பாம் ஆயிலும் சுமத்ரா புலியும்

நீங்கள் உபயோகிக்கும் பாம் ஆயில எப்படி சுமத்ராவில் உள்ள புலிகளை அழித்து வருகிறது தெரியுமா?

உலகம் சிறிதாகி கொண்டே செல்வதால் ஓரிடத்தில் உள்ள நுகர்வு எவ்வளோவோ கிலோமீட்டர் தள்ளி எப்படி அழிவை உருவாக்குகிறது என்பது பற்றிய தகவல்…

காட்டு விலங்குகள் குறித்த செய்திகளை விடாமல் படிப்பவர்களுக்கு இந்தக் கேள்வி நிறைய முறை தோன்றியிருக்கலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தவறாமல் ஒரு மிருக இனமோ, ஒரு பறவை இனமோ அழியும் தருவாயில் இருப்பதாகச் செய்தி வந்துவிடுகிறதே என்று! ஆனால், என்ன செய்ய, பச்சை நிறக் காடுகளின் மேல்தான் மனிதனுக்கு அவ்வளவு பிரியம். அதன் உள்ளே சென்று, அதை தன் வாழ்விடமாக மாற்றிக்கொள்ள முற்படுகிறான்.

அல்லது, எதற்கு இவ்வளவு மரங்கள் இடைஞ்சலாக வழியை மறித்து நிற்கின்றன என்று வெட்டி விடுகிறான். அது அவனுடன் பூமியை வாழ்விடமாகப் பகிர்ந்துகொண்டிருக்கும் பல வகை உயிரினங்களின் வீடு என்பது அவனுக்குப் புரிவதில்லை. இன்னொருவரின் வீட்டுக்குள் நுழையும் பழக்கம் மனிதனுக்கு இருக்கும்வரை இந்த வகை செய்திகள் தொடரத்தான் செய்யும்.

சரி, இந்த முறை அப்படி ஒரு பீதியை கிளப்பியிருக்கும் மிருகம், சுமத்ரா தீவில் வசிக்கும் சுமத்ரன் புலிகள் (Panthera tigris sondaica).

சுமத்ரன் புலி

புலி இனத்தைச் சேர்ந்த இவை கூட்டமாக இந்தோனேஷிய தீவான சுமத்ராவில் மட்டுமே (Endemic) உயிர் வாழ்கின்றன. தற்போது பல்வேறு காரணங்களுக்காக அதன் எண்ணிக்கை வேகமாக குறையத் தொடங்கியுள்ளது. 2000-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டுக்குள் மட்டும் 16.6 சதவிகிதம் குறைந்துள்ளது. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள், ஒன்று புலிகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவது, இரண்டு புலிகளை தோலுக்காக வேட்டையாடுவது. இங்கே வாழ்விடங்களை அழிப்பது பல்வேறு வகைகளில் அரங்கேறுகின்றன. மரங்களை வெட்டி வியாபாரம் செய்வது, மிக முக்கியமாக பாம் ஆயில் உற்பத்திக்காகக் காட்டை அழிப்பது என்று எண்ணற்ற கொடூர செயல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனால் எஞ்சி இருக்கும் புலிகளும், தங்களின் வாழ்விடங்களை இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுமத்ரன் புலி

சிங்கப்பூரில் உள்ள நன்யங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் (Nanyang Technological University) சேர்ந்த மேத்தியூ லுஸ்கின் தன் குழுவுடன் சேர்ந்து சுமத்ரன் புலிகள் எவ்வளவு எஞ்சி உள்ளன என்று கணக்கெடுக்கும் ஆய்வுக்காகக் காட்டுக்குள் சென்றனர், அவர்களின் முக்கியக் குறிக்கோள், ஒவ்வொரு புலிகளின் வாழ்விடத்திலும் எத்தனைப் பெண் புலிகள் எஞ்சியிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதுதான். எந்த வாழ்விடத்தில் எல்லாம் 25 பெண் புலிகளுக்கு மேல் இருக்கிறதோ, அங்கே ஆரோக்கியமான புலிகள் நிச்சயம் பிறக்கும். மேலும், 25 பெண் புலிகளுக்கு மேல் இருந்தால், உள்ளினச்சேர்க்கையையும் தடுக்க முடியும். ஆய்வுசெய்ய கேமராக்களுடன் களம் இறங்கிய குழு, 70 வருடங்களுக்கு முன்னர், 12 வாழ்விடங்களில், ஆரோக்கியமான பெண் புலிகளின் எண்ணிக்கையுடன் வசித்ததாகக் கூறுகிறது. அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தற்போது அவ்வகை வாழ்விடங்கள் வெறும் இரண்டே இரண்டுதான் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளது. தீவின் வடக்கில் குனுங் லியுசர் என்ற இடத்தில் 48 பெண் புலிகளுடன் ஒரு குழுவும், தெற்கில் கெரின்சி செப்லாட் என்ற இடத்தில் 42 பெண் புலிகளுடன் ஒரு குழுவும் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. இதற்குக் காரணம் இந்தோனேசியாவில் காடுகள் பெரும் அளவில் அழிக்கப்பட்டதுதான்.

புலிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோன இந்த 2000-2012 காலகட்டத்தில் மட்டும், 60,000 சதுர கிலோமீட்டர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பொதுவாக, ஒரு புலிகள் கூட்டத்துக்கு வாழ்விடமாக 240 சதுர கிலோமீட்டர் இடம் தேவை. அது குறுகிக்கொண்டே வரும்போது புலிகள் செய்வது அறியாது திகைக்கின்றன. இயல்பாகவே, புலிகள் தங்கள் வாழ்விடத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு மிகவும் வருந்தும் குணமுடையவை. அவை எப்போதும் போகும் பாதையில் தடைகள் வந்தாலே கோபம் அடையும் குணம் கொண்டவை. இப்படியிருக்க, காட்டை அழிப்பது என்பது புலிகளை வன்கொடுமை செய்வதுபோல் ஆகும்.

சுமத்ரன் புலி

பாம் ஆயில் உற்பத்திக்காக இங்கே மரங்களை வெட்டி தொழிற்சாலைகள் கட்டப்படுவதால், பசுங்குடில் வாயுக்கள் அதிகம் வெளியேறுகின்றன. இது எஞ்சியிருக்கும் மிருகங்களை மிகவும் பாதிக்கின்றது. இதைத் தவிர பசுங்குடில் வாயு வெளியேற மற்றுமொரு காரணம், சுமத்ரா தீவு ஒரு வெப்பமண்டல பீடம். அதன் அடியில் கார்பன் தனிமங்கள் நிறைய அளவில் காணப்படுகின்றன. ஒவ்வொரு முறை மரத்தை வெட்டும்போதும், இடத்தை அழிக்கும்போதும், அந்தக் கார்பன்கள் விண்ணில் கலக்கின்றன. மேலும், இங்கே பனை மரங்கள் நடப்படுவதால், மண்ணின் வளம் மிகவும் பாதிப்படைகிறது. அதற்காகப் போடப்படும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் போன்ற வேளாண் ரசாயன பொருள்கள் தண்ணீரையும், காற்றையும் மாசுபடுத்தி விடுகின்றன.

சுமத்ரா தீவைப் பொறுத்தவரை, இது இன்றோ, நேற்றோ தொடங்கிய பிரச்னை அல்ல. பல வருடங்களாகத் தொடரும் இன்னல்தான் இது. அங்கே காட்டை அழிப்பதால் அழிவின் விளிம்பில் இருக்கும் மிருகங்களில் சில, போர்னியோ பிக்மா யானைகள், சுமத்ரன் யானைகள், சுமத்ரன் புலிகள், சுமத்ரன் காண்டாமிருகங்கள் மற்றும் பல வகை ஒராங்குட்டான்கள். சோகம் என்னவென்றால், இந்த இன மிருகங்கள் அனைத்தையும் இந்தச் சுமத்ரா தீவில் மட்டுமே காண முடியும்.

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *