மாம்பழங்களை பாதுகாக்க பயோகோட்டிங் முறை!

முக்கனிகளில் ஒன்று மா. இது கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது. இப்பழம் மதிப்பு கூட்டு தொழில்நுட்பத்தின்படி சாறாகவும், ஜாமாகவும் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. இப்பழங்கள் இயல்பாகப் பறித்த நாளில் இருந்து சுமார் 4-வது நாள்களுக்குப் பிறகு பழுக்கத் தொடங்குகிறது. சுமார் 12 நாள்கள் வரை சாப்பிடுவதற்கு நல்ல நிலையில் இருக்கிறது. அதன் பின்னர் சுருங்குதல் மற்றும் அழுகல் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 1.28 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 7 லட்சம் டன் மாம்பழம் உற்பத்தியாகிறது. தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேருக்கு 5,480 கிலோ மாம்பழம் கிடைக்கிறது. இப்பழங்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பழங்கள் குறைந்த நாள்களுக்குள் குறிப்பிட்ட இடத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. சில நேரங்களில் நீண்டதூர போக்குவரத்திலும் பயணிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக மாம்பழங்கள் அழுகி வீணாகும் நிலை ஏற்படுகிறது. மேலும் விற்பனைக்கு வந்து விற்பனையாகாத நிலையில் சில தினங்களிலேயே இப்பழங்கள் அழுகி வீணாவது, ஆண்டுதோறும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பெரும் பிரச்னையாகவே இருந்து வருகிறது.

இதை குளிரூட்டு முறையில் பாதுகாப்பதும், குளிரூட்டு வசதி கொண்ட வாகனங்களில் கொண்டு செல்வதும் கூடுதல் செலவை ஏற்படுத்தும். இதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு விவசாய அமைச்சகம், இந்திய விவசாய ஆராய்ச்சிக் குழுவின்  கட்டுப்பாட்டில் லூதியானாவில் இயங்கி வரும் சிப்பெட் நிறுவனம் மா மற்றும் கொய்யா பழங்கள் அழுகும் காலத்தை தள்ளிப் போடுவதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.

தாவரப் பொருள்களில் இருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை கொண்டு, மாம்பழம் மற்றும் கொய்யா மீது பூசுவதன் மூலம் இப்பழங்கள் பழுக்கும் காலத்தை மேலும் 4 நாள்கள் தள்ளிப்போவதை அறிந்தனர்.

இது குறித்து சிப்பெட் நிறுவனத்தின் தோட்டக்கலைத் துறை விஞ்ஞானி ரமேஷ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியது:

  • இந்தியாவில் விவசாயிகளின் உழைப்பில் கிடைக்கும் பழங்கள் விற்பனைக்கு வந்த சில தினங்களிலேயே சுருங்கியோ அல்லது அழுகியோ சாப்பிட முடியாத நிலைக்கு செல்கிறது.
  • இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் நஷ்டம் அடைகின்றனர். வியாபாரிகள் இதை விற்பனை செய்ய மெழுகு பூச்சுகளை பயன்படுத்துகின்றனர். இதனால் மனிதர்களின் உடல் நலத்துக்கு கேடாகலாம்.
  • அதனால் எங்கள் ஆராய்ச்சியில் உண்ணக்கூடிய பயோ கோட்டிங் ஸ்டார்ச் முறையை உருவாக்கி இருக்கிறோம். இந்த பயோ கோட்டிங் ஸ்டார்ச் தாவரப் பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
  • பழங்களுக்கு பயோ கோட்டிங் தருவதன் மூலம் அதை உண்ணும் மனிதனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
  • மேலும் பழங்கள் பழுக்கும் நாள்கள் தள்ளிப்போகிறது. வழக்கமாக 12 நாள்கள் வரை தாங்கும் பழங்கள் ஸ்டார்ச் பயோ கோட்டிங் மூலம் மேலும் கூடுதலாக 4 நாள்களுக்கு பழங்கள் பழுப்பதையும், பழுத்த பின் சுருங்குவதையும், அழுகுவதையும் தடுக்கலாம்.
  • இந்த முறை தற்போது சோதனையில் இருக்கிறது. சில குறைகள் நீக்கிய பின் இந்த முறை செயல்பாட்டுக்கு வரும்.
  • ஸ்டார்ச்சில் பல வகை இருந்தாலும் அதில் பயன்பாட்டில் இருப்பது சிட்டோசன், கசாவா ஆகிய வகைகள். இதில் சிட்டோசன் ஸ்டார்ச் 100 கிராம் ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • கசாவா (மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது) ஸ்டார்ச் கிலோ ரூ.25-க்கு கிடைக்கிறது. கசாவா ஸ்டார்ச் விலை குறைவு என்பதால் இது விவசாயிகளுக்கு உகந்தது.
  • ஒரு லிட்டர் தண்ணீரில் 50 கிராம் கசாவா ஸ்டார்ச் கலந்து அதை 10 குவின்டால் பழங்களுக்கு பயன்படுத்தலாம்.
  • ஸ்டார்ச் கலந்த நீரில் பழங்களை அமுக்கி எடுóத்து, 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்த வேண்டும்.
  • பின்னர் அப்பழங்களை வெளியூருக்கு அனுப்பும் பணிகளை தொடரலாம்.
  • இந்த பயோ கோட்டிங் முறை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *