழங்கினால் மல்லிகை மணம் மேன்மையடையும் என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்