மாம்பழத்தைச் சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில் ஜூலை 3 முதல் 5 வரை மாம்பழத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மூன்றாம் தேதி நடந்த மாம்பழத் திருவிழாவில் சுகர் ஃப்ரீ மாம்பழங்களும் இடம் பெற்றிருந்ததுதான் அவ்விழாவின் சிறப்பு.
இம்முறை உத்தரகாண்டில் விளைந்த சுகர் ஃப்ரீ மாம்பழங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததும் ஒரு காரணம். இந்த மாம்பழம் ஊதா (Purple) நிறத்தில் காணப்படும். அப்படியே மற்ற மாம்பழங்களுக்கும் இந்த மாம்பழத்துக்கும் ஒரே வித்தியாசம் நிறம்தான். மற்ற மாம்பழங்களைப் போலவே இதுவும் தோற்றத்தையும், சுவையையும் கொண்டது.
உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மாம்பழ வகைகளைக் கண்டறிந்தனர். 2007-ம் ஆண்டு ஆரம்பித்த மூன்றாண்டு ஆராய்ச்சிகளின் பலனாக இம்மாம்பழத்தை உருவாக்கினர். அதனை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது,
“இந்தியச் சந்தையில் இருக்கும் மாம்பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட முடியாது. இந்த மாம்பழம் சர்க்கரை நோயாளிகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதியாகும் மாம்பழங்களும் இதுவாகத்தான் இருக்கும். சர்க்கரையில்லா மாம்பழங்கள் பற்றி வருங்காலத்தில் நிறைய ஆராய்ச்சிகள் நடக்கலாம். ஆனால், அதில் எல்லாம் நிச்சயம் நாங்கள் உருவாக்கிய மாம்பழத்தின் கூறுகள் அதில் இருக்கும்” என்றனர்.
சாதாரண மாம்பழங்களில் காணப்படும் சர்க்கரையின் அளவைவிட 25 சதவிகிதம் மட்டுமே சுகர் ஃப்ரீ மாம்பழங்களில் இடம் பெற்றிருக்கும். சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இம்மாம்பழத்தை சாப்பிடலாம். இதில் கார்போஹைட்ரேட்டும் குறைவான அளவே இருக்கிறது . இதற்கு மாற்றாக மாம்பழத்தில் கிடைக்க வேண்டிய சத்துகள் நிறைவாகக் கிடைக்கும். கடந்த ஆண்டே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், இந்த ஆண்டு உத்தரகாண்டில் அதிகமாக விளைந்து வருகிறது. இம்மாம்பழங்கள் டாம் ஆட்கின் இன வகையைச் சேர்ந்தவை.
இது அதிகமாக உத்தரகாண்டில் உள்ள நைனிடால் பகுதியில்தான் விளைவிக்கப்படுகிறது. அங்குதான் பெரும்பாலான மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது. இதனை மதிப்பு கூட்டி ஜூஸாகவும் விற்பனை செய்யும் தொழில்களும் நடைபெற்று வருகின்றன. இந்திய மண் வகைகளுக்கு இந்த மாம்பழ வகை மிகவும் ஏற்றது. அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் ஏற்று வளரக்கூடியதாக. ஆனால், நம் ஊரின் நாட்டு வகை மாம்பழங்களோடு ஒப்பிடும்போது சத்துகளிலும், சுவைகளிலும் சுகர் ஃப்ரீயால் போட்டியிட முடியவில்லை என்பது நிஜம்தான். பிற்காலத்தில் தனக்கான இடத்தையும் சுகர் ஃப்ரீ மாம்பழங்கள் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.
இந்தியாவைத் தவிர வெளிநாடுகளிலும் சுகர் ஃப்ரீ மாம்பழங்கள் வரவேற்பை பெற்று வருவதால், இதைப் பயிரிட்ட விவசாயிகளும் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக மாம்பழங்களில் 96 சதவிகிதம் குளுகோஸ் இடம் பெற்றிருக்கும். ஆனால், சுகர் ஃப்ரீ ஸ்பெஷல் வெரைட்டியில் 82 சதவிகிதம் சுக்ரோசும், 18 சதவிகிதம் குளுகோஸும் இருக்கும். இந்த மாம்பழங்களுக்கு யூரியா, உரம் என எதுவும் தேவையில்லை. பொதுவாக நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளதால் இது இயற்கையாகவே வளரும். மேலும் இவ்வகை மாம்பழம் மற்ற ஆசிய நாடுகளிலும் கால்பதிக்க ஆரம்பித்துள்ளது. இதுசார்ந்த மதிப்புக்கூட்டு தொழில்களும் நடக்க ஆரம்பித்துள்ளன. சர்க்கரை இல்லை… யூரியா தேவையில்லை… ஊதா கலரில் கிடைக்கும் இம்மாம்பழம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் பரவட்டும்.
நன்றி: விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்