முருங்கை வளர்த்து முன்னேறலாம்!

சிறிய அளவில் முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செப்டம்பர், அக்டோபரில் சாகுபடி பரப்பை அதிகரிக்கலாம்.

 


45 சென்டி மீட்டர் அகலம், 45 செ.மீ.,, நீளம், 45 செ.மீ., ஆழம் கொண்ட குழி எடுத்து அதில் 15 கிலோ தொழு உரம் அல்லது 4 கிலோ மண்புழு உரம் இட்டு மண்ணுடன் கலந்து குழிகளை நிரப்பலாம். செடிக்கு செடி 2.5 மீட்டர், வரிசைக்கு வரிசை 2.5 மீட்டர் இடைவெளி விடல் அவசியம். நாட்டு முருங்கை செடிகளை 8-10 மீட்டர் இடை வெளியில் நட வேண்டும்.

பரவலாக மழை பெய்யும் தருணத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் முருங்கை மரங்களின் அடிப்பகுதியில் நீர் தேங்க விடக்கூடாது.

தென்னந்தோப்புகளில் ஊடு பயிராக இருந்தாலும் பழத்தோட்டத்தில் இருந்தாலும், நீரை வடித்திட இயலாத நிலையில் மணல் அல்லது காய்ந்த மண்ணை கொட்டியாவது நீரை அகற்ற வேண்டும்.

சத்துக்கள் அவசியம்

ஒரு எக்டர் பரப்புக்கு 600 கிராம் செடி முருங்கை விதைகள் தேவைப்படும் இந்நாற்றுகளை ஜூலை முதல் டிசம்பர் வரை நடவு செய்ய ஏற்ற காலம். அடி உரமாக மண்புழு உரம் 5 கிலோ, அசோஸ்பைரில்லம் 200 கிராம், பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் இட்டால் போதுமானது. நட்ட மூன்றாவது மாதம் ஒரு முருங்கை செடிக்கு தழைச்சத்து 45 கிராம், மணிச்சத்து 15 கிராம் சாம்பல் சத்து 30 கிராம் உரம் தேவைப்படும். ஆறாம் மாதத்தில் தழைச்சத்து உரம் மட்டும் 45 கிராம் தேவைப்படும்.
இந்த விகிதத்தில் கலந்து மூன்றாம் மாதம் யூரியா 100 கிராம் இட்டால் 45 கிராம் தழைச்சத்து பெறலாம். சூப்பர் பாஸ்பேட் 95 கிராம் பொட்டாஷ் 50 கிராம் உரமும் இட்டு மண்ணை அணைக்கவும்.

தேனீ வளர்ப்பு சிறப்பு

ஆறாம் மாதம் கழித்து யூரியா 100 கிராம் மட்டும் இடவும். அதிக உரம் இடுதல் அதிக பூச்சிகள் பெருக வாய்ப்பு ஏற்படும். செடி முருங்கையினை மிளகாய், வெங்காயம், வெண்டை, தக்காளி, பருத்தி, தட்டைப்பயிறு முதலிய பயிர்களுடன் ஊடு பயிராக சாகுபடி செய்து, இயற்கை விவசாய உத்திகளை நன்கு கடைப்பிடிக்க வேண்டும். தேனீ பெட்டிகளை வைத்து தேன் மகசூலும் பெறலாம்.
தேனீக்கள் மூலம் மகரந்த சேர்க்கை நடந்து முருங்கைக்காய் அதிகரிக்கவும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. செடி முருங்கை 75 செ.மீ., உயரம் வளர்ந்ததும் நுனியை கிள்ளி விட வேண்டும். தேவைப்பட்டால் மறு முறையும் 150 செ.மீ., உயரத்தில் நுனிகளை கிள்ளலாம். ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டு வரை விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும்.

இயற்கை உரம் போதும்

வாரம் ஒரு முறை காய்களை பறித்து, தரம் பிரித்து விற்கலாம். நல்ல விலைக்கு விற்க ஒரு மரத்தில் இருந்து சராசரியாக 200 காய்கள் அறுவடை செய்து நல்ல லாபம் ஈட்டலாம். முருங்கைப் பூக்கள் தோன்றி 65 முதல் 70 நாளில் அறுவடை செய்யலாம்.
ஒரு மரத்தில் பூங்கொத்துக்கள் அதிகம் இருந்தாலும் அதன் காய் பிடிக்கும் திறன் மிகவும் குறைவு. ஒரு பூங்கொத்தில் 19 முதல் 126 பூக்கள் இருந்தாலும், ஒரு காய் தான் சாதாரணமாக அறுவடைக்கு வரும்.
மறு தாம்பு பயிராக மரங்களை 90 செ.மீ., உயரத்துக்கு வெட்டி விட வேண்டும். பின் 15 நாட்களுக்கு பின் அனேக கிளைகள் வளரும்.
வேப்பம் புண்ணாக்கு, வேப்ப எண்ணெய், வேப்பம் புண்ணாக்கு கரைசல் மூலம் பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்கலாம். தொடர்புக்கு 98420 07125.

டாக்டர் பா.இளங்கோவன்
உதவி இயக்குனர்
தோட்டக்கலைத்துறை
உடுமலை.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *