வனப் பகுதியில் உள்ள தடுப்பணை வழியாக ரசாயன ஆலைகள் திறந்துவிடும் கழிவுநீரைப் பருகுவதால் புலிகள் உயிரிழக்கின்றன. புலிகளைப் பாதுகாக்க இந்த ஆலைகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் வனக் கல்லூரிப் பேராசிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள அரசு மரக்கிடங்குக்கு பின்புறம், வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடத்துக்கு அருகே வனத் துறையினரால் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமராவில் (Camera trap) இரவு புலி ஒன்று நடமாடுவது பதிவானது. அதேநாளில் இங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள புலிக்குட்டையில் இரு யானைகள் நீர் அருந்தும் காட்சியும் கேமராவில் பதிவாகியுள்ளது.
(வெகு காலத்துக்கு முன்பு புலிகள் கூட்டம் கூட்டமாக வந்து இக்குட்டையில் நீர் பருகியதையும், இப்பகுதியில் வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து சென்றதையும் மக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். அதனாலேயே, இந்த நீர்நிலைப் பகுதிக்கு புலிக்குட்டை என்று பெயர் வைத்துள்ளனர். அப்படிப்பட்ட பகுதியில் புலிகள் நடமாட்டம் என்பதே தற்போது அரிதாகியுள்ளது.)
இப்பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் வனவிலங்குகள் மற்றும் வனங்களின் பசுமையைப் பாதுகாப்பதற்காக தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அருகே உள்ள தொழிற்சாலைகள், தடுப்பணையை உடைத்து அருகே வாய்க்கால் அமைத்து இரவு நேரத்தில் கழிவுநீரை வெளியேற்றி வனப்பகுதியை மாசுபடுத்தி வருகின்றன.அதில் தேங்கும் நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதோடு துர்நாற்றமும் வீசுகிறது.
இதை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால் கமராவில் எப்போதாவது காணப்படும் புலி இல்லாமல் போய்விடும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் இயற்கை ஆர்வலர்கள்.
இது குறித்து வனக் கல்லூரி ஆய்வுப் பேராசிரியர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறியது: நாட்டில் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகளும், அது சார்ந்த உயிரினங்களும் இருந்தால்தான் அந்த நாடு செழிப்பாக இருக்கும் என்று உலகம் முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை 23.7 சதவீதம் காடுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.இதில் இயற்கைக் காடுகள் என்று பார்த்தால் 15 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இக் காடுகளைக் காப்பதும், புதிய காடுகளை உருவாக்குவதும், அதில் பல்லுயிர்கள் பெருக்கத்தை நிலைநாட்டுவதும் முக்கியமானது.
அந்த வகையில் தமிழகத்தில் முக்கியமான பகுதியாக விளங்குவது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள். அதில் பெரும்பகுதி கோவை மாவட்டம், நீலகிரி மலை அடிவாரப் பகுதியான மேட்டுப்பாளையம் தொடங்கி வாளையாறு வரை அமைந்துள்ளது.
இப் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாவதும், அவை தங்களது கழிவுநீரை காடுகளுக்குள் செல்லும் நீர்நிலைகளில் விடுவதும் தொடர்ந்து நடக்கிறது.இப்போது கேமராவில் புலி பதிவாகியிருக்கும் பகுதியைச் சுற்றி காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை, துணிகளுக்கு சாயம் ஏற்றும் தொழிற்சாலை, மரப்பட்டைகளை கூழாக்கி அதில் ரசாயனம் கலந்து செயற்கை சாயம் தயாரிக்கும் தொழிற்சாலை என10-க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கி வருகின்றன. அவை ரசாயனம் கலந்த கழிவுநீரை இரவோடு இரவாகத் தடுப்பணையில் திறந்து விடுகின்றன.
தடுப்பணையில் சட்டவிரோதமாக கழிவுகளைத் திறந்துவிடும் ஆலைகள், கழிவுநீர் தேங்குவதால் ஏற்படக்கூடிய பிரச்சினையை சமாளிக்க தடுப்பு அணையை உடைத்துவிடும் அவலமும் நடந்துள்ளது. இதனால் தடுப்பணையில் ஒரு பகுதி தண்ணீர் வெளியேறி, மழையில்லாத காலங்களில் வனவிலங்குகள் குடிப்பதற்குக்கூட நீர் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இங்கு தேங்கும் கழிவுநீரை வனவிலங்குகள் பருகுகின்றன. இதனால் பரிதாபமாக இறக்கின்றன.அபூர்வமாகி வரும் புலிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், பாதுகாக்கவும் புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இது ஒருபுறம் இருந்தாலும் கடந்த 5 மாதங்களில் தமிழக வனப் பகுதிகளில் மட்டும் 7 புலிகள் இறந்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப் பகுதியில் புலியின் மண்டை ஓடு, நகங்கள், பற்கள் ஆகியவற்றுடன் பிடிபட்ட கும்பல், தாங்கள் புலியை வேட்டையாடிக் கொல்லவில்லை, ஏற்கெனவே வனத்தில் இறந்து அழுகிக் கிடந்த புலியின் உடலில் இருந்து அவற்றை எடுத்து வந்ததாகத் தெரிவித்தது. நீலகிரி வடக்கு வனப் பகுதியில் இறந்து கிடந்த புலி விஷத் தன்மையால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.ஆனால், மீதமுள்ள புலிகளின் இறப்பு எப்படி நிகழ்ந்தது என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது.
இது தொடர்பாக தமிழக வனத் துறையின் அறிக்கை, தேசிய புலிகள் பாதுகாப்புக் குழுமத்தின் விசாரணையில் உள்ளது. இந்த அசாதாரண சூழலில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட பின்னரும், ரசாயனக் கழிவுகளைத் திறந்துவிடும் தொழிற்சாலைகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்