முருங்கை எனும் சஞ்சீவி தாவரம்

வறண்ட பாசன வசதி மற்றும் குறைந்த வெப்பம் உள்ள பகுதிகளில் முருங்கை நன்றாக வளரும். கிராமங்களில் முருங்கை வளர்ப்பு அமோகமாக உள்ளது. மர முருங்கை, செடி முருங்கை என இரண்டு ரகங்கள் உண்டு. செடி முருங்கையை விதை இட்டு வளர்க்க வெகு விரைவில் வளர்ந்து மென்மையான காய்களையும், கீரையையும் தரும். மர முருங்கையின் மரக்கிளையை தரையில் நட்டு வளர்த்தால் மெதுவாகவும், திடமாகவும் வளர்ந்து பலன் தரும். ஆண்டு தோறும் பிப்ரவரியில் காய்கள் காய்க்கும்.

முருங்கைப்பூ:

முருங்கைப்பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் தோன்றும். இந்தப்பூக்கள் முளைத்த பின் இரண்டு மாதம் கழித்து காய்கள் நார் போன்று தோன்றி படிப் படியாக தடிப்பு பெற்று கவர்ச்சியாகக் காட்சி அளிக்கும். தரமான காய்கள் மிக நீளம் உடையதாக அமையும். தோட்டங்கள், வீடுகள், காலி இடங்களில் முருங்கை வளர்த்து லாபம் ஈட்டலாம். நன்கு வளர்ச்சியடைந்த முருங்கை மரம் பல ஆண்டுகள் வரை நல்ல பலன் தரும். கீரை, காய், பூ, விதை, பட்டை, வேர், ஈர்க்கு, பிசின், எண்ணெய் இவை அனைத்துமே முருங்கை மரத்தால் பெற இயலும்.

முருங்கைக்கீரை:

கீரை வகையான முருங்கை இலைகளை சுத்திகரித்து உரியவாறு சமைத்து சாப்பிட்டால் உடம்புக்கு ஆரோக்கியமும், வலுவும் ஏற்படும். வைட்டமின் பி, ஊட்டச்சத்து, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் முதலியன அடங்கியுள்ளன. இதை தண்ணீர் விட்டு அரைத்து பற்று போட்டால் சகல வீக்கங்களும் குணமாகும். விளக்கெண்ணெயில் இதை வதக்கி வலியின் மீது ஒத்தடம் இட்டால் குணமடையும். பல்வேறு நோய்களை நீக்கும் மூலிகை வர்க்கம் முருங்கை என சித்த மருத்துவ குறிப்பு உள்ளது.

murungai

முருங்கைக்காய்:

மண் வளத்திற்கு ஏற்றவாறு முருங்கைக்காய் பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ அளவில் வேறுபடும். இந்த காய்களை அவற்றின் நடுவே இரண்டாக கீறி சாம்பாரில் இட்டால் சீக்கிரம் வெந்து அதிக சுவையை தரும். இவற்றை பொரியல் செய்து சாப்பிடுவது சாலச்சிறந்தது. இவற்றுக்கு சரீரத்தை இளமையாக வைக்கும் ஆற்றல் உள்ளது. சமைத்து உட்கொள்வதன் மூலம் எவ்வகை வாத நோயும் விலகிவிடும். சமைத்து முருங்கைக்காய்களை இளம் விதைகளோடு சாப்பிடுவது ஆண்மை குறைவு நீங்க அருமருந்து.

பலமிக்க முருங்கை
:

முருங்கை விதைக்குள் உள்ள பருப்பை சமைத்து சாப்பிட ரத்தம் சுத்தமாகும். தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும். முருங்கை பூக்களை பசும் பாலில் இட்டு காய்ச்சி இரவில் அருந்த ஆண்மை அதிகரிக்கும். இதயம் வலிமையுறும். முருங்கை காம்புகளை (ஈர்க்குகள்) குடிநீரில் இட்டு பருக உடல் வலி, கை கால் அசதி நீங்கும். முருங்கை பிசின் துாளை பாலுடன் கலந்து பருகி வர மேனி அழகு மேம்படும். முருங்கை பட்டை, வேரின் சாற்றை உணவுடன் உட்கொண்டால் கபம், வலிப்பு, குளிர் காய்ச்சல், வாத, வாய்வு தொல்லை நீக்கும். முருங்கை எண்ணெய் (பென் ஆயில்) நாட்டு மருத்துவத்தில் பிணிகளை நீக்கும் பரிகாரமாக பயன்படுகிறது. முருங்கை எனும் ஓர் ஒப்பற்ற சஞ்சீவி தாவரத்தை வீடுகள் தோறும் நட்டு வளர்த்து பயனடைவோம்.
முன்னோடி விவசாயி எஸ்.நாகரத்தினம் விருதுநகர்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “முருங்கை எனும் சஞ்சீவி தாவரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *