- மாமரத்தின் பூக்களின் எண்ணிக்கை மற்றும் விளைச்சலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை வல்லுநர் நி.விஜயகுமார் கூறியது
- மாமரம் இதுவரை பூக்காமல் இருந்தால், 0.5 சதவீத யூரியா கரைசல் (5 கிராம் யூரியா ஒரு லிட்டர் நீருக்கு) அல்லது ஒரு சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் (10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட் ஒரு லிட்டர் நீருக்கு) என்ற அளவில் பிப்ரவரி மாதம் 15 தேதிக்குள் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் உருவாக வாய்ப்புண்டு.
- பூக்கள் பூத்திருக்கும் மாமரங்களில் நாப்தலின் அசிட்டிக் அமிலம் தெளிப்பதால் அதிக பிஞ்சுகள் உருவாவதோடு, பிஞ்சுகள் உதிர்வதும் தடுக்கப்படும்.
- அதே நேரத்தில் பிஞ்சுகள் உருவாகியுள்ள மாமரங்களில் 2 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் தெளிப்பதால் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு பழங்கள் உற்பத்தி அதிகரிக்கும்
- . மாமரத் தோப்புகளில் தோழமை தாவரங்களான சீத்தாப்பழக் கன்றுகள் மற்றும் ஆமணக்குச் செடிகளை பயிரிடுவதால் கூடுதல் வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
பூச்சிகளும், கட்டுப்படுத்தும் வழிகளும்
தத்துப் பூச்சி:
- மாமரங்களை மூன்று விதமான தத்துப் பூச்சிகள் தாக்குகின்றன. மாமரத்தின் கிளைகளில் தத்துப் பூச்சியின் தாக்குதலை எளிதாக கண்டறிய முடியும். தத்துப் பூச்சியின் தாக்குதலினால் பூக்களின் எண்ணிக்கை குறைவதோடு பூக்களிலும் அதன் பாதிப்பு ஏற்படும்.
- தத்துப் பூச்சியின் தாக்குதல் குறைவாக இருப்பின் 3 சதவீத வேப்ப எண்ணை ஒரு லிட்டர் நீருக்கு 5 மிலி அல்லது வேப்பம் சோப்பு ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
- தத்துப் பூச்சியின் தாக்குதல் மத்திமமாக இருப்பின், ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் “பெவேரியா பேஸியானா’ என்ற உயிரக பூஞ்சாண மருந்தினை அதிக திறன் உள்ள தெளிப்பான் மூலம் தெளிப்பு வேகத்தை குறைத்து மாமரம் மற்றும் பூக்களின் மீது தெளிப்பதால் தத்துப் பூச்சிகள் அழியும்.
- தாக்குதல் அதிகமாக இருப்பின், “அசிபேட் 75 எஸ்.பி.’ ஒரு கிராம் ஒரு லிட்டர் நீருக்கு அல்லது “கார்பரைல் 50 டபில்யு.பி’-ஐ ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் பூ உருவாகும் சமயத்தில் ஒரு முறையும், 15 நாள்கள் கழித்து இரண்டாவது முறையும் பூக்களின் மீது தெளிக்க வேண்டும்.
- இது மட்டும்மல்லாமல் நனையும் கந்தகம் 2 கிராம் ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் தெளித்தால் செஞ்சிலந்தியின் தாக்குதலை தடுக்க முடியும்.
பிணைக்கும் புழு:
- பிணைக்கும் புழுவானது மாமரங்களின் பூக்களில் தமது எச்சத்தினால் கூடுகள் கட்டி வலை போல் பின்னி பூக்களை உண்பதால் மகசூல் பாதிக்கப்படுகின்றது. இதனால் பூக்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதும் தடுக்கப்படும்.
- பிணைக்கும் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த “பேசலோன் 35 இ.சி’ 2 மிலி ஒரு லிட்டர் நீருக்கு அல்லது “புரப்னோபாஸ்’ 2 மிலி ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் பூக்களின் மீது தெளிக்க வேண்டும்.
இலைக் கொப்புளம் மற்றும் அசுவுணி:
- இலைக் கொப்புளம் மற்றும் அசுவுணியைக் கட்டுப்படுத்த “டைமித்தோயேட்’ 2 மிலி ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
கரையான்:
- மாமரத் தோப்புகளில் கரையான் புற்றுகளை அழிக்க சோற்றுக்கற்றாழை செடிகளை நடலாம்.
- மேலும் மாமரங்களில் தோன்றும் கரையானை அழிக்க சிறிதளவு சர்க்கரைக் கரைசலை மரத்தின் மீது தெளிப்பதால் செவ்வெறும்புகள் சர்க்கரையை தேடிவந்து கரையான்களை தூக்கிச் செல்லும்.
பழ ஈ:
- மாமரத்தின் பழங்களில் தோன்றக்கூடிய பழ ஈயை கட்டுப்படுத்த பிரத்தியேக இனக்கவர்ச்சி பொறியினை ஒரு ஏக்கருக்கு 2 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் வைத்துவிட வேண்டும்.
- இதனால் பழ ஈக்கள் பூ பூக்கும் தருணத்தில் முட்டையிடுவது தவிர்க்கப்பட்டு இனகவர்ச்சிப் பொறியினால் அவை ஈர்க்கப்பட்டு அழிக்கப்படும் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்