மாஞ்செடி உற்பத்தி: பலருக்கு வேலை வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூரில் மாஞ்செடிகள் உற்பத்தி செய்வதன் மூலம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

மாங்கனி மாவட்டம் என்று அழைக்கப்படும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மா சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது. மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் இருந்து, வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் மாஞ்செடிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
போச்சம்பள்ளி, சந்தூர், பட்டகப்பட்டி, ஜெகதேவி, தொகரப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாஞ்செடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில் மட்டும், 5,000 குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், மாங்கூழ் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து, மாங்கொட்டைகளை டன் கணக்கில் வாங்கி வந்து விதைக்கின்றனர். அந்த மாங்கொட்டைகள், ஓராண்டிலிருந்து, இரண்டு ஆண்டு வளரும். அவ்வாறு வளரும் செடிகளை, வேருடன் எடுத்து, மாஞ்செடி உற்பத்தி செய்யப்படுவதற்காக, தயார் செய்ய பிரத்யேக மண் சட்டிகளில் வைக்கின்றனர். இந்த செடிகளுக்கு, 45 நாட்கள் காலை, மாலை என, இரண்டு முறை தண்ணீர் விடுகின்றனர். பின்னர், அந்த மண் சட்டியில் உள்ள செடிகளை கொண்டு, ஏற்கனவே நன்கு வளர்ந்துள்ள தாய் செடியில் உள்ள கிளைகளை வெட்டி சீவி, புதிய செடியில் இணைத்து தண்ணீர் புகா வண்ணம் பிளாஸ்டிக் கொண்டு கட்டி விடுகின்றனர்.
ஒவ்வொரு தாய் செடியிலிருந்தும் குறைந்தபட்சம், 10 செடிகள் உற்பத்தி செய்கின்றனர். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வீரிய ஒட்டுரக மாங்கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. மாங்கன்றுகள் பெங்களூரா, செந்தூரா, பைனப்பள்ளி, காலப்பட், பங்கனப்பள்ளி, மல்கோவா என பல ரகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு மாங்கன்றின் விலை சீஸனை பொறுத்தும், ரகத்தை பொறுத்தும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்படவெளி மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் நேரடியாக கிருஷ்ணகிரிக்கு வந்து மாங்கன்றுகளை வாங்கி வாகனங்கள் மூலம் ஏற்றி செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஜூலை முதல் அக்டோபர் வரை மாங்கன்றுகள் விற்பனை தீவிரமாக நடக்கும். இதன் மூலம் ஆண்டிற்கு, 20 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது.

மாங்கன்றுகள் வளர்ப்பு, விற்பனை மூலம் சந்தூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மாஞ்செடி உற்பத்தி: பலருக்கு வேலை வாய்ப்பு

  1. SIVA Jeyaraj says:

    எனக்கு மாங் கன்று வேன்டும். எவ்வாறு உங்கனள அனுகுவது?

    என்னுனடய நம்பர்: 9944232824

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *