சென்னைக்கு மிக அருகில் வௌவால்கள் கிராமம்

திருப்போரூர் அருகே உள்ளது நந்தம்பாக்கம் கிராமம். இங்கே, வெளவால் மரம் என்று கேட்டால் குளக்கரை ஆலமரத்தை நோக்கி கை காட்டுகிறார்கள். சடைசடையாய் தொங்கும் மாங்காய் போல அந்த ஆலமரத்தில் வௌவால்கள் எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும். சுற்றிலும் பசுமையான  வயல்வெளிகளுடன் சாலை ஓரத்தில் உள்ள குளக்கரையில் அந்த ஆலமரம் இருக்கிறது.

வெளவால்  மரம்

எப்போது சென்றாலும் கீச்…கீச்… என வௌவால்கள் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. கிளைகள் முழுவதிலும் கறுத்த வௌவால்களால் தொங்குகின்றன. நாய் போன்ற சிறிய முகம், செம்பட்டை உடல், நீளமான கறுப்பு இறக்கைகள், கூரிய நகங்களுடன் கூடிய கால்கள் என வௌவால்கள் தொங்கிக் கொண்டிருப்பதை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வௌவால்களை உற்றுப்பார்க்கும்போது, அடிக்கடி நாக்கை நீட்டியும் இறக்கைகளை விரித்து அசைத்துக்கொண்டிருப்பதும் தெரியும்.

வௌவால்

அங்கிருந்த உள்ளூர் பிரமுகர்களிடம் பேசினோம் “இந்த வௌவால்கள் எப்போது இந்த ஊருக்கு வந்ததென்றே தெரியாது. சுமார் ஆறு தலைமுறைக்கும் மேலாக இந்த மரத்தில் வௌவால்கள் தொங்கிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்த மரத்தோட வயசும் 300 வருடத்திற்கு மேல் இருக்கும். 1968ல் வீசிய புயலில் நிறைய வௌவால்கள் இறக்கைகள் ஒடிந்து இறந்துபோனது. ஆனாலும் இந்த மரத்தை விட்டு வௌவால்கள் போகவில்லை. இந்தவகையான வௌவால்கள் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும். மாலை ஆறுமணிக்கு மேல், இருட்டிய பிறகுதான் இரை தேட கிளம்பும்.  அதற்காக 30 கி.மீ. தூரம்வரை பயணிக்கும். பொழுது விடிவதற்கு முன் ஊருக்கு வந்துவிடும். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் வௌவால்கள் ஆலமரத்திற்கு வரத் தொடங்கி விடுகின்றன. வரும்போது கீச்.. கீச் என அவை சத்தம் எழுப்பிக் கொண்டே வரும். அந்த சத்தம் கேட்டதும் பொழுது விடிந்ததை உணர்வோம். பெண்கள் எழுந்து வீட்டு வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஆண்கள் விவசாய வேலைக்கு புறப்படுவார்கள்.

மரக்கிளையில் வௌவால்கள்

ஒவ்வொரு வௌவாலும் சுமார் ஒரு கிலோ எடை இருக்கும். இந்த  வௌவால்களை வேட்டையாடுவதற்கென்றே பதினைந்து இருபது வருடத்திற்கு முன் சிலர் எங்கள் கிராமத்தில் வந்து தங்கினாங்க. வந்தவங்க வலையைக் கட்டி வௌவால்களை பிடிப்பதை கேள்விப்பட்டு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களை விரட்டியடித்தோம். அப்போதிலிருந்து, இந்த ஊர் எல்லைக்குள் வௌவால்களை யாரும் வேட்டையாடக்கூடாது என கட்டுப்பாடு போட்டு வௌவால்களை பாதுகாத்து வருகின்றோம். சில வருடங்களுக்கு முன் ஆலமரத்தின் சிலகிளைகள் தீப்பிடித்து எரிந்துவிட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் வௌவால்கள் மீண்டும் இங்கேயே தொடர்ந்து தங்கிவருகின்றன. எவ்வளவு பெரிய மரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  இருந்தாலும், இந்த வௌவால்கள் அங்கே தங்வதில்லை. எவ்வளவு தொலைவிற்கு இரைதேடச் சென்றாலும் மறக்காமல் இங்கே வந்துவிடும். அதனால நாளடைவில் இந்த மரத்திற்கு ‘வௌவால் மரம்னு பேர் வந்தது.

மரக்கிளையில் வௌவால்கள்

இப்ப  வெளிநாட்டுகாரர்கள் எல்லாம் இந்த இந்த ஆலமரத்தை வந்து பார்த்துவிட்டு போறாங்க. வௌவால்கள் இருந்தால் ஊருக்கு நல்லதில்லை என சிலர் சொல்வாங்க. ஆனா இதுவரைக்கும் எங்க ஊருக்கு எந்த தீமையும் வரவில்லை. எல்லோரும் சந்தோஷமாத்தான் இருக்கிறோம்” என்கிறார்கள்.

நன்றி: விகடன்

உங்களுக்கு தெரியுமா?

வௌவால்கள் பறவை இனத்தை சார்ந்தவை அல்ல. அவை நம்மை போன்று குட்டி போட்டு பால் கொடுக்கும் வகையை சேர்ந்தவை.

இந்த வகை பெரிய வௌவால்கள் பெயர் பழந்திண்ணி வௌவால். இவை பழங்களை ரசித்து தின்னும். சிங்கப்பூ செரி என்ற பழம் இவற்றிக்கு நல்ல இஷ்டம்!

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *