மாமரங்கள் பூத்துள்ள நிலையில் வெயிலில் பளபளவென்று இலைகள் மின்னுகின்றதா… கவனம் தேவை!
இலைகளை தொட்டு பாருங்கள். தேன் தெளித்தது போல பிசுபிசுப்பாக உள்ளதா. இலைக்கு மேலுள்ள பூங்கொத்துகளை தத்துப்பூச்சி தாக்கியுள்ளது என்று அர்த்தம். உற்று பார்த்தால் சிறிய பழுப்புநிற பூச்சிகளை பார்க்கலாம்.
இவற்றின் முட்டைகளை இளங்குருத்து, பூங்கொத்து, இலைகளின் காம்புகளை துளைத்து வைக்கின்றன. முட்டை உட்செலுத்தப்பகுதி மேற்புறத்தில் வாடி கருகிவிடும்.
முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் மற்றும் முழு வளர்ச்சியடைந்த பூச்சிகள் இலைகுருத்து, பூங்கொத்துகளின் சாற்றை உறிஞ்சுகின்றன. இதனால் பூங்கொத்துகள் வலுவிழக்கின்றன. இவை வெளியேற்றும் தேன்பாகு போன்ற கழிவுகள் இலைகளின் மீது படிந்து கரும்பூசணம் வளர்ந்து ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுகிறது.
நெருக்கி நடப்பட்ட தோப்புகளில் சேதம் அதிகமாகும். மல்கோவா, நீலம், செந்தூர ரகங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.
பாதிப்புக்குள்ளான பூங்கொத்துகளை கவாத்து செய்து அகற்றி அழிக்க வேண்டும். காய்ந்த சருகுகளை தீயிட்டு புகைமூட்டம் செய்து தாக்குதலை
குறைக்கலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒன்றரை மில்லி பாசலோன் அல்லது ஒரு கிராம் அசிப்பேட் அல்லது ஒன்றே கால் மில்லி மானோகுரோட்டோபாஸ் கலந்து ராக்கர் தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
–ம. குணசேகரன்,
பருத்தி ஆராய்ச்சி நிலையத் தலைவர்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்