தானிய பயிர், பணப்பயிர், சாகுபடிகளைக் காட்டிலும் அதிக லாபத்தை விவசாயிகளுக்கு கொடுக்கக் கூடியது நிச்சயம் தோட்டக் கலையின் கீழ் வரும் காய்கறி சாகுபடிதான். காய்கறி சாகுபடியில் விற்பனை விலை எனும் ஒரே ஒரு இடத்தில்மட்டும்தான் விவசாயிகள் பெரும் இன்னலையும் ஏற்ற இறக்கத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது.
மொரிங்கா ஒலிபெரா (Moringa Olefera) எனும் தாவரவியல் பெயருடைய முருங்கை ஆங்கிலத்தில் டிரம்ஸ்டிக் (Drumstick) என்று அழைக்கப்படுகின்றது. தமிழ்ப் பெயரும், ஆங்கிலப்பெயரும் இரண்டுமே காரணப் பெயர்கள்தான். முருங்கை மரத்தின் இலைகள் மிகவும் எளிதில் முறிந்துவிடும் தன்மையை உடையது. இப்படி முறிந்துவிடும் தன்மையை உடைய மரம் என்பதால் முருங்கை மரமானது ட்ரம் எனும் தாள வாத்தியம் வாசிக்கின்ற குச்சிப் போன்ற தோற்றத்தை உடையதால் ஆங்கிலத்தில் டிரம்ஸ்டிக் (Drumstick) எனும் பெயர் இந்த காய்க்கு சூட்டப்பட்டது.
உரைபனி, கொட்டும் பனியை அறவே விரும்பாத முருங்கை ஒரு வெப்ப மண்டல பயிர். லேசான அமிலத்தன்மையுள்ள, தண்ணீர் தேங்காத, வடிகால் வசதியுள்ள நல்ல மண்வளம் உள்ள பகுதியில் செழித்து வளரும். முருங்கை வறட்சியும், வெப்பத்தையும் விரும்புகின்ற மரவகை. இதை மிக எளிதில் சாகுபடி செய்யலாம். இந்தியாவில் உற்பத்தியாகும் சுமார் 1.5 மில்லியன் மெட்ரிக் டன் முருங்கைக் காயின் உற்பத்தியில் முதலிடத்தை பெறுவது தமிழகம் என நினைத்தால் அது தவறு. முருங்கை உற்பத்தியில் முதலிடம் ஆந்திராவிற்கும், இரண்டாம் இடம் கர்நாடகாவிற்கும் கிடைத்தபின் தமிழகத்திற்கு மூன்றாம் இடம்தான். இந்தியாவைத் தவிர தாய்லாந்து, இலங்கை, பிலிபைன்ஸ், தைவான்,மத்திய அமெரிக்கா, ஆப்ரிகா, கரீபியன் தீவுகளிலும் முருங்கை பயிரடப்படுகின்றது.
முருங்கையில் இரண்டே வகைகள்தான் உண்டு. ஒன்று மரமுருங்கை மற்றொன்று செடி முருங்கை. இதில் மர முருங்கை நீண்ட காலப் பயிர். இதனை குச்சி (பொத்து) மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். இது பல்லாண்டு கால நிரந்தர பயிர். சுமார் 1 ½ சுற்றளவும், 40 அடி உயரமும் வளரக் கூடிய மர வகை. செடி முருங்கை என்பது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுபவை. இது குறுகிய காலப்பயிர் மூன்று அல்லது நான்கு காய்ப்புகளுக்குப் பின் காய்க்கும் திறன் குறைவதால் இதனை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு வேறு முறை நடவு செய்ய வேண்டும். இதைச் செடி முருங்கை என பரவலாக அழைக்கின்றனர்.
செடி முருங்கையில் pkm1m pkm2, யாழ்பாண முருங்கை, ரோகிட் 1, துர்கா, கோகன், GKVK 1, GKVK 2, GKVK 3, KM 1, CO2 சாகவச்சேரி என பல்வேறு வகைகள் இருந்த போதிலும் pkm1 எனும் ரகம்தான் சக்கைப்போடு போடுகின்றது.
செடி முருங்கை எல்லாவகையான மண்ணிலும் வளரும் என்றாலும் மணல் கலந்த செம்மண் பூமி, கரிசல் பூமி, வடிகால் வசதியுள்ள வண்டல் நிலம் மிகவும் ஏற்றது. ஜூன், ஜூலை பட்டத்திலும், நவம்பர் டிசம்பர் பட்டத்திலும் நடவு செய்யாமல் எட்டு அடி X எட்டு அடி இடைவெளியில் 1 ½ X 1 ½ X 1 ½ அளவில் குழி எடுத்து ஆறவிட்டு அதில் மக்கிய தொழு எரு, மேல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து நிரப்பி, இரண்டு அடி வட்டப்பாத்தி அமைத்து வாய்க்கால் பாசனமோ, சொட்டி நீர்ப் பாசனமோ அமைக்க ஏற்பாடு செய்து விதை ஊன்ற வேண்டும். தரமான, நல்ல முளைப்புத் திறன் உள்ள பொறுக்கு விதையாக இருப்பின் ஏக்கருக்கு 300 கிராம் விதை போதுமானது. விதையின் முளைப்புத் திறனை அதிகரிக்க 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி பஞ்ச காவ்யா கலந்து அதில் விதைகளை 12 மணி நேரம் ஊற வைத்து குழிக்கு 2 விதைகள் வீதம் விதை சேதமடையாமல் ஊன்ற நீர்ப் பாய்ச்சவேண்டும். மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் நிலத்தின் தன்மை, வெயிலின் அளவு, காற்றின் ஈரப்பதம் போன்ற காரணிகளை அனுசரித்து நீர்ப் பாசனம் மேற்கொள்ளவேண்டும்.
விதைத்த இரண்டு மாதங்கள் வரையிலும் நிலத்தில் களைகளின்றி பராமரிக்க வேண்டும். செடி முருங்கை நடவு செய்யும்போதே ஊடுபயிராக வெங்காயம், தட்டைப்பயறு, கொத்துமல்லி போன்ற மிகக் குறுகிய காலப் பயிரை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம்.
செடி முருங்கை நமது நெஞ்சு மட்டத்திற்கு வந்ததும் சுமார் 3 ½ அடி உயரம் அதன் நுனியைக் கிள்ளி செங்குத்து வளர்ச்சியை நிறுத்திப் பக்கவாட்டு வளர்ச்சியை அதிகப்படுத்தவேண்டும். ரசாயன விவசாயிகள் செடி ஒன்றிற்கு 100 கிராம் யூரியா, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 50 கிராம் பொட்டாஷ் உர உப்பை விதைத்த மூன்றாவது மாதத்திலும், ஆறாவது மாதத்தில் 100 கிராம் யூரியா மட்டும் இடவேண்டும். இயற்கை வழியில் சாகுபடி செய்வோர் அதற்கு ஈடான இயற்கை உரத்தை கொடுக்க வேண்டும். அதிக காய்ப்புத் திறனுள்ள செடி முருங்கைகளுக்கு அதன் உற்பத்தி திறனுக்கு ஏற்ற ஊட்டச் சத்து கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
நஞ்சில்லா காய்கறி சாகுபடி செய்ய வேண்டும் என நினைத்தால் முருங்கையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு அவசியம். முருங்கை விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் சுடோமோனாஸ் புளூரசன்ஸ் எனும் உயிர் மருந்தைக் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். உயிர் உர நேர்த்தியாக அசோஸ்னபரில்லம் 200 இளம், பாஸ்போ பேக்ட்ரீயம் 200 எடுத்துக்கொண்டு ஆறிய அரிசி வடிகஞ்சி அல்லது ஆறிய மைதாமாவு பசைக் கரைசலுடன் கலந்து இந்தக் கரைசலுடன் 1 கிலோ முருங்கை விதையை புரட்டி நிழலில் காயவைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நடவு குழியில் மக்கிய தொழு உரம் 15 கிலோ, மண்புழு உரம் 5 கிலோ, அசோஸ்பைரில்லம் 50 கிராம், பாஸ்போ பேக்ட்டீரியம் 50 கிராம், வேம் (VAM) எனும் வேர் நுண் உட்பூசணம் 100 கிராம், வேப்பம் புண்ணாக்கு 250 கிராம் கலந்து இட வேண்டும். 5% வேப்பங் கொட்டை கரைசல் 0.03% நிமிசிடின் கரைசல் போன்றவற்றை காய் மடிப்புப் பருவத்தில் ஒரு மரத்திற்கு 2 லிட்டர் தெளித்துப் பூச்சி நோயைக் கட்டுப்படுத்தலாம். பஞ்சகாவ்யம் 3 சதம் தெளித்து அதிக மகசூல் பெறலாம்.
ஒரு வருடம் கழித்து காய்ப்பு முடிந்த பிறகு, செடிகளைத் தரை மட்டத்திலிருந்து சுமார் மூன்று அடி உயரத்தில் வெட்டிவிட வேண்டும். இதனால் புதிய குருத்துகள் வளர்ந்து மீண்டும் 4 முதல் 5 மாதங்களில் காய்க்கத் துவங்கும். இதுபோல் ஒவ்வொரு காய்ப்புக்கு பிறகும் மரத்தை வெட்டி மூன்று ஆண்டுகள் வரை மறு தாம்புப் பயிராக பராமரிக்கலாம். ஒவ்வொரு முறை கவாத்து செய்தபின்னும் தேவையான ஊட்டச் சத்து உரங்களை இட்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
முருங்கையில் பெரிய பிரச்னை படி ஈக்கள் தான். படி ஈக்களின் குஞ்சுகள் காயைத் தின்று சேதப்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்துவிட வேண்டும். ரசாயன முறையில் கட்டுப்படுத்த நினைப்போர், 1 லிட்டர் தண்ணீரில் இரண்டு மில்லி பெந்தியான், மோனோ குரோட்டாபாஸ்,டைக்குளோர்வாஸ் பூச்சி கொல்லியில் ஏதாவது ஒன்றை கலந்து தெளிக்க வேண்டும். ரசாயன மருந்து தெளிக்கும் முன் காய்களை பறித்துவிட வேண்டும். பூச்சி மருந்து தெளித்து 10 நாட்களுக்கு முருங்கை காய்களை அறுவடை செய்யக் கூடாது.
முருங்கை நடவு செய்து 4-5 மாதங்களில் பிஞ்சு எடுக்கும் சமயத்தில் பழ ஈக்கள் தாக்கியிருக்கும். மழை பெய்தால் பிசின் வடியத் துவங்கும், காய்கள் நீளவாக்கில் வெடிக்கும். காய்கள் சுருங்கி, காய்ந்து விடும். மகசூலில் கணிசமான பாதிப்பு வரும். பழ ஈக்களை கட்டுப்படுத்த இயற்கை முறையில் வழி இருக்கின்றது. ஒரு பாலித்தீன் பையில் 20 கிராம் நன்றாகப் பொடி செய்யப்பட்ட கருவாட்டை கட்டி அத்துடன் இயற்கை வழி ஈ கொல்லித் திரவமான Dr.Fly போன்றவற்றைக் கலந்து ஏக்கருக்கு 10-15 இடங்களில் கட்டி ஈக்களை கவர்ந்து இழுத்து பழ ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
முருங்கையில் ஆண், பெண் பூக்கள் தனித்தனியே இருக்கும். ஆதலால் காலை வேலையில் வரும் தேனீக்கள்தான் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவி செய்கிறது. ரசாயன பூச்சி மருந்துகள் தேனீக்களை கொன்றுவிடாமல் மாலை வேலையில் தெளிக்க வேண்டும்.
பூ மொட்டு துளைப்பான் தென்பட்டால் பூக்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் டைக்குளோர்வாஸ் ரசாயன பூச்சி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் 1 மில்லி கலந்து 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். கம்பளிப்பூச்சிகள் இவைகளைத் தின்று சேதம் விளைவிக்கும். வளர்ச்சிப் பெற்றக் கம்பளிப் புழுக்களைக் கட்டுப்படுத்த, நெருப்புப் பந்தங்களைக் கொண்டு புழுக்கள் மேல் தேய்த்துக் கருக்கிக் கொன்று அழிக்க வேண்டும்.
முருங்கை இரண்டு அல்லது மூன்று மாதச் செடியாக இருக்கும்போது தூர் அழுகல் நோய் தாக்கி சேதம் விளைவிக்கும். இந்த நோய் தாக்கினால் தூர் பாகத்திலுள்ள தண்டின் பட்டை அழுகி உரிந்துவிடும். இந்த தூர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த முதலில் அழுகிய செடிகளை வேரோடு நீக்கி அழித்துவிட வேண்டும். அதன்பின் சுற்றியுள்ள செடிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி காப்பர் ஆக்ஸிகுளோனைக் கலந்து தூரைச் சுற்றியுள்ள மண்ணில் ஊற்றவேண்டும்.
பிஞ்சுக் காய்களின் தோல் பகுதியில் உண்டாகும் காயங்கள் மூலம் பூசணம் நுழைந்து, காய் அழுகலை உண்டாக்குகின்றது. காய்களின் வெளிப்பரப்பில் பழுப்புநிறப் புள்ளிகள் முதலில் தோன்றும். பின்பு அதிக அளவு கறுப்பு புள்ளிகளாக மாறிவிடும். நோயின் தாக்கம் அதிகரித்து நோய் முற்றிய நிலையில் காயிலிருந்து பிசின் போன்ற திரவம் வடியும். காய் அழுகல் நோயும், பழ ஈயின் பாதிப்பும் சேர்ந்து காணப்பட்டால் கடுமையான சேதத்தை உண்டாக்கும். இதனைக் கட்டுப்படுத்த பிஞ்சு பருவத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் மேன்கோசெப் அல்லது ஒரு கிராம் கார்பண்டாசின் பூசணக் கொல்லி கலந்து தெளிக்க வேண்டும். காய்கள் வளர்ச்சி அடைந்ததும் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.
செடி முருங்கை ஒரு குறுகிய காலப் பயிர். ஆனால் மர முருங்கை ஒரு நீண்ட காலப் பயிர். இதனை போத்துகல் நடுவதன் மூலம் அல்லது விண்பதியன் நாற்றுகள் நடவு செய்வது மூலம் உண்டாக்கலாம். நல்ல காய்வு திறனுள்ள தாய் மரங்களை தேர்வு செய்து பச்சை நிறம் மாறிய கிளைகளில் 10 செமீ பருமனுள்ள கிளைகளினை கூர்மையான கத்தியைப் பயன்படுத்தி மரத்தின் பட்டை சேதமாகாமலும், மரம் நொறுங்கிவிடாமலும் 2 அல்லது 3 அடி உயரமுள்ள குச்சிகளை வெட்டி எடுக்கவேண்டும். மரக்கிளையின் நுனிப் பகுதியில் பசுஞ்சாணத்தை உருட்டி வைக்க வேண்டும். வெயில் பட்டால் நுனியிலிருந்து குச்சிகள் கீழ்நோக்கி காயத்துவங்கும். மர முருங்கைக்கு 6 மீட்டருக்கு X 6 மீட்டர் இடைவெளி தேவை. போதுமான காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் அவசியம். அத்துடன் நிலவளம், நீர்வளம் காற்றின் வேகம் இவற்றைப் பொறுத்தும் இடைவெளியை கூட்டிக், குறைக்க வேண்டும்.
முருங்கையை குறித்து Trees For Life எனும் அமெரிக்க அமைப்பு பிரமாதமாக சொல்லியிருக்கிறது. முருங்கை இலையில் பாலாடையைவிட 2 பங்கு புரோட்டின், ஆரெஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் ‘சி’, வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம், கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின் ஏ, பாலைவிட 4 மடங்கு கால்ஷியம் உள்ளதாம். ‘முருங்கை தின்னா முன்னூறு வராது’ என்பது கிராமத்து மொழி. முருங்கையை தொடர்ந்து உணவில் பயன்படுத்துவோருக்கு 300 வகை வியாதிகள் அண்டவே அண்டாதாம்.
இதனைத் தவிர முருங்கை மர பிசின், முருங்கை விதையிலிருந்து எடுக்கப்படும் பென் ஆயில் அழகு சாதன பொருட்களில் பயன்படுகின்றது. நன்கு முற்றிய முருங்கை விதையிலிருந்து 40% அளவில் பென் ஆயில் பிழிந்து எடுக்கலாம். வீட்டு வைத்தியம், சித்தமருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற பாரம்பரிய சிகிச்சை முறையில் முருங்கை பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றது.
முருங்கைக் காயை அறுவடை செய்வதில் எப்போதும் கவனம் தேவை. முற்றிய முருங்கை விலை போகாது. பிஞ்சு முருங்கை காயும் பயன்தராது. நமது இல்லத்தர்சிகள் எப்படி முருங்கை காய் தேவை என எதிர்ப்பார்க்கின்றார்களோ அதைப் போல காயை பறித்து சந்தைப்படுத்துவதே ஒரு நல்ல விவசாயின் பணி. முருங்கை உருண்டு இருக்கவேண்டும். உள்ளிருக்கும் விதை தெரிந்தும் தெரியாமலிருக்கவேண்டும் இப்படி ஆயிரம் பக்கம் எழுதினாலும் எளிதில் புரியாது. எனவே நாமே அனுபவத்தில் என்ன பக்குவத்தில் காயைப் பறிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.
முருங்கைக் காய் பறிப்பதற்கெனவே பிரதியேகமாக வடிவமைக்கப்பட்ட கொக்கியை கொண்டு காய்களைப் பறிப்பது எளிது. சாதாரண கொக்கிகளை பயன்படுத்தினால் காய்களை ஒடிக்கும்போது கிளைகளும் ஒடியும். ஒடித்த காய்களை நிழலான இடத்தில் வைத்து தேவையின்றி நீட்டியிருக்கும் காம்பு பகுதிகளை ஒடித்து, வளைந்த நோய் தாக்கிய காய்களை கழித்து, அட்டைப் பெட்டிகளிலோ, கோணி சாக்குகளிலோ சிப்பமிடலாம்.
காய்கறி சாகுபடியிலேயே கடுமையான இடம் மகசூலும் விற்பனையுமே. மரத்துக்கு ஆண்டிற்கு மர முருங்கையில் சராசரியாக 100 கிலோ காய் கிடைக்கும். ஏக்கருக்கு 200 மரம் நடலாம். ஆக 200 X 100 = 20,000 kg டன் மகசூல் கிடைக்கலாம். விலை கிலோவிற்கு குறைந்த பட்சம் 1 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 200 ரூபாய் வரை கிடைக்கலாம். இதில் எதுவுமே நிரந்தரமில்லை. கடும் வறட்சியில்தான் முருங்கை பூ பூக்கும். பூக்கும் சமயத்தில் லேசாக மழை தூறல் வந்தால் கூட மகரந்தச் சேர்க்கை ஏற்படாமல் பூ கொட்டிவிடும். பிஞ்சு இறங்காது.
விவசாயம் எனும் சூதாட்ட வாழ்வில் முட்டுவழி செலவு குறைந்த அளவே இருப்பதால் ஆண்டில் எப்போதாவது கிடைக்கும் நல்ல மகசூலும், நல்ல விலையும்தான் உழவர்களை முருங்கைமரம் வாழவைத்துக் கொண்டுள்ளது. சிரமம் குறைந்த விவசாயம், அதனால்தான் முருங்கைச் சாகுபடி இன்னமும் நிலைத்து நிற்கின்றது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
where can i get chedi murungai seeds in and around chennai?. kindly reply
சென்னையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக செனட்டர் தொடர்பு கொண்டு பார்க்கவும்
தொலைபேசி எண் 044 26263484
நன்றி அட்மின்