இப்போது மா மரம் பூக்கத் தொடங்கி உள்ளது. சித்திரையில் பழம் கிடைக்கும். இப்போது மாம்பூவைச் சரியாகப் பராமரித்தால் மகசூல் அதிகரிக்கும்.
- பூ பூக்கும் நேரத்தில் பூ பிணைக்கும் புழு தாக்குதல் காணப்படும்.
- இந்தப் புழு பூ அருகே வலை போன்று உருவாக்கி பூவைச் சாப்பிடும். இதனால் மகரந்தச் சேர்க்கை நடக்காது. மகசூல் பாதிக்கும்.
- பூ பிணைக்கும் புழுவைக் கட்டுப்படுத்த கியூரா கிரான் பூச்சி மருந்தை 1 லிட்டர் நீரில் 2 மி.லி. என்ற அளவில் கலந்து பூ மீது தெளிக்க வேண்டும்.
- தெளிக்கும்போது மெதுவாகச் செய்ய வேண்டும்.வேகமாக தெளிப்பானைப் பயன்படுத்தினால் பூ உதிர்ந்துவிடும்.
- 3 வயது வரை உள்ள ஒரு மரத்துக்கு 5 லிட்டர் அளவு தேவைப்படும். 3 முதல் 15 வயது வரை உள்ள மரத்துக்கு 10 லிட்டர் தேவைப்படும். அதற்கு மேல் உள்ள மரத்துக்கு 25 லிட்டர் தேவைப்படும்.
- பூ கருகுவதைக் கட்டுப்படுத்த என்டோ சல்பான் 35 இசி என்ற மருந்தை 1 லிட்டர் நீரில் 2 மி.லி. என்ற அளவிலும் அதனுடன் கார்பன்டைசைம் என்ற பூஞ்சான மருந்தை 2 கிராம் வீதம் 1 லிட்டர் நீரில் கலந்து பூ மீது தெளிக்க வேண்டும்.
- மா பூத்திருந்தால் நாப்தலின் அசிட்டிக் அமிலம் 20 பிபிஎம் என்ற அளவில் தெளிப்பதால் பூ உதிராமல் தடுக்கப்படும்.
- மா மரத்தில் தண்டுப் பகுதி, கிளைப் பகுதியை தத்துப்பூச்சி சாறு உறிஞ்சும். இதுவும் மகசூல் பாதிக்கக் காரணமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த அசிபேட் 75 எஸ்பி என்ற கரையும் பவுடரை 1 கிராம் அளவுக்கு எடுத்து 1 லிட்டர் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.
- அத்துடன் கார்பரைல் பூச்சி மருந்து 50 டபிள்யூபி என்ற பவுடரை 2 கிராம் அளவுடன் 1 லிட்டர் நீர் வீதம் கலக்க வேண்டும். இந்த இரண்டு கலவையும் ஒன்றாகக் கலந்து பூ, தண்டு, கிளைகளில் தெளிக்க வேண்டும். இதனால் தத்துப்பூச்சி தாக்குதல் குறையும்.
- இரண்டு நாள் இடைவெளியில் நனையும் கந்தகம் 1 லிட்டர் நீரில் 2 கிராம் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் தத்துப்பூச்சி தாக்குதல் மேலும் குறையும்.
- பொட்டாஷியம் நைட்ரேட் ரசாயன கலவையை 1 லிட்டர் நீரில் 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
- இதனால் பூ பூக்காத மரங்கள் பூ எடுக்கும். பூ சிறியதாக இருந்தால் அதைப் பெரிதாக்க பொட்டாஷியம் நைட்ரேட் ரசாயன கலவையை 1 லிட்டர் நீரில் 20 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் வல்லுநர் என். விஜயகுமார் கூறினார்.
முழு விவரங்களுக்கு:தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்