யானை வரவைக் கட்டுப்படுத்தும் தேனீ வேலி

காட்டு பகுதிகளில் மனிதர்களின் நடமாட்டம் அதிகரிப்பதாலும் ஊர், கிராமங்கள் யானைகள் நடக்கும் இடங்களில் முளைப்பதாலும் யானைகள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

அப்படி செல்லும் போது தோட்டங்களை பாழ் பண்ணுவதும், ரயில் தண்டவாளங்களில் இறப்பதும் அதிகரித்து உள்ளது

இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 10 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை இதைச் சுட்டிக்காட்டுகிறது.

 

 

2013 கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 3,000 யானைகள் குறைந்துள்ளன. இதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று ‘மனிதர் – யானை எதிர்கொள்ளல்’.

மனிதர் – யானை எதிர்கொள்ளலால் கடந்த 8 வருடங்களில் 655 யானைகள் உயிரிழந்துள்ளன. இதன்படி ஆண்டுக்கு சராசரியாக 80 யானைகள் கொல்லப்பட்டுவருகின்றன என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சாலை/ரயில் விபத்து, வேட்டையாடப்படுதல் போன்ற காரணங்களுக்கு அப்பாற்பட்டு உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வரும்போது யானை-மனிதர் எதிர்கொள்ளல் அதிகமாக நடக்கிறது. இந்த எதிர்கொள்ளலைக் கட்டுப்படுத்தினாலே யானைகளின் இறப்பைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

புது வழி

மனிதர்-யானை எதிர்கொள்ளலைத் தடுக்கும் விதமாகப் பல ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. ஆனால், அவை முழுமையானதாக இருக்கவில்லை. இந்நிலையில் கென்யாவில் இயங்கும் ‘சேவ் தி எலிஃபன்ட்ஸ்’ என்ற இங்கிலாந்துத் தொண்டு நிறுவனத்தின் ஊழியர் லூசி இ. கிங் ‘தேனீ வேலி’ என்ற புதிய வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளார்.

இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தபோது யானைகள் ஒருவகையான மரத்தை மட்டும் புறக்கணிப்பதை கிங் கவனித்துள்ளார். அந்த மரத்தைக் கவனித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது, அம்மரங்களில் தேனீக்கள் கூடுகட்டியிருந்தது. அது கருவேல மரத்தைப் போன்ற ‘அக்கேசியா’ வகை மரம். யானைகளை விரட்ட இதையே வழிமுறையாகப் பயன்படுத்த முடுவெடுத்தார். முதற்கட்டமாக கென்யாவில் இது பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

விளைநிலங்களைச் சுற்றிலும் சீரான இடைவெளியில் தேனீக் கூடுகளை நிறுவியுள்ளனர். வேலியைத் தகர்த்து விளைநிலங்களுக்குள் நுழையும் யானைகள் இந்தத் தேனீக்களைக் கண்டு விலகி ஓடின. இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் சோதித்துப் பார்க்கப்பட்டது.

தான்சானியா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஒன்பது ஆப்பிரிக்க நாடுகளில் இந்த முறை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. கிங்கின் இந்த முறையை அடிப்படையாக வைத்துச் சில நாடுகளில் தேனீக்களின் சத்தத்தைப் பதிவுசெய்து அதை ஒலிப்பரப்புவதன் மூலம் யானைகள் விளைநிலங்களுக்கு வருவதைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

தேனீ வளர்ப்பின் மூலம் யானைகளால் விளைநிலங்கள் காக்கப்படுவது மட்டுமல்லாமல், அதிலிருந்து கிடைக்கும் தேன் மூலம் வருமானம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இதை அமைப்பதற்கும் அதிக செலவு பிடிக்காது. ஆசிய யானைகளில் 60 சதவீதம் உள்ள இந்தியாவில் இந்தத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படவில்லை.

முதலில் இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்தியாவில் கர்நாடகத்தின் கனரா மாவட்டத்திலும் கேரளத்தில் வயநாடு மாவட்டத்திலும் தேனீ வேலிகள் அமைக்கப்பட்டன.

2017 யானைகள் கணக்கெடுப்பில் இந்தியாவில் கர்நாடகத்தில் அதிகமாக 6,049 யானைகள் பதிவாகியுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் 2013-ல் 4,000-ஆக இருந்த எண்ணிக்கை 2017-ல் 2,761-ஆகச் சரிந்துள்ளது. இந்த எண்ணிக்கையை மேம்படுத்த ‘தேனீ வேலி’ போன்ற புதிய யுக்திகள் அவசியம்.

அசாமில் தேனீ ஸ்பீக்கர்

இரு வாரங்களுக்கு முன்பு அசாம் மாநிலம் நகான் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 4 யானைகள் உயிரிழந்தன. வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே பிரிவில் நடந்த விபத்தில் 2016-ல் 16 யானைகளும், 2017-ல் 6 யானைகளும் கொல்லப்பட்டுள்ளன. இந்தாண்டு தொடக்கத்திலேயே 4 யானைகள் உயிரிழந்திருக்கின்றன.

இதைத் தடுக்கும் விதமாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, தேனீ சப்தத்தைத் தரும் ஸ்பீக்கர்களைச் சோதனை முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். நாட்டில் முதல் முறையாகத் தேனீக்கள் இரையும் சப்தம் தரும் ஸ்பீக்கர்களை குவாஹட்டிக்கு அருகில் கமகியா, ஆஸாரா ஆகிய ரயில் நிலையங்களில் நிறுவியுள்ளனர்.

தேனீ வேலி அமைப்பதற்கான வழிமுறைகளும் கூடுதல் தகவலும் அறிய: http://elephantsandbees.com/wp-content/uploads/2014/05/Beehive-Fence-Construction-Manual-2014-ss.pdf

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *