முருங்கை இலையில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வருவாய் ஈட்டும் விவசாயி

தேனி மாவட்டம் கண்டமனுாரை சேர்ந்த விவசாயி வேலாண்டி முருகன்,50. இவர் எம்.ஏ., எம்.,பில், எம்.எஸ்சி., பி.எட்., போன்ற பட்டங்களை பெற்று தனியார் பள்ளியில் ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.

தற்போது முழுநேர விவசாயியாக மாறி விட்டார். இவர் விளைவிக்கும் முருங்கை இலை சாக்லேட், உணவு, மருந்து பொருட்கள் தயாரிக்க அரபு, ஐரோப்பிய நாடுகளுக்கு தினமும் விமானங்களில் பறந்து கொண்டிருக்கிறது.


முருகன் கூறியதாவது:

எங்களின் 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி, கத்தரி, மக்காச்சோளம், முருங்கை பயிரிட்டு வந்தோம். நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது முருங்கை இலையை பச்சையாகவும், காய வைத்தும் முறையாக பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்து அறிந்து கொண்டேன். அதன்பிறகு கடந்த 6 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

கண்டமனுார், பொன்னம்மாள்பட்டி, அண்ணாநகர், தேக்கம்பட்டி, கணேசபுரம், எட்டப்பராஜபுரம் உள்ளிட்ட பகுதியிலும் விவசாயிகள் அதிகம் முருங்கை சாகுபடி செய்கின்றனர். எங்கள் தோட்டம் மட்டுமல்லாது, அருகில் உள்ள பகுதியில் சிறப்பாக சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்தும் இலைகளை வாங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறேன்.

ஒரு ஏக்கருக்கு 20 அடி இடைவெளியில் 90 முதல் 100 முருங்கை மரங்கள் வளர்க்கலாம். ஒரு மரத்தில் மாதத்திற்கு 12 கிலோ இலை பறிக்கலாம். இலைகள் தேர்வில் கவனம் அவசியம்.

ரூ.7 லட்சம் லாபம்

பச்சை இலைகள் முதிர்ந்திருக்க கூடாது. காயவைப்பதற்கான இலைகள் முதிர்ந்த மரத்தில் இருந்து தான் எடுக்கவேண்டும். தற்போது பச்சை இலைகள் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காயவைக்கப்பட்ட இலைகள் கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு முருங்கை இலை விலை 120 ரூபாய் வரை விற்கப்பட்டது.

காயவைப்பதற்கு 2 முறைகள் உள்ளன. ‘சோலார்’ உலர்த்தி மூலம் காயவைத்தால் இலையின் நிறம் மாறாது, துாசிகள் படியாது. சூரிய ஒளியில் காயவைத்தால் இலை உடையும், நிறம் மாறும். பச்சை இலைகள் பறிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் பேக்கிங் செய்யப்பட வேண்டும். ஒரு பெட்டிக்கு 10 கிலோ என, தேவைகேற்றபடி ஒரு நாளைக்கு 100 பெட்டிகள் கூட திருச்சி வழியாக விமானத்தில் அரபு, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வருகிறோம். ஒரு பெட்டிக்கு 200 ரூபாய் கிடைக்கிறது. மாதம் 60 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு சராசரியாக 7 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம்.

மருந்து பொருட்கள், சாக்லேட், உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு முருங்கை இலை பயன்படுகிறது. விவசாயிகள் முருங்கையை காய்களுக்காக மட்டுமின்றி இலைக்காகவும் பயிரிட்டு லாபம் அடையலாம், என்றார்.

தொடர்புக்கு 9786746265 .

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *