காட்டுயிர்களை காப்பதற்கான அமைப்புகளின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, கடந்த நூற்றாண்டுகளில் முதல் முறையாக உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அனைத்து கணக்கெடுப்புகளிலும் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, கடந்த 2010 -ம் ஆண்டின்படி வெறும் 3200 என்ற எண்ணிக்கையில் முடிந்தது. ஆனால் அதன்பின் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தற்பொழுது உலகில் 3, 890 புலிகள் இருப்பதாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கை உயர்வு மேம்படுத்தப்பட்ட கணக்கெடுப்பு முறைகளாலும், அதிகமான பரப்பளவை உள்ளடக்கியதாலும்தான் ஏற்பட்டுள்ளது என்ற கருத்தும் உள்ளது. எனினும் உலகளாவிய இயற்கை நிதியத்தின் காட்டுயிர் காக்கும் அமைப்பின் முதன்மை துணைத் தலைவரான கினேட்டே ஹெம்லே (Ginette Hemley) கூறுகையில், ” நாம் கருத்தில் கொள்ள வேண்டியது மிகச்சரியான எண்ணிக்கையை அன்று, அதைவிட முக்கியமான ஒன்றான எண்ணிக்கையில் உள்ள நேர்மறையான போக்கே” என்றார்.
2010 -ம் ஆண்டின் புலிகளின் எண்ணிக்கையை 2022 -ம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்குவது தொடர்பாக விவாதிப்பது குறித்து, நாளை டெல்லியில் 13 நாட்டு அமைச்சர்கள் கூடவுள்ள நிலையில், இவ்வெளியீடு இன்று வந்துள்ளது நல்ல செய்தி.
இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் முன்னேற்றம் இருந்தாலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் முறையான கணக்கெடுப்போ பாதுகாப்பு நடவடிக்கைகளோ இல்லாமையால், அவை பின்தங்கியே உள்ளன. கம்போடியாவில் ஒரு புலி கூட இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டநிலையில், இந்தோனேசியாவில் வாழ்விட அழிப்பின் காரணமாய் புலிகளின் எண்ணிக்கையில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை சார்ந்தது ஆகும்.
இவ்வாண்டின் கணக்கின்படி இந்தியாவில் மட்டும் 2226 புலிகள் உள்ளன. அதாவது உலக அளவில் இருக்கும் மொத்த புலிகள் எண்ணிக்கையில் பாதி. 2010 ல் மியான்மரில் இருந்த 85 புலிகள், 2014 ல் கணக்கிடப்படாததால் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.
புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க தேவையான அளவு காட்டுப் பரப்பளவும் உலகில் உள்ளது என்று ஓர் சமீபத்திய ஆய்வு கூறுவது போனஸ் நற்செய்தி.
– யாழினி அன்புமணி
நன்றி: விகடன்
இது நல்ல செய்தி போல தோன்றினாலும், உண்மையில் இவை அழிவை நோக்கி நடப்பது சிறிது வேகம் குறைந்துள்ளது என்பதே உண்மை.
1900 ஆண்டில் இந்தியாவில் மட்டுமே 100000 புலிகள் இருந்தன. 100 ஆண்டுகளில் வெறும் 2000+ புலிகளே உள்ளன.
எங்கிருந்து எங்கு வந்து உள்ளோம்? இதே நேரத்தில் இந்தியாவின் மக்கதொகை ( பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பர்மா எல்லாம் சேர்த்து) 23கோடி. இப்போது வெறும் இந்தியாவே 120 கோடி (6 மடங்கு வளர்ச்சி 100 ஆண்டுகளில்!)
ஏதோ இந்திரா காந்தி 1974 ஆண்டில் ப்ராஜெக்ட் டைகர் ஆரம்பித்ததாலேயே இவை இன்னும் உயிருடன் இருக்கின்றன!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்