‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்… எங்கள் உலகம்…’
கண்ணதாசன் எழுதிய திரைப்பாடல் வரி இது. இந்தப் பாடலில் வருவதுபோல் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர்.
தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த மரநாய். பொதுவாகத் தென்னை அதிகம் வளர்க்கப்படும் பகுதிகளிலும் குறிப்பாகப் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணிப் பகுதிகளில் தென்னை மரங்களில் மரநாய்களின் தாக்கம் அதிகமுள்ளது.
இளநீர் சேதம்
தென்னை மரங்களில் உள்ள இளநீரை மட்டுமே மரநாய்கள் குடிக்கின்றன. தென்னங்குலைகளில் இளநீரில் வழுக்கை உருவாகும் 7-வது மாதத் தொடக்கத்தில் தன் கூரிய பற்களால் வட்டமாகத் துவாரமிட்டு கடைசி சொட்டு இளநீர்வரை பாளையிலேயே வைத்துக் குடித்துவிடுகின்றன. பின்னர்ச் சுமார் 8 10 அடிகூட எளிதில் தாவி, அடுத்த மரத்தின் மட்டையைப் பிடித்துவிடும். மரத்திலிருந்து இறங்கிவர நேர்ந்தால் தலைகீழாக இறங்கும்.
தகவமைப்புகள்
தாவிக் குதிக்க, எளிதில் மரமேறுவதற்கு உதவும் வகையிலும் மரநாயின் கால்கள் அமைந்துள்ளன. வால் பகுதி சமநிலைப்படுத்திக்கொள்ளவும், கூரிய பற்கள் காய்களை எளிதில் ஓட்டை போடவும் உதவுகின்றன. இரவு வாழ்க்கைக்கு உதவும் பார்வைத்திறன் மிகுந்த கண்கள், கடும் இருட்டிலும் பார்க்கும் சக்தியை இவற்றுக்கு அளிக்கின்றன. ஒரு நாயைப் போல் மோப்ப சக்தி கொண்டிருப்பதால் சரியான பக்குவத்தில் இளநீர்க் குலைகளை இது கண்டுகொள்ளும்.
மிகுந்த கூச்சச் சுபாவம் கொண்டவை. மனிதர்களைக் கண்டால் அறவே பிடிக்காது. பகலில் மரத்தின் கொண்டைப் பகுதிக்குள் படுத்து இவை தூங்கிவிடும். இரவில் நடமாடும்போதுகூட இவற்றின் சுவாசம் மேலடுக்குக் காற்றோடு கலந்து சென்றுவிடுகிறது. தவறுதலாகச் சிறு சப்தம்கூட எழுப்புவதில்லை.
மரநாய்கள் எல்லா ரகத் தென்னையின் இளநீர்க் குலைகளையும் கடித்துச் சேதப்படுத்தும். ஆனால், தென்னை மரங்களில் ஏற்படும் எல்லாத் தாக்குதல்களும் மரநாய்களால் மட்டும் ஏற்படுவதல்ல. பழந்தின்னி வௌவால்கள், மர எலிகள், அணில்களாலும் மரத்துக்குச் சேதம் ஏற்படும்.
தாக்குதலுக்குக் காரணம்
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் காடுகளில் காட்டு மரங்களில் ஆண்டுதோறும் கிடைக்கும் பல பழ வகைகள் என்னென்ன என்பது, அங்கு வாழும் மரநாய்களுக்கு நன்கு அத்துப்படி. எந்த வகை மரம், எங்கு, எந்த மாதங்களில் பழம் கொடுக்கும் என்பது இவ்விலங்குகளிடம் பதிந்து போயுள்ளது.
நமது நாட்டில் தென்னையைப் பெரும்பாலும் தனிப் பயிராக வளர்ப்பதால் காட்டு மரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. அதனால் மாற்று உணவு கிடைக்காமல் மரநாய்கள் தென்னையையே முற்றிலுமாகச் சார்ந்திருக்கின்றன.
கோகோ ஊடுபயிராகச் செய்யப்படும் இடங்களில், தென்னையில் தாக்குதல் குறைந்து கோகோ பழங்களில் தாக்குதல் அதிகமாக உள்ளது. இந்தோனேசிய காபித் தோட்டங்களில் வாழும் ஒரு வகை மரநாய்கள் அங்கு பயிர் செய்யப்படும் காபி பயிரில் காபிப் பழங்களைத் தின்று செரிக்காத கொட்டைகளைக் கழிக்கும். அவற்றின் கழிவிலிருந்து கிடைக்கும் கொட்டைகள் சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
விவசாயிகளின் தவறு
விவசாயிகள் மரநாய்களின் தாக்குதலைச் சமாளிக்க உணவில் நஞ்சு கலந்து மரங்களில் வைத்துவிடுகின்றனர். அவற்றைப் பெரும்பாலும் மரநாய்கள் உண்பதில்லை. மாறாக அணில், எலி, மயில், பருந்து போன்ற உயிரினங்கள் தவறுதலாக உண்டு இறந்துவிடுகின்றன. சில நேரம் மரத்திலிருந்து விழும் நஞ்சுணவு நாட்டுக்கோழிகள், கால்நடைகளைக்கூடக் கொன்றுவிடுகிறது.
கூண்டுப்பொறி வைத்து இதைச் சிலர் பிடித்துவிடுகின்றனர். அவ்வாறு பிடிபடும் உயிரினங்கள் டாஸ்மாக் கடைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு மிகுந்த விலைக்கு இறைச்சிக்காக விற்கப்படுகின்றன.
தென்னையின் முதல் எதிரி சிவப்புக்கூண் வண்டாகும். காண்டாமிருக வண்டும் மரங்களுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. நோய்களைப் பொறுத்தவரையில் சாறுவடிதல் நோய், தஞ்சை வாடல் நோய் ஆகியவை மரத்தையே காலி செய்துவிடுகின்றன. இவற்றையெல்லாம் மனதில் கொண்டால் மரநாய்களால் உண்டாகும் சேதாரம் ஒன்றுமேயில்லை. மரங்களுக்கு எந்தவித பெரிய பாதிப்பையும், இவை ஏற்படுத்துவதில்லை.
தென்னை விவசாயிகளாகிய நாம் செய்ய வேண்டியது தாக்குதல் நடக்கும்போது பதற்றமடையாமல், அவற்றை ஒரு இரவு விருந்தினராகக் கருதவேண்டியதுதான். ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்தால் சூழலியல் சமன்பாடு பாதிக்கப்படுவதில்லை. மேலும், இவை அரிய வகை உயிரினங்களாகப் பட்டியலிடப்பட்டு, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த உயிரினங்களை அழிப்பது தண்டனைக்குரிய குற்றமும்கூட.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்