மானின் உணைவப் பங்குபோடும் கைவிடப்பட்ட குதிரை
‘கஜா’ ஓய்ந்துவிட்டது. பாதிக்கப்பட்ட மனிதர்கள், நிவாரணங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது விழுந்த வெளிச்சத்தில், பாதிகூடப் பாதிக்கப்பட்ட காட்டுயிர்களின் மீது விழவில்லை என்பது வரலாற்றுச் சோகம்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்துக்கு அருகில் உள்ள கோடியக்கரை காட்டுயிர் மற்றும் பறவைகள் சரணாலயம், இந்தியாவில் உள்ள மிக முக்கிய சரணாலயங்களில் ஒன்று. ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என்று அழைக்கப்படும் சாலிம் அலியின் முயற்சியால்தான் இந்தப் பகுதி, பறவைகளைப் பாதுகாக்கும் சரணாலயமாக 1967-ல் அறிவிக்கப்பட்டது. அப்படிப் பார்த்தால், அது 50-வது ஆண்டில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. ஈரநிலங்கள் பாதுகாப்புக்கான ‘ராம்சர்’ உடன்படிக்கையின் கீழ் வரும் பகுதியாகவும் இது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
இங்குதான் அழியும் நிலையில் உள்ள வெளிமான்கள் ஓரளவு நல்ல எண்ணிக்கையில் துள்ளித் திரிகின்றன. கடற்கரையையொட்டி இருக்கும் இந்தச் சரணாலயத்தில் பல்வேறுவிதமான கடல் பறவைகள் தென்படுகின்றன. வேறு நாடுகளிலிருந்து வலசை வரும் பறவைகளுக்கான புகலிடமாகவும் இது திகழ்ந்து வருகிறது.
வெள்ளக்காடாகிய சரணாலயம்
நாட்டு மரங்களும் வீழ்ந்தன!
இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட இந்தச் சரணாலயம், இன்று சீரழிந்து கிடக்கிறது. வீசிச் சென்ற புயலில், சில மான்கள் தூக்கி வீசப்பட்டன. மான்கள் துள்ளித் திரியும் புல்வெளி நிலம், மழை நீரால் வெள்ளக் காடாக மாறியிருக்கிறது. முழங்கால் அளவு நீரில் அவை ஓட முடியாமல், கஷ்டப்பட்டு மெல்ல மெல்ல நடந்து செல்கின்றன. பறவைகள் பல, காற்றோடு அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள் சாய்ந்தன. ‘கனோப்பி’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற மரக் கவிகை காணாமல் போய்விட்டது. இலைகள் உதிர்ந்து, கிளைகள் உடைந்து மொட்டையாகக் காட்சியளிக்கின்றன மரங்கள். இவற்றில் ஒதியம், நாவல் போன்ற பல நாட்டு மரங்களும் அடங்கும்.
வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரைக்குச் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. இதனால், அமர்வதற்குக்கூட இடமின்றி, அந்தப் பகுதியிலிருக்கும் குரங்குகள் எல்லாம் சாலையோரத்தில் குந்தியிருப்பதைப் பார்க்கும்போது மனம் கனக்கிறது.
“இந்தப் பகுதியில் நான் சுமார் 37 ஆண்டு காலமாக இருக்கிறேன். சுனாமி உட்படப் பல பேரிடர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற காட்டுயிர் இழப்பு எப்போதும் ஏற்பட்டதில்லை” என்கிறார் பறவையியலாளர் எஸ்.பாலச்சந்திரன். மும்பையில் உள்ள ‘பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக’ (பி.என்.ஹெச்.எஸ்) விஞ்ஞானியான இவர், இங்கு பல ஆண்டுகளாகப் பறவைகளுக்கு வளையமிடும் பணியைச் செய்து வருகிறார்.
பறவைகளுக்கு வளையமிடுவது மூலம், ஒரு பறவை எங்கெல்லாம் செல்கிறது, எவ்வளவு தூரத்துக்கு வலசை மேற்கொள்கிறது என்பது போன்ற பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். இந்தத் தகவல்களை வைத்து அந்தக் குறிப்பிட்ட பறவை இனத்தின் வாழிடங்களையும் வலசை வந்து செல்லும் பகுதிகளையும் பாதுகாக்க முடியும். இந்தியாவிலேயே பறவைக்கு வளையமிடுதலில் நிபுணத்துவம் பெற்ற ஒரே விஞ்ஞானி இவர் மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது!
மரத்தை இழந்த குரங்குகள்
‘வீடு’ இழந்த பறவைகள்
கோடியக்கரை சரணாலயம், உலர் பசுமைக் காடுகள் நிறைந்த ஒரு பகுதி. தவிர, புல்வெளிகள் அதிகம் நிறைந்திருக்கும் பகுதியும் இதுதான்.
“இந்தப் புயலால், மரங்களிலிருந்த இலைகள் எல்லாம் உதிர்ந்துவிட்டன. இதனால் மரங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டது. இதனால் சூரிய வெளிச்சம் நேரடியாக விழும். அதுபோன்ற நேரத்தில், விதைப் பரவல் மூலமாக கருவேல மரங்கள் முளைப்பதற்குச் சாத்தியங்கள் உள்ளன.
அப்படி மரங்கள் அதிகமானால், மான்களுக்குத் தேவையான திறந்தவெளி நிலம் பறிபோகும். அது மான்களுக்குக் கேடாய் முடியும். மேலும், இந்தப் புயலில் நூற்றுக்கணக்கில் மான்களும் ஆயிரக்கணக்கில் பூநாரைகளும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கின்றன. ஆனால், அந்த இழப்புகள் குறித்த சரியான கணக்குகள் யாரிடமும் இல்லை” என்கிறார் பாலச்சந்திரன்.
உப்பைக் காப்பாற்றிய பனை
மணில்காரா ஹெக்சாண்ட்ரா எனும் அறிவியல் பெயரைக் கொண்ட பாலை மரங்கள் இங்கு நிறைந்திருக்கின்றன. இந்த மரங்கள், பழ உண்ணிப் பறவைகளுக்கான முக்கியமான வாழிடங்களாகும். அவை இந்தப் புயலில் வேரோடு சாய்ந்துவிட்டன. அதனால் பல பறவைகள் உணவின்றித் தவித்து இறந்துவிட்டன. சில வேறிடங்களுக்குப் பறந்துவிட்டன.
கோடியக்கரையின் கடற்கரையோரம் நடந்து சென்றால், பறவைகள் இறந்ததற்கான சான்றை, காற்றே காட்டிக் கொடுக்கிறது. சரணாலயமோ மயான அமைதியுடன் காட்சியளிக்கிறது. ‘அதுதான் பறவைகளும் மான்களும் இறந்துவிட்டனவே. நாம் என்ன செய்ய முடியும்?’ என்று மெத்தனமாக இருந்துவிட முடியாது. காரணம், இந்தப் புயலுக்குத் தப்பித்த காட்டுயிர்களுக்கு வேறு மாதிரியான பிரச்சினைகள் இருக்கின்றன.
உப்புக்கு அருளிய பனை
கோடியக்கரை சரணாலயம் சுமார் 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்குள்ள மான்களுக்கு, புல்தான் முக்கியமான உணவு. மழை பெய்த பிறகு, இங்கே புல் வளம் அதிகமாக இருக்கும். அப்போது இந்தச் சரணாலயத்துக்கு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குதிரை, மாடுகள் போன்ற கைவிடப்பட்ட கால்நடைகள் வந்து மேயும். அதனால் இங்குள்ள மான்களுக்குப் புல் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
ஒரு மாடு, சுமார் 4 அல்லது 5 மான்கள் உண்கிற அளவுக்குப் புல்லை உண்ணும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது பெய்திருக்கும் மழையால், சில வாரங்களுக்குப் பிறகு, அங்கே புதிதாகப் புற்கள் முளைக்கும். அப்போது கால்நடைகள் இங்கு வந்து மேய்வதை வனத்துறை தடுத்தால், அது ஓரளவு மான்களுக்கு நலம் பயக்கும். நாய் போன்றவற்றால் மான் குட்டிகள் வேட்டையாடப்படுவதும் தொடர்ந்து நிகழ்கிறது.
வழக்கம்போல, எந்தப் புயல் வந்தாலும் தாக்குப்பிடித்து நிற்கிற பனை மரங்கள், இந்தப் புயலிலும் மண்ணின் மீதான தங்களின் பிடிப்பைக் காட்டியிருக்கின்றன. வேதாரண்யச் சாலையின் இருபுறங்களிலும் உப்பளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உப்பு, மலை போலக் குவிக்கப்பட்டிருக்கிறது. அவை காற்று, மழையில் கரைந்துவிடாமல் இருக்க, பனை ஓலையால் வேயப்பட்ட கூரைகள் அந்த உப்புக் குன்றுகளின் மீது கவிழ்க்கப்பட்டுள்ளன.
பாலச்சந்திரன்
இந்தக் கூரைகளைக் கொண்டிருந்த உப்புக் குன்றுகள் தப்பித்துவிட்டன. ஆனால், பிளாஸ்டிக் விரிப்பு போர்த்தப்பட்டிருந்த உப்புக் குன்றுகள் பல்லிளித்துவிட்டன. ‘உப்பளங்களால் சூழல் கெடுகிறது’ என்கிறார்கள். அவற்றுக்கும் அருளியிருக்கிறது பனை..!
“வேர் மண்ணில் இருக்க, ஓரளவு சாய்ந்த மரங்களை மனிதர்கள் நிமிர்த்திவிடலாம். ஆனால், பாதிப்புக்கு உள்ளான காடு, மீண்டும் தாமாகவே துளிர்த்து எழும். அதற்கு இன்னும் 5 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம். அந்தத் துளிர்ப்பு பறவைகளாலேயே நிகழும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த தாவரவியலாளர் நரசிம்மன்.
பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமல்ல என்பதை இப்போதாவது உணர்வோமா..?
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்