தமிழக வனப்பகுதிகளில், புலிகள் பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில், இந்த ஆண்டு, 15 புலிகள் இறந்துள்ளன. தேசிய அளவில், புலிகள் இறப்பில், தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
குறிப்பாக, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டிய பகுதிகளில், அதிகளவில் புலிகள் இறந்துள்ளன. மேலும், கடந்த ஆண்டு, இரண்டு புலிகள்; இந்த ஆண்டில், 12 புலிகள் இறந்தது குறித்த விசாரணை இன்னும் முடியவில்லை.
இதுகுறித்து, ‘ஓசை’ சூழல் அமைப்பின் தலைவர், காளிதாஸ் கூறியதாவது:
புலியின் வாழ்நாள், 10-14 ஆண்டுகள் மட்டுமே. 2000ல் பிறந்த புலிக்குட்டியின், இறப்பு காலம் இது. நாடு முழுவதும், வேட்டைக்காரர்களால், புலிகள் கொல்லப்பட்டன. அப்போது, புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தான், புலிகள் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தமிழகத்தில் புலி வேட்டை இல்லை. எனினும், தமிழக புலிகள் காப்பங்களில், புலிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, சர்வதேச வேட்டைக்காரர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இறப்பதால் நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. அதே நேரத்தில், அதற்கான உண்மையான காரணம் தெரிந்து, புலிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம். மேய்ச்சல் விலங்குகளை புலிகள் கொல்வதால், அவற்றை விஷம் வைத்து கொல்வதும் நடக்கிறது. இதை தடுக்க, விவசாயிகளுக்கு நீண்டகால திட்டம் மற்றும் இறக்கும்விலங்குகளுக்கான இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும்.
தேசிய அளவில், 30 ஆண்டுகளுக்கு முன், புலிகள் எண்ணிக்கை, 40 ஆயிரமாக இருந்தது. தற்போது, 1,700 மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது. வட மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் புலிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இந்தாண்டு, நீலகிரியில் ஒரு புலி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது. புலிகளுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், மூன்று புலிகள் கொல்லப்பட்டன. கடந்த ஆண்டு, வேட்டையில், ஒரு புலியும், இந்த ஆண்டு, விஷம் வைத்ததில், ஒரு புலியும் இறந்துள்ளன.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்