“மின்சாரம் தாக்கி யானை பலி” என்கிற செய்தி தினசரி செய்தித்தாள்களில் வந்துகொண்டே இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் மின்சாரம் தாக்கி இறந்த யானைகளின் எண்ணிக்கை 40-ஐ தாண்டுகிறது. மின்சாரம் தாக்கி என்கிற செய்திக்குப் பின்னால் இருப்பவை மின்சார வேலிகள்.
வன விலங்குகளிடமிருந்து தங்களையும் தங்களின் விவசாய நிலங்களையும் காப்பாற்றிக்கொள்ள நிலத்தைச் சுற்றிப் போடப்படுகிற வேலியே மின்சார வேலி. 9-ல் இருந்து 12 வாட்ஸ் மின்சாரத்தைத்தான் வேலிகளில் பயன்படுத்த வேண்டும். குறைந்த அழுத்த மின்சார வேலிகளை வனவிலங்குகள் தொடும்போது மின்சார அதிர்வை உணரமுடியும். அதனால் விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. மின்சாரம் இருக்கிற பயத்தால் மீண்டும் அவை வேலிகளுக்கு அருகில் வருவதில்லை. ஆனால், சிலர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உயரழுத்த மின்சாரத்தை வேலிகளில் பயன்படுத்துகிறார்கள். அப்படியான இடங்களில்தான் யானைகள் சிக்கி உயிரிழந்து விடுகின்றன.
சென்ற வாரம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் மின்சாரம் தாக்கி இரண்டு யானைகள் இறந்திருக்கின்றன. இது குறித்து வன அலுவலர் ஒருவரிடம் பேசினோம். “மின்சார வேலிகளால் விலங்குகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் ஆபத்து வருவது உண்மைதான். காடுகளில் இருந்து பல விலங்குகளும் விவசாய நிலங்களுக்கு வர ஆரம்பித்து விட்டன. அப்படி வருகிற விலங்குகள் விவசாய நிலங்களை அழித்து விடுகின்றன.
வனப்பகுதிக்கு அருகில் இருக்கிற விவசாயிகள் விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள மின்சாரத்தைத்தான் நம்ப வேண்டி இருக்கிறது. மின்சாரத்துக்கு மாற்றாக ஒன்றைக் கண்டுபிடித்து செயல்படுத்தியாக வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து தப்பிக்க முடியும்” என்கிறார். மின்சார வேலிகளுக்கு மாற்று ஒன்று இருக்கிறதா என தேடியதில் ஆப்ரிக்க மக்களின் தேனீ வேலி பற்றிய தெரியவந்தது.
ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள கிராமங்களில் யானைகளிடமிருந்து தங்களையும் தங்களின் விவசாயத்தையும் காப்பாற்றிக்கொள்ள அம்மக்கள் பல முறைகளை முயன்று பார்க்கிறார்கள். தீ கொளுத்திப் போடுவது, கற்களை வீசி விரட்டுவது, மிளகாய் குண்டுகளை எரிவது, நாய்களை விட்டு துரத்துவது என எவ்வளவோ முறைகளை பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்திய எந்த முறையும் பலனளிக்காமல் இருந்திருக்கிறது. ஒரு நாள் யானைகளை விரட்டிச் செல்லும்போது தேனீக்களின் சத்தத்தைக் கேட்டு யானைகள் தெறித்து ஓடுவதை பார்க்கிறார்கள்.
விளைநிலங்களைச் சுற்றி, தொட்டால் அசையும்படியான ஒரு பெட்டியில் தேனீக்களை வளர்க்கிறார்கள். அப்படியான பெட்டிகளை நிலங்களைச் சுற்றி வைக்கிறார்கள். எல்லாப் பெட்டிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருக்கும் படியாக ஒரு கயிறால் கட்டி வைக்கிறார்கள். யானைகள் கயிற்றையோ பெட்டியையோ தொடுகிற நொடியில் பெட்டியில் இருக்கிற தேனீக்கள் வெளியேறுகின்றன. வெளியேறும் தேனீக்களின் சத்தம் யானைகளை அச்சுறுத்துகின்றன.
தும்பிக்கையிலோ உடலின் வேறு சில இடங்களிலோ தேனீக்கள் கொட்டிவிட்டால் அதன் வலியை யானைகளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தேனீக்களுக்கு பயந்து யானைகள் தங்களின் வழித்தடத்தை மாற்றிக்கொள்கின்றன. 2009-ம் ஆண்டில் முதல் தேனீ வேலி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒரு ஆண் யானை தவிர மற்ற யானைகளைத் தடுத்து நிறுத்த முடிந்தது. பின்னர், கிங், டேவிட் ஷெல்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஆப்பிரிக்காவின் எல்லா இடங்களிலும் தேனீ வேலி திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேனீ வேலிகள் திட்டம் யானைகளிடமிருந்து காப்பாற்றுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். தேனீ வேலி வளர்ப்பில் தேன் மூலமாக விவசாயிகளுக்கு வருமானமும் கிடைத்து வருகிறது.
மனிதர்களின் தற்காப்புக்கு மின்சார வேலிகள் இப்போதைக்கு ஒரு தீர்வாக இருக்கலாம் அது மட்டுமே தீர்வு இல்லை என்பதை உணர்ந்தால் மட்டுமே உயிர்ப்பலிகளைத் தடுக்க முடியும்.
நன்றி: பசுமை விகடன்
இந்த நல்ல ஐடியா நம் நாட்டிலும் சோதனை முறையில் செய்து பார்க்கலாமே? வால்பாறை போன்ற இடங்களில் யானைகள் ஊர்களில் வரவதை தடுக்க இது உதவும்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்