தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டரில் மா சாகுபடி செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாவட்டத்தில் 90 சதவீதம் மா மானாவாரியாக அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மாவைத் தாக்கும் மிக முக்கியமான நோய்கள் குறித்தும், அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் கிருஷ்ணகிரி டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சந்தாராஜ் கூறியது:
சாம்பல் நோய், பறவைக் கண் நோய், கருமை நோய், இளஞ்சிவப்பு நோய், பாக்டீரியல் கேன்கர் நோய் போன்றவை மாவைத் தாக்கும் முக்கிய நோய்களாகும்.
தற்போது நிலவும் தட்ப வெப்ப நிலை காரணமாக மாவில் சாம்பல் நோயின் பாதிப்பு அதிக அளவு ஏற்பட வாய்ப்புள்ளது.
சாம்பல் நோய் காரணி மற்றும் பரவுவதற்கு ஏற்ற காலநிலை:
- இது ஒரு வகையான பூஞ்சண நோய் ஆகும். பெரும்பாலும் இந்த நோயின் தாக்குதல் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை காணப்படும்.
- இந்த நோய் காற்றின் மூலமும், நல்ல ஈரப்பதம், மிதமான பகல் நேர வெப்ப நிலை, குளிர்ந்த இரவுப் பொழுது ஆகிய நேரங்களில் நோய் வேகமாகப் பரவும்.
நோயின் அறிகுறிகள்:
- நோய் தாக்கிய பாகங்களின் மேல் வெண்மை அல்லது சாம்பல் பொடி தூவியதைப் போன்ற தோற்றத்தில் பூஞ்சண வளர்ச்சி தென்படும்.
- இந்த நோய் பூங்கொத்துகள், தளிர் இலைகளை அதிகம் பாதிப்படையச் செய்கிறது.
- பூங்கொத்தின் நுனிப் பகுதியை பூஞ்சணம் முதலில் தாக்கி பின்னர் நோய் கீழ் நோக்கிப் பரவி, பூங்கொத்து முழுவதையும் தாக்கும். பின்னர் பூங்கொத்தின் தண்டு, தளிர் இலைகள், கிளைகள் ஆகிய பாகங்களையும் தாக்குகிறது.
- தாக்கப்பட்ட பூவின் பாகங்கள், தளிர் இலைகள் கரிந்து, காய்ந்து உதிர்ந்துவிடும். பிஞ்சுக் காய்கள் தோன்றினாலும், அவை விரைவில் உதிர்ந்துவிடும் அல்லது உருவம், நிறம் மாறி காணப்படும்.
- கிளைகள் நுனியிலிருந்து, கீழ் நோக்கிக் காய்ந்து, பின்னோக்கிக் கரிதல் அறிகுறியை தோற்றுவிக்கும்.
- காய்ப் பிடிப்பு குறைவதாலும், அதிக அளவில் பூக்களும், காய்களும் உதிர்ந்துவிடுவதாலும், நோய் தாக்கப்பட்ட மரங்களில் மகசூல் இழப்பு 70 முதல் 80 சதவீதம் வரை இருக்கக் கூடும்.
நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- பின்னோக்கிக் கருகல் அறிகுறிகள் தென்படும் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும்.
- நிலத்தில் கிடக்கும் நோய் தாக்கிய இலைகள், பூங்கொத்துகள், கிளைகள் போன்றவற்றை சேகரித்து எரித்து விட வேண்டும்.
- பூக்கள் விரிவதற்கு முன்னர் ஒரு முறையும், பிஞ்சுக் காய்கள் தோன்றிய பின்னர் ஒரு முறையும் நனையும் கந்தகத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் மருந்து என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
- இந்த வழிமுறைகளைக் கடைபிடித்து சாம்பல் நோயிலிருந்து மா மரத்தைப் பாதுகாத்து அதிக மகசூல் பெறலாம்.
தொடர்புக்கு: டாக்டர் பெருமாள், வேளாண்மை அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி, கிருஷ்ணகிரி மாவட்டம். தொலைபேசி 04343-296039, 09443888644.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்