இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல.

மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன.

பல்லுயிர் பெருக்கத்தை உடைக்கும் சீனா!

ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும், அழிவின் விளிம்பில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங்களை கண்டறிந்து அறிவிக்கும். அந்த வகையில் 2016-ம் ஆண்டுக்கான அறிக்கையில் உலகளவில் 61,007 விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்திய அளவில் 5,128 விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மொத்த தொகையில் 8.5 சதவிகிதம். இது குறித்து நம்மிடம் பேசிய திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக உயிரியல்துறை பேராசிரியர்  ராமசுப்பு, ‘‘காடுகளை அழித்து விளைநிலங்கள், குடியிருப்புகள், சுற்றுலாத்தளங்கள் அமைப்பது போன்ற காரணங்களால் வனவிலங்குகள் அழிந்து வருகின்றன. அதே நேரத்தில், சர்வதேச சந்தையில் வனவிலங்குகளுக்கும் அதில் இருந்து தயாரிக்கக்கூடிய மருந்துப்பொருட்களுக்கும் பெரிய சந்தை மதிப்பு உள்ளது. குறிப்பாக சீனா நாட்டின் மருத்துவமுறைகள் பெரும்பாலும் விலங்குகளைச் சார்ந்தே இருக்கின்றன.

புலிகளின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆண்மைதன்மையை அதிகரிப்பதாக சீனர்கள் நம்புகிறனர்.

இதே போல, காண்டாமிருகத்தின் கொம்பு, கரடியின் கணைய நீர், யானைகளின் தந்தம், முடி, தேவாங்கு தோல், நரியின் தலைப்பகுதி எலும்பு, பாம்புகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் என பல்லுயிர் பெருக்கத்தை உடைப்பதில் சீனாவின் மருத்துவமும், உணவு பழக்கமும் பெரும் பங்காற்றுகின்றன.

அதேப் போல, பிலிபைன்ஸ், நேபாளம், சீனா, இந்தோனேசியா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வனவிலங்குகள் அதிகளவில் வேட்டயாடப்படுகின்றன. சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்திய அளவில் வனவிலங்கு வேட்டை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் வேட்டையாடப்படும் வனவிலங்குகள் நேபாளம் வழியாக சீனாவுக்கு கடத்தப்படுகின்றன’’ என்றவர், இந்தியாவில் அழியும் தருவாயில் உள்ள விலங்கினங்களில் சிலவற்றின் பெயரை பட்டியலிட்டார்.

அழியும் நிலையில் அரணை, ராஜநாகம்!

‘‘மூர்லண்ட் தட்டான் பூச்சி, பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்பட 675 பூச்சியினங்கள், 3,681 முதுகெலும்பிகள், மலபார் மரத்தேரை உள்ளிட்ட 267 இருவாழ்விகள், ரூபஸ் இருவாச்சி பறவை, மலபார் இருவாட்சி பறவை, நீலகிரி பைபட் பறவை உள்ளிட்ட 1,180 பறவையினங்கள், மெட்ராஸ் புள்ளி அரணை, ராஜநாகம் உள்ளிட்ட 306 ஊர்வன, சிவிங்கிபுலி, சிவப்பு பாண்டா கரடி, நம்தபா பறக்கும் அணில், காட்டு நீர் எருமை, சுமத்ரன் காண்டாமிருகம் உள்ளிட்ட 408 பாலூட்டிகள் விரைவாக அழிந்துக்கொண்டிருக்கின்றன. கரியல்வகை முதலைகள், ராமேஸ்வரம் பாராசூட் சிலந்தி, இந்தியன் பஸ்டர்ட், புதுச்சேரி சுறா,கொடி நாகம், குரைக்கும் மான், பச்சை ஆமை, ஆசியா ஆமை, ஆசியா காட்டுநாய், களக்காடு பாறை கெண்டைமீன், இந்திய எறும்புத்திண்ணி, சிறுத்தை, நீலகிரி பைபட், ஆசிய சிங்கம், புலி மற்றும் பனிசிறுத்தைகள் போன்றவை ஏற்கனவே அழியும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன’’ என்றார்.

‘எங்கோ ஒரு பட்டாம்பூச்சி பறப்பதற்கும்..உலகின் இன்னொரு மூலையில் அணுகுண்டு வெடிப்பதற்கும் சம்பந்தம் உண்டு. ஒவ்வொரு விளைவும் நிச்சயம் மற்றொரு விளைவை ஏற்படுத்தும். ஒவ்வொரு செயலும் கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளால் பிணைக்கப்பட்டுள்ளன’ என்ற கேயாஸ் தியரியின்படி (Chaos theory) பார்த்தால், இத்தனை உயிரினங்களின் அழிவு, பூவுலகுக்கு எத்தனை பேரழிவைக் கொண்டு வருமோ என்ற அச்சம் நெஞ்சை நடுங்கச் செய்கிறது.

இவ்வுலகில் சுதந்திரத்துடன் வாழ மனிதர்களுக்கு எத்தனை உரிமையுள்ளதோ அத்தனை உரிமைகளும் சின்னஞ்சிறிய நுண்ணுயிர்களுக்கும் உள்ளது என்பதை மனதில் இருத்தினாலே அழியும் பட்டியலில் இருந்து பல உயிர்களை மீட்கலாம்.

நன்றி: விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *