மல்லிகைப் பிரச்னைகளுக்கு வேப்பங்கொட்டையிடம் தீர்வு!

தினமும் வருமானம் தரும் பயிர்களில் மலர்களுக்கு முக்கிய இடமுண்டு. மலர் சாகுபடியில் அதிக விவசாயிகளின் விருப்பத்தேர்வாக இருப்பது மல்லிகை. பண்டிகை நேரங்களில் கிலோ 1000 ரூபாயைத் தாண்டி விற்கும் மல்லிகை, குறைந்தபட்சமாகக் கிலோவுக்கு 50 ரூபாய்க்குக் குறையாமல் விற்பனையாகிறது. இதனால், மல்லிகையை விரும்பி நடவு செய்கிறார்கள். மல்லிகை நல்ல வருமானம் கொடுக்கும் அதே நேரத்தில், மல்லிகைச் சாகுபடியில் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்திக்கிறார்கள்.

குறிப்பாக, செடிகள் நீண்டநாள்களாக பூவெடுக்காமல் இருப்பது, செடியின் வளர்ச்சி குன்றியுள்ளது, அளவில் சிறியதான பூக்கள் தோன்றுதல், வேரழுகல், பூக்கள் சிவப்பு நிறத்துக்கு மாறிவிடுவது எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைச் சரிசெய்வதற்கு, ரசாயன மருந்து, உரம் என விவசாயிகள் அதிகச் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

மேலே சொன்ன பிரச்னைகளுக்கு குறைந்த செலவில் எளிமையான தீர்வைச் சொல்கிறார் வேளாண் ஆலோசகர் பிரிட்டோராஜ்,

‘‘மல்லிகைச் செடியில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுவும் ஒரு காரணம்.

எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை செடிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மல்லிகைப் பூ சிவப்பு நிறத்தில் மாறிவிடுவதற்குக் காரணமாக இருப்பது ஒரு வகையான புழு.

இந்தப் புழுக்களின் நடமாட்டம் மாலை வேளைகளில் செடிகளில் இருக்கும். அந்த நேரத்தில் நாம் மருந்தைத் தெளித்தால்தான் புழுக்களை அழிக்க முடியும். ரசாயனப் பூச்சிக்கொல்லிகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. இதற்கு இயற்கை முறையில் எளிமையான தீர்வு இருக்கிறது.

அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கக்கூடிய வேப்பங்கொட்டையும், தண்ணீரும் இருந்தால் இதைச் சரிசெய்து விடலாம். 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 டேங்க் தெளிப்பதாக இருந்தால், ஒரு கிலோ வேப்பங்கொட்டையை எடுத்து நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும்.

அதில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும். இதில், சுண்டு விரல் அளவுக்குக் காதி சோப்பு துண்டை போட்டு குச்சியால் நன்றாகக் கலக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் பால் போன்ற திரவம் நுரையுடன் கிடைக்கும். நுரையை எடுத்துவிட்டு, கரைசலை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கரைசலுக்கு வேப்பங்கொட்டை கரைசல் என்று பெயர்.

10 லிட்டர் டேங்க்கில் அரை லிட்டர் வேப்பங்கொட்டை கரைசலை ஊற்றி, அதில் தண்ணீரை நிரப்பித் தெளிக்கலாம். விவசாயிகள் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது, இந்தக் கரைசலை மாலை 5 மணிக்கு மேல்தான் தெளிக்க வேண்டும்.

அந்த நேரத்தில்தான் புழுக்களின் நடமாட்டம் இருக்கும். நாம் தெளிக்கும் கரைசல் நேரடியாகப் புழுக்களின் மீது பட்டு பலன் கிடைக்கும். மற்ற வேலைகளில் தெளிப்பதால், எந்தப் பலனும் ஏற்படாது. இதை 3 நாள்கள் இடைவெளியில் மூன்றுமுறை தெளித்தால் புழுக்கள் செத்துப்போகும்; அத்துடன் செடிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ”

இந்த இடத்தில் விவசாயிகளுக்கு ஒரு கேள்வி எழலாம். இந்தக் கரைசலை தெளிப்பதால் செடிகள் வாடிப்போகுமே எனத் தோன்றும். வேப்பெண்ணெய் கரைசலைப் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாகப் பயன்படுத்தும்போது, செடிகள் வாடிப்போகும்தான். ஆனால், நாம் வேப்பங்கொட்டையை இடித்து, குறைவான அளவில் பயன்படுத்துவதால் செடிகள் வாடிப்போகாது. ஒருவேளை அளவு சற்றுக் கூடுதலாகப் போனால் கூட ஓரிரு நாளில் வாடிய செடிகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். பிரச்னையில்லை.

கரைசலைத் தெளித்த பிறகு செடிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் எனப் பார்த்தோம். அந்தக் காலகட்டத்தில் செடிகளில் இலைகள் வறண்டுபோய் காய்ந்த நிலையில் காணப்படும். ஓரிரு நாள்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும். இந்தக் காலகட்டத்தில் மீன் அமிலம் மற்றும் இ.எம் இரண்டையும் பாசன நீருடன் கலந்துகொடுக்க வேண்டும். பல விவசாயிகள் மீன் அமிலத்தைத் தெளிக்கிறார்கள்.

ஆனால், மல்லிகையைப் பொறுத்தவரை, தெளிப்பதை விட, பாசன நீரில் கலந்துகொடுப்பதுதான் சிறந்தது. கிணற்றுப் பாசனம் செய்யும் விவசாயிகள், 300 மில்லி இ.எம் கரைசலை பாசன நீரில் கலந்து விடலாம்.

அல்லது செடிகளுக்குக் கொடுப்பதற்கு முதல்நாள் மாலை, 200 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி இ.எம் ஊற்றி, கலந்து வைத்து விடவேண்டும். இதை அடுத்த நாள் காலையில் எடுத்து, ஒவ்வொரு செடிக்கும் அரை லிட்டர் அளவுக்குத் தூர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும்.

செடி இயல்பு நிலைக்கு வந்து அரும்பு எடுக்கும். இந்த நேரத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கரைசலைத் தெளிக்க வேண்டும். இதனால் அதிக அரும்புகள் தோன்றும். அரும்பு தோன்றியவுடன், மீன் அமிலத்தைக் கொடுக்க வேண்டும்.

ஒரு ஏக்கர் நிலத்துக்குப் பாசனம் செய்யும் போது, 750 மில்லி மீன் அமிலத்தைத் பாசன நீரில் கலந்து விடலாம். இ.எம் மற்றும் மீன் அமிலம் இரண்டையும் சுழற்சி முறையில் மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். இப்படிச் செய்வதால், பூக்களின் சைஸ் பெரியதாக இருக்கும்.

மல்லிகையில் பல இடங்களில் போரான் சத்து குறைபாடு தோன்றும். பற்றாக்குறையைச் சரிசெய்ய, எருக்குச் செடிகளை துண்டு துண்டாக வெட்டி, ஒவ்வொரு செடிக்கும் தூரிலிருந்து அரையடி தூரத்தில் பள்ளம் எடுத்து, ஒரு கைப்பிடி எருக்கம் இலைகளைப் போட்டுப் பள்ளத்தை மூடிவிட வேண்டும்.

இப்படிச் செய்வதால் பற்றாக்குறை சரியாவதோடு, பூக்களின் வாசனையும் அதிகரிக்கும். எருக்கினால் மட்டும் வாசனை கிடைப்பதில்லை, வேப்பங்கொட்டை கரைசல், தேமோர் கரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகிய அனைத்தையும் முறையாகப் பயன்படுத்துவதால்தான் வாசனை அதிகரிக்கிறது.

களிமண் பூமியில் உள்ள மல்லிகையில் வேரழுகல் பெரிய பிரச்னையாக இருக்கும். வேரழுகல் பாதிப்பை சரிசெய்ய, அரை டீ ஸ்பூன் சூடோமோனஸ், அல்லது கால் டீ ஸ்பூன் டிரைக்கோடெர்மா விரிடி எடுத்து மண்ணில் கலந்து தூரிலிருந்து அரையடி தள்ளி சிறிய குழியெடுத்து அதில் வைத்து மூடி, பாசனம் செய்யலாம்” என்றார்.

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “மல்லிகைப் பிரச்னைகளுக்கு வேப்பங்கொட்டையிடம் தீர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *