இந்நோய் தமிழ்நாட்டில் பயிரிடப்படும் எல்லா மாந்தோப்புகளிலும் காணப்படுகிறது. எல்லா வகை மாமரங்களிலும் தோன்றுகிறது. இது பெரும்பாலும் டிசம்பர் முதல் மார்ச்சு மாதம் வரையிலும் காணப்படுகிறது. இந்நோயினால் 5 முதல் 20 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது என கணிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள்
- இந்நோய் தாக்கப்பட்ட தாவர பாகங்களின் மேல் வெண்மையான பஞ்சு போன்ற வளர்ச்சி காணப்படும்.
- இது இலை மொக்குகளிலும், பூக்களிலும் , இளம் பிஞ்சுகளிலும், முதிர்ந்த இலைகளிலும் காணப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட இலைகளின் பசுமை நிறம் குறைந்து விடும். மேலும் இலைகள் பழுத்து காய்ந்துவிடும்.
- பூக்காம்புகளில் காணப்படும் வெண்மை நிற வளர்ச்சி நாளடைவில் கறுப்பு நிறமாக மாறி விடுகின்றது. பிறகு இவை வாடி கீழே விழுந்து விடுகின்றன.
- இந்நோயினால் முதிர்ந்த பிஞ்சுகளிலுள்ள காம்புகளில் வெடிப்பு காணப்படும். முதிர்ச்சி அடையாத பிஞ்சுகள் கீழே விழுந்து விடுகின்றன.
- இதனால் ஒரு மரத்திலுள்ள காய்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து விடுகின்றது. மேலும் மரத்தின் காய்ப்புத் திறனும் குறைந்து விடுகின்றது.
பரவுதல்
- இந்நோய் ஒரு பருவத்திலிருந்து மற்றொரு பருவத்திற்கு பாதிக்கப்பட்ட இலைக் கொத்துக்களின் மூலமாகப் பரவுகின்றன.
- இந்நோயின் பூசண வித்துக்கள் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு காற்றின் மூலம் பரவுகின்றது.
கட்டுப்பாடு
- இந்நோயைத் தடுக்க ஒரு மரத்திற்கு 1/2 கிலோ முதல் 1 கிலோ வரை கந்தகத் தூள் மருந்தைத் தூவவும்.
- கரையும் கந்தக மருந்தை (10 லிட்டர் தண்ணீரில் 50 கிராம் மருந்து என்ற விகிதத்தில் கரைத்து) தண்ணீரில் கரைத்தும் தெளித்தும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
- மேலே குறிப்பிட்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மரம் பூ விடுவதற்கு முன்பு ஒரு முறையும் பிஞ்சு பிடித்த பிறகு ஒரு முறையும் தூவுவதோ, தெளித்தலோ வேண்டும்.
- இச்சாம்பல் நோயும் தத்துப்பூச்சியும் ஒன்றாகத் தோன்றுவதால் பூசணக் கொல்லி மருந்துடன் டீ.டீ.டி 50 சத மருந்தையும் (10 லிட்டர் தண்ணீரில் 40 கிராம் மருந்தை கரைத்து) கலந்து தெளிக்க வேண்டும். இம்முறையை கடைப்பிடிப்பதால் தத்துப்பூச்சியும் சாம்பல் நோயும் ஒரே சமயத்தில் கட்டுப்படுத்தப்படுகிறது. மரத்தின் வளர்ச்சியை் பொறுத்து மரம் ஒன்றுக்கு 10 முதல் 40 லிட்டர் தெளித் திரவம் தேவைப்படும்.
நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்