புலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிப்பு நிரூபணம்

புலிகளை பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ‘புலிகளை பாதுகாத்தால், அணைகள், ஆறு களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். மழையளவு அதிகரிக்கும்’ என வன அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி. உலகில் முன்பு 8 வகையான புலிகள் இருந்துள்ளன. அவற்றில் தற்போது எஞ்சியவை 5 இனங்கள் மட்டுமே. இந்த இனங்களில் தற்போது 4 ஆயிரத்து 600 முதல் 7 ஆயிரத்து 200 புலிகள் மட்டுமே உலக காடுகளில் உள்ளன.

இந்தியாவில் உள்ள புலிகள் இனம், ‘ராயல் பெங்கால் டைகர்’ என அழைக்கப்படுகிறது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது. அதன்பின், புலிகள் வாழ்விடத்தை அழித்து அவற்றை வேட்டையாடியதால் புலிகள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது.

சர்வதேச அளவில் மொத்த புலிகளின் எண்ணிக்கையில், இந்திய இனம் 60 சதவீதம் உள்ளது. இந்திய இன புலிகள், இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசத்தில் காணப்படுகின்றன. இதில் இந்திய காடுகளில் மட்டுமே 70 சதவீதம் புலிகள் காணப்படுகின்றன.

Courtesy: Hindu
Courtesy: Hindu

‘புலிகளை பாதுகாத்தால், நீர் வளத்தைப் பெருக்கலாம். அதன்மூலம், விவ சாயத்தையும், குடிநீர் ஆதாரத்தை யும் வளப்படுத்தி நாட்டை வளமாக் கலாம்’ என வன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முண்டந்துறை புலிகள் காப்பகம்

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

1972-ம் ஆண்டு, இந்திய காடுகளில் வாழும் புலிகளின் வாழ்விடங்களை காப்பகங்களாக அறிவித்து புலிகள் பாதுகாக்கப் படுகின்றன. இந்த வகையில், தற்போது இந்தியாவில் 40 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

இவற்றில் தமிழகத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் முக்கிய மானவை. 1988-ம் ஆண்டு இந்தியாவின் 17-வது புலிகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது.

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி, இந்த புலிகள் காப்பகத்தில்தான் உருவாகிறது. இதுதவிர, மணிமுத்தாறு, சேர்வலாறு, ராமநதி, கடனா நதிகளும் இந்த காப்பகத்தில்தான் உருவாகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தின் ஒட்டுமொத்த விவசாயமும் குடிநீர் ஆதாரமும் இந்த ஆறுகளை நம்பியே அமைந்துள்ளன. தாமிரபரணி ஆறு, கடந்த 1970-80ஆம் ஆண்டு காலகட்டத்தில் 4 முறை தண்ணீரின்றி வறண்டது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், இந்த புலிகள் காப்பகத்தை ஒட்டி வசிக்கும் மக்களுடைய வாழ்வாதாரம், அனைத்தும் இந்த காப்பகத்தை சார்ந்தே இருந்ததுதான்.

நீர்வளம் அதிகரிப்பு

தினமும் 3 ஆயிரத்து 215 தலைச்சுமை விறகுகளை, இந்த புலிகள் காப்பகத்தில் இருந்து மக்கள் எடுத்துச் சென்றனர். அது மட்டும் இல்லாது, சுமார் 22 ஆயிரம் கால்நடைகளை மக்கள் தினமும் இந்த காப்பகத்துக்குள் அழைத்து வந்து மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.

இவை தவிர மறைமுகமாக மரம் வெட்டுதல், வேட்டையாடுதல், போன்ற சம் பவங்களிலும் ஈடுபட்டனர். 1988-ம் ஆண்டில் புலிகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்ட பின்பு, உலக வங்கி மூலம் சூழல் மேம்பாட்டுத் திட்டம் 1995-ம் ஆண்டில் இந்த காப்பகத்தில் தொடங்கப்பட்டது.

கிராம மக்கள் காட்டினை நம்பி வாழும் மக்களுக்கு வனத்துறை மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்பட்டன. அதனால், இப்பகுதி மக்கள் புலிகள் காப்பகத்தை சார்ந்து வாழும் வாழ்க்கை முறை மாறி அவர்களுடைய வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்தது. இத்திட் டம் செயல்பாட்டுக்கு வந்த கடந்த 20 ஆண்டுகளில் இங்கு உருவா கும் நதிகளின் நீர் வளம் அதிகரித் துள்ளது.

பாதுகாப்பது கடமை

இதற்குச் சான்றாக இப்புலிகள் காப்பகத்தில் உள்ள கரையாறு அணையை எடுத்துக் கொள்ளலாம். இந்த அணையில் 1946-ம் ஆண்டில் இருந்து 1990-ம் ஆண்டு வரை அணைக்கு தண்ணீர் வரத்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கனஅடியாக இருந்து வந்துள்ளது. ஆனால், புலிகள் காப்பகம் தோற்றுவிக்கப்பட்ட பிறகு, அதாவது 1990-ஆம் ஆண்டுக்கு பின்பு, கரையாறு அணைக்கு வந்த சராசரி நீர்வரத்து (1990 முதல் 2010) 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேபோன்ற சேர்வலாறு அணைப் பகுதியில் 1990 முதல் 2000-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெய்த ஆண்டு சராசரி மழையளவு 654 மில்லி மீட்டர் ஆகும். ஆனால், 2000 முதல் 2010 வரையிலான பத்தாண்டு கால சராசரி மழையளவு 1183.5 மி.மீ.

எனவே, இப்புலிகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்ட 1988-ஆம் ஆண் டுக்கு பின்னர்தான், இங்கு உருவா கும் தாமிரபரணி நதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த புலிகள் காப்பகம் தான். ஆகவே, புலிகள் மற்றும் அது சார்ந்த வாழ்விடங்களைப் பாதுகாத்தால், நீர் வளத்தை பெருக்கலாம். வறட்சியை தவிர்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *