ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்கா காகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி சுந்தரம். பரம்பரை விவசாயி. 5 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை விவசாயத்துக்குத் திரும்பியவர், முருங்கை இலை, மரவள்ளிக்கிழங்கு, கீரை வகைகள் எனப் பயிரிட்டு அசத்தலான மகசூலை எடுத்து வருகிறார். இவரைப் பார்த்து மேலும் சில விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கிறார்கள். அவரது தோட்டத்தில் சந்தித்தோம்.
‘‘நான் ஒரு பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவனுங்க. பூர்வீகமாக 6 ஏக்கர் நிலம் இருக்கு. சின்ன வயசுல இருந்தே ஆடு, மாடு, நிலமுன்னு விவசாயத்து மேல ரொம்பப் பிரியம். 12-வதுக்கு மேல படிக்கல. விவசாயம்தான் நமக்குச் செட்டாகும்னு இறங்கிட்டேன். கிட்டத்தட்ட 25 வருஷமாச்சு. கரும்பு, மஞ்சள், காய்கறிகள்னு ரசாயன உரத்தைப் போட்டு எவ்வளவோ மகசூல் செஞ்சிருக்கேனுங்க. சம்பாதிக்கவும் செஞ்சேன். ஆனா, இயற்கை விவசாயத்துக்குத் திரும்பினதுக்குப் பிறகுதான் மனசுக்குள்ள ஒரு திருப்தி இருக்குதுங்க” என உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்.
“ ‘ஒரு நாட்டு மாடு இருந்தா 10 ஏக்கர்ல விவசாயம் செய்யலாம். உரமே போட தேவையில்லை. நல்லா விளைச்சல் இருக்கும்னு’ பலரும் சொன்னப்ப, என்னால அதை ஏத்துக்கவே முடியலைங்க. இதெல்லாம் சாத்தியப்படாத சமாச்சாரமுன்னு நெனச்சேன். அந்தச் சமயத்துலதான் நம்மாழ்வார் ஐயாவைப் பத்தி கேள்விப்பட்டு, படிச்சு தெரிஞ்சுகிட்டேன்.
‘சரி நாமளும் கொஞ்சமா இயற்கை விவசாயம் செஞ்சுப் பார்த்தாதான் என்ன!’ங்கிற நெனப்பு மனசுல லேசா வந்துச்சு. அந்தச் சமயத்தில திருத்துறைப்பூண்டியில பாரம்பர்ய நெல் திருவிழாவுக்குப் போயிருந்தேன். அங்க நான் சந்திச்ச மனுசங்க, சாப்பிட்ட உணவு எல்லாமே மனசுல ஆழமா நின்னுடுச்சு. ஊருக்கு வந்த பிறகும் இயற்கை விவசாயம் செய்றதை பத்திதான் யோசனை ஓடிச்சு. ஆர்வத்தையும் தேடலையும் அதிகப் படுத்தினேன். அடுத்த 6-வது மாசத்துலயே இயற்கை விவசாயத் துக்கு மாறிட்டேன். இதுதான் நான் இயற்கை விவசாயத்துக்கு வந்த கதை’’ என்றவர் தொடர்ந்தார்.
“ ‘அட ஏனப்பா நல்லாத்தானே இருக்குது. எதுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுக்குற. இதெல்லாம் பெருசா கைகொடுக்காதப்பா!’ன்னு பக்கத்து தோட்ட விவசாயிங்க, நண்பர்கள்னு பலரும் சொன்னாங்க. ‘ஜெயிச்சா சந்தோஷம், இல்லைன்னா அதுவொரு பாடம்’னு நான் அவங்ககிட்ட சொன்னேன். நிச்சயமா மனசுக்குள்ள சிரிச்சிருப்பாங்க. ஆனா, நான் எதையுமே காதுல வாங்கிக்கலை. இயற்கை விவசாயத்துல இறங்குனதுமே 3 ஏக்கர்ல மரவள்ளிக்கிழங்கு, 2 ஏக்கர்ல சிவப்பு எள்ளு போட்டேன். தொழுவுரம், பஞ்சகவ்யான்னு போட்டுப் பயிர் நல்லா தழைச்சு வந்தப்பவே, ‘நாம ஜெயிச் சிட்டோம்டா’னு மனசுல பெரிய சந்தோஷம்.
உரம் போட்டு விவசாயம் செஞ்சுக்கிட்டு இருந்தப்ப மரவள்ளிக்கிழங்கு ஒரு ஏக்கருக்கு 15-20 டன்தான் மகசூல் கிடைக்கும். ஆனா, இயற்கை விவசாயத்துல நான் முதல் அறுவடையிலயே 24 டன் எடுத்தேன். அதேபோல வழக்கமாக ஏக்கருக்கு 300-400 கிலோன்னு கிடைச்ச எள்ளு, இயற்கை விவசாயத்துல 500 கிலோ கிடைச்சது. இதையெல்லாம் பார்த்துப் பக்கத்து தோட்டக்காரங்க மட்டுமல்ல, நானே அசந்து போயிட்டேன். ‘எப்படிய்யா இது நடந்துச்சு’ன்னு பலரும் என்கிட்ட ஆச்சர்யமா கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனிமேல் இதுதான் நம்ம ரூட்டுன்னு ஓட ஆரம்பிச்சவன், இன்னைக்கு வரைக்கும் இயற்கை விவசாயத்துல நல்ல மகசூலோட திருப்தியா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்.
இப்போ என்னோட தோட்டத்துல 3 ஏக்கர்ல செடி முருங்கையும், 3 ஏக்கர்ல மரவள்ளிக்கிழங்கும் போட்டிருக்கேன். 10 சென்ட்ல கொஞ்சம் கீரைகளையும் போட்டிருக்கேன். முருங்கை இலையை வாங்குற கம்பெனிக்காரங்களே வந்து இலையைப் பறிச்சுட்டுப் போயிடுவாங்க” என்ற பூபதி சுந்தரம், அவருடைய பிரதான பயிரான முருங்கைப் பற்றியும் அதன் வருமானம் பற்றியும் பேசினார்.
‘‘நான் போட்டிருக்கிறது நாட்டு ரக முருங்கை. ஈரோடு மாவட்டத்துல முருங்கை இலை பவுடர் தயாரிக்கிற கம்பெனிக நிறைய இருக்குது. அவங்க முருங்கை இலையை வாங்கிக்கிறாங்க. முருங்கை இலைக்கு விற்பனை வாய்ப்பு இருக்கிறதால, இந்தச் சாகுபடியில இறங்கினேன். கடந்த நாலு வருஷமா முருங்கை இலை சாகுபடி செஞ்சிட்டு வர்றேன். முருங்கை நடவு செய்து முதல் அறுவடைக்கு வர 120 நாள்கள் ஆகும். பிறகு, 60 நாளைக்கு ஒரு தடவை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு, ஒரு தடவைக்குச் சராசரியா 7 டன் முருங்கை இலை கிடைக்குது. ஒரு டன் முருங்கை இலையோட விலை இப்போ 5,000 ரூபாய். அப்ப ஒரு ஏக்கர்ல விளையிற 7 டன் இலைக்கு ரூ.35,000 கிடைக்கும். இதை 3 ஏக்கருக்கு கணக்கு போட்டா 1,05,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். உழவு, தொழுவுரம், விதைச் செலவு, களையெடுக்கக் கூலினு ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் செலவாகும்.
முதல் அறுவடைக்குத்தான் உழவு, விதைச் செலவுன்னு இருக்கும். அடுத்தடுத்த அறுவடைக்குச் செலவு ஒரு ஏக்கருக்கு 10,000 தான் ஆகும். ஆக, முதல் வருஷத்துல ஒரு ஏக்கருக்கு 7 டன் விளைச்சல் கணக்குல 5 அறுவடைக்கு 35 டன் இலை கிடைக்கும். மொத்தம் 3 ஏக்கருல இருந்து 105 டன் கிடைக்கும். இலையோட விலை ஒரு டன் ரூ.5,000 கணக்குல 105 டன்னுக்கு 5,25,000 ரூபாய் கிடைக்கும். அதுல ஒரு வருஷத்துக்கான செலவு 90,000 போக, 4,35,000 ரூபாய் லாபம் கையில நிக்கும். ரெண்டாவது வருஷத்துல இருந்து வருஷத்துக்கு 6 அறுவடை கிடைக்கும். லாபம் இன்னும் அதிகமாகும்’’ என்றவர் நிறைவாக,
“என்னைப் பார்த்து என்னோட பக்கத்து தோட்ட விவசாயிகளும் கொஞ்ச கொஞ்சமாக இயற்கை விவசாயத்துக்கு மாறிக்கிட்டு வர்றாங்க. நான் ரெண்டு நாட்டுமாடுகள் வெச்சுருக்கேன். பஞ்சகவ்யாவுல இருந்து, இயற்கைப் பூச்சிவிரட்டின்னு எல்லாத்தையும் நானே தயாரிக்கிறேன். மாசம் 150 லிட்டர் வரை பஞ்சகவ்யாவை வெளியில கொடுக்கிறேன். இயற்கை விவசாயத்துல குறைஞ்ச செலவுங்க. இதுவே செயற்கை முறை விவசாயம்னா ஒரு ஏக்கருக்கு மருந்துக்கே சுமார் 20,000 ரூபாய் வரைக்கும் செலவு செய்யணும். இயற்கை விவசாயத்துல அந்த உரச் செலவு மிச்சமாகுறதே ஒரு லாபம் தானுங்களே’’ என்றார்.
செடி முருங்கைச் சாகுபடி
செடி முருங்கைச் சாகுபடிக்குச் செம்மண் நிலம்தான் சிறந்ததாக இருக்கும் என்றாலும் மற்ற மண் வகைகளிலும் நன்றாக வளரும். ஈரப்பதம் குறைவான நிலப் பகுதியாக இருப்பதுதான் முக்கியம். நிலத்தை உழவு செய்து, பார் பிடித்து, ஏக்கருக்கு 6 டிராக்டர் தொழுஉரம் இட வேண்டும். 4 அடிக்கு 2 அடி இடைவெளியில் முருங்கை விதையை விதைக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும்.
செடி முளைக்க ஆரம்பித்த 20-ம் நாள் ஏக்கருக்கு 5 லிட்டர் பஞ்சகவ்யாவைச் சொட்டு நீரோடு கலந்து கொடுக்க வேண்டும். அதிலிருந்து 15 நாள்களுக்குப் பிறகு, செடி வளர்ச்சிக்காக ஒரு டேங்குக்கு 500 மி.லி என்ற கணக்கில் 5 லிட்டர் பஞ்சகவ்யாவைத் தெளிக்க வேண்டும். 30-ம் நாள் கொழுந்தைக் கிள்ளி விட வேண்டும். அப்போதுதான் செடியில் அதிக கிளைகள் உருவாகும். இல்லை என்றால் செடி மேல்நோக்கி உயரமாக வளர்ந்துவிடும். களை அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வோர் அறுவடைக்குப் பிறகும் ஒரு களை எடுக்க வேண்டும்.
45-ம் நாள், ஆமணக்குப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு மூன்றையும் தலா 50 கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். மொத்தம் 150 கிலோ பிண்ணாக்குடன் 200 கிலோ தொழுவுரத்தைக் கலந்து ஒவ்வொரு செடிக்கும் ஒரு கையளவு வைக்க வேண்டும். 60-ம் நாள், 10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி தேமோர் கரைசலைக் கலந்து 10 டேங்க் தெளிக்க வேண்டும். இலையில் பூச்சித் தாக்குதல் இருந்தால் வேப்பிலை, இஞ்சி, பூண்டு மூன்றையும் தலா ஒரு கிலோ எடுத்து அரைத்து, சாறு எடுத்துப் பஞ்சகவ்யாவோடு கலந்து கொடுக்கலாம்.
120-ம் நாள் முதல் முருங்கை இலைகளை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 60 நாள் களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு, ஒரு அறுவடைக்கு 5 முதல் 9 டன் வரை மகசூல் கிடைக்கும். சராசரியாக ஏக்கருக்கு 7 டன் கிடைக்கும். 10 வருஷத்துக்கு மேல இலை நல்லா தழைக்கிற வரைக்கும் மகசூல் எடுக்கலாம்.
60-ம் நாள் அறுவடைக்கு இது முக்கியம்
முருங்கை அறுவடை பற்றிப் பேசிய பூபதி சுந்தரம், “முருங்கைக்குப் பருவநிலை ரொம்ப முக்கியம். மழை அதிகமாக இருந்தா விளைச்சல் குறைஞ்சிடும். அதேபோல ஒரு அறுவடைக்குப் பிறகு இலை வெட்டப்பட்ட இடங்கள்ல பூஞ்சை நோய் பாதிப்பு வரும். அதைத் தடுக்க அறுவடை முடிஞ்ச 2-வது நாள், 10 லிட்டர் தண்ணியில 50 மி.லி. வேப்பெண்ணெய் கலந்த கரைசலை தெளிக்கணும். அப்புறம் களையெடுத்து 15-ம் நாள்ல 5 லிட்டர் பஞ்சகவ்யாவை சொட்டு நீரோட கொடுப்போம். அப்புறம் ஊட்டத்துக்காக 25-ம் நாள்ல 3 வகைப் பிண்ணாக்கு, 35-ம் நாள்ல தேமோர் கரைசல், 40-ம் நாள்ல 5 லிட்டர் பஞ்சகவ்யான்னு கொடுத்தா 60-ம் நாள் அறுவடைதான்’’ என்றார்.
தொடர்புக்கு, பூபதி சுந்தரம், செல்போன்: 9865838608
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்