முதலை இரை தேடும் முறை மிகவும் தனித்துவமானது. நீரிலிருந்து கரைக்கு வந்து வாயைப் பிளந்து வைத்துக்கொண்டு சிலை போலப் படுத்துக்கிடக்கும். அதைப் பார்க்கும் உயிரினங்கள் அவற்றின் முன் பல கோமாளித்தனங்களைச் செய்ய அனுமதிக்கும். ‘இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சென்று அதை உசுப்பேத்தலாம்’ என்று நினைக்கும் வேளையில், முதலை ‘சடக்’கென்று தாவிப் பிடிக்கும்.
இதர உயிரினங்களைப் போன்று வேட்டையாடிய இரையை, அங்கேயே அந்த நிமிடமே கொன்று புசித்து விடாது. வேட்டையாடிய இரை, தன் பிடியிலிருந்து தப்பிச் சென்று விடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கை முதலைக்கு மிகவும் அதிகம். அதனால், தன் இரையை நீருக்கடியில் இழுத்துச் சென்று, அங்கே வைத்துக் கொன்று, அதன் பின்னரே உண்ண ஆரம்பிக்கும். ஏற்கெனவே, ‘முதலை வாயில் மாட்டிக்கொண்டோமே’ என்ற பயத்தில் வெலவெலத்துப்போன அந்த இரை, நீருக்கடியில் இழுத்துச் செல்லப்பட்டவுடன் ஒன்றுமே செய்ய இயலாது. சரணாகதிதான்!
‘யானைக்கு நிலத்தில் பலம். முதலைக்கு நீரில் பலம்!’ என்ற சொல்வழக்கு இப்படித்தான் வந்தது.
நீர்நிலையின் ஆதாரம்
புலி இருக்கும் காடு மிகவும் வளமானது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை முதலை இருக்கும் நீர்நிலை மிகவும் தூய்மையானது என்பதும்.
மனிதர்களுக்கு உணவாகும் மீன்களை வேட்டையாட வரும் ‘இரை கொல்லி’களை முதலை உணவாகக் கொள்கிறது. அந்த இரை கொல்லி இனங்கள் முதலைக்கு உணவாவதால், சிறிய மீன்கள் தப்பித்துவிடுகின்றன. இந்த மீன்கள் நீரில் உள்ள இதர சிறிய உயிரினங்கள், கழிவு போன்றவற்றை உண்டு குளத்தைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன.
தவிர, இறந்துபோன உயிரினங்களை உண்பது மற்றும் வேட்டையாடுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் எண்ணிக்கையைச் சமநிலையில் வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகளால், முதலையின் வாழிடமான நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் மிகவும் பாதுகாப்பானதாக அமைகிறது.
40-வது ஆண்டு
இந்தியாவில் சதுப்புநில அல்லது மக்கர் முதலை, உப்புநீர் முதலை மற்றும் கரியால் முதலை என மூன்று விதமான முதலைகள் வாழ்கின்றன. இவை அனைத்தும் தற்போது அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அதற்கு முக்கியக் காரணம், அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுவதுதான். இன்னொரு முக்கியக் காரணம், அவற்றின் தோலுக்காகக் கள்ளவேட்டையாடப்படுவது.
இவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 1976-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் சென்னை முதலைப் பண்ணை. சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் வடநெம்மேலியில் உள்ளது இந்தப் பண்ணை. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊர்வனவியலாளர் ரோமுலஸ் விட்டேகரும் அவருடைய மனைவி ஸாய் விட்டேகரும்தான் இந்தப் பண்ணையை நிறுவினார்கள். அந்தப் பண்ணை உருவாக்கப்பட்டு 2016 உடன் 40-வது ஆண்டு!
அழியும் நிலையில் உள்ள முதலைகளைக் காப்பாற்றும் ஒரு மரபணு வங்கியாக இந்தப் பண்ணை திகழ்கிறது. ஆரம்பக் காலத்தில் இவ்வாறு அழிவு நிலையில் உள்ள முதலைகளை ‘அடைப்பிட இனப்பெருக்கம்’ (கேப்டிவ் பிரீடிங்) மூலம் வளர்த்து, பின் அவற்றைக் காடுகளில் உள்ள நீர்நிலைகளில் விட்டுவந்தனர். ஆனால், இன்று காடுகளின் பரப்பளவு குறைந்துவரும் காரணத்தால் முதலைகளை முன்பு போல இயற்கையான வாழிடத்துக்கு அனுப்ப முடிவதில்லை.
இயற்கை பாதுகாவலர்களின் உத்வேகம்
உலகின் மிகச் சிறந்த ஊர்வனவியலாளர்கள் பட்டியலைத் தயாரித்தால், அதில் முதன்மை இடங்களில் இடம்பிடித்திருக்கும் பெயர் சென்னையின் ரோமுலஸ் விட்டேகர். பிறப்பால் அமெரிக்கரான விட்டேகர், ஏழு வயதிலேயே குடும்பத்துடன் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவர். முதலை, பாம்புகள் ஆகியவை குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர். தன் பணிகளுக்காக 2005-ம் ஆண்டு ‘பசுமை ஆஸ்கர்’ எனப்படும் மிக உயரிய விருதான ‘ஒய்ட்லி’ விருதைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பெற்றார். அதன்மூலம் கிடைத்த தொகையின் மூலம் கர்நாடக மாநிலத்தில் அகும்பே எனும் இடத்தில் கருநாகங்கள் (ராஜநாகம்) குறித்த ஆய்வைச் செய்வதற்கான ஆய்வகத்தை ஏற்படுத்தியுள்ளார். 73 வயதில் இப்போதும் சென்னையின் முக்கியக் காட்டுயிர் சந்திப்புகளில் விட்டேகரை பார்க்கலாம்.
உலக ஊர்வன பண்ணை
உலக அளவில் மொத்தம் 23 வகையான முதலை இனங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் 17 வகையான முதலை இனங்கள் இந்தப் பண்ணையில் உள்ளன.
உலகத்தில் உள்ள பல்லி இனங்களில் மிகவும் பெரியவை முதலைகள். அவற்றை மட்டும் காப்பாற்றினால் தங்கள் கடமை முடிந்தது என்று நினைக்காமல், ஆமைகள், பல்லிகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட இதர ஊர்வனவற்றையும் காப்பாற்ற வேண்டும் என்று அந்தப் பண்ணை நிர்வாகிகள் கருதினர். எனவே, இங்கு 2003-ம் ஆண்டு ‘ஊர்வனவியல் மையம்’ ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் பண்ணையைத் தொடங்கிய ரோமுலஸ் விட்டேகருக்கு ‘இந்தியாவின் பாம்பு மனிதன்’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. 1951-ம் ஆண்டு இந்தியா வந்தவர், பாம்புகள் தொடர்பான ஆய்வுகளில் ஈர்ப்புகொண்டு 1972-ம் ஆண்டு ‘சென்னைப் பாம்புப் பண்ணை’யைத் தொடங்கினார். இது கிண்டியில் குழந்தைகள் பூங்கா அருகேயுள்ளது.
பாம்பு பிடிக்கும் திறன் உள்ள இருளர்கள் வேலையில்லாத திண்டாட்டத்தால் படும் அவஸ்தையைப் பார்த்து, அவர்களுக்காகக் கூட்டுறவுப் பாம்புப் பண்ணை ஒன்றை 1978-ம் ஆண்டு தொடங்கினார். பாம்பு விஷத்துக்குச் சரியான விஷமுறிவு மருந்து, பாம்பு விஷம்தான். இருளர்கள் பாம்புகளைப் பிடித்துவர, அவற்றிலிருந்து விஷத்தை எடுத்து விஷமுறிவு மருந்து தயாரிப்பதற்கு அனுப்பி வைக்கிறது இந்தப் பண்ணை. முதலைப் பண்ணைக்கு அருகிலேயே இந்தக் கூட்டுறவுப் பண்ணையும் உள்ளது.
காலங்களைக் கடந்த ஈர்ப்பு
இந்த முதலைப் பண்ணைக்கு வரும் பார்வையாளர்களுக்கு இங்கிருக்கும் உயிரினங்களைப் பற்றி பொறுமையாக விளக்குவதுடன், உயிரினங்களைத் தத்தெடுப்பது, ஒரு நாள் விலங்கு காட்சி சாலைப் பொறுப்பாளராக இருப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவது, ஊர்வன பாதுகாப்பு தொடர்பான வகுப்புகளை நடத்துவது, ‘நைட் சஃபாரி’ போன்ற பல விஷயங்கள் இந்தப் பண்ணையின் சுருக்கமான சிறப்பம்சங்கள்.
இந்தியாவில் எளிதில் பார்க்க முடியாத முதலை, ஆமைகள், பல்லிகளை ஒரே இடத்தில் பார்க்க வாய்ப்பளிக்கும் முதலைப் பண்ணை காலம்காலமாகக் குழந்தைகள் முதல் பெரியோர்வரை ஈர்ப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
மேலதிக விவரங்களுக்கு: http://www.madrascrocodilebank.org/
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்