தமிழகத்தில் பரவலாக விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் யாழ்ப்பாண முருங்கையை வளர்த்து லாபம் பார்த்து வருகின்றனர். விவசாயிகள் தவிர, பிறர் வீட்டுத் தோட்டங்களிலும் யாழ்ப்பாண முருங்கையை வளர்த்து வருகின்றனர்.
அவற்றிற்கு மாட்டுச்சாணம், ஆட்டுக் கழிவு போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மரத்தில் இலைகள் குறைந்த அளவில்தான் இருக்கும். மரங்கள் 15 அடிக்குக் குறையாமல் வளரும் தன்மை கொண்டது. இதன் காய்கள் பொதுவாக 60 செ.மீ. நீளம் இருக்கும். உருவத்தில் பருமனாகவும், மிகுந்த சுவையாகவும் இருக்கும்.
இந்த முருங்கை தற்போது தமிழகச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் யாழ்ப்பாண முருங்கை 100 செ.மீ அளவு வளர்ந்துள்ளது ஆச்சர்யப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சென்னையிலிருந்து பழைய மாமல்லபுரம் செல்லும் சாலையில் சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவுக்கு அருகில் இருக்கும் நத்தம் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழர், ரத்தின ராஜ சிங்கம். இவரது தோட்டத்தில்தான் 100 செ.மீ நீளம் கொண்ட யாழ்ப்பாண முருங்கை வளர்ந்துள்ளது. இதுபற்றி கேள்விப்பட்டு அவரிடம் பேசினோம்.
“சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தோம். இது இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட முருங்கை வகை. பொதுவாக யாழ்ப்பாண முருங்கைச் சுவை மிகுந்தது, சத்தானது. அதனால் பாரம்பர்யம் மாறாமல் வளர்த்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாகச் சுருள்பாசி வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன்.
காய்கள் 60 முதல் 80 செ.மீ நீளம் உடையதாகும். சதைப் பற்று கொஞ்சம் அதிகமாக இருக்கும். இது நட்ட இரண்டாவது வருடத்தில் 40 காய்களிலிருந்து 600 காய்கள் வரை தரும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இப்போது அதிகமாகப் பயிரிடப்பட்டு வருகிறது. என் தோட்டத்தில் நட்டிருந்த யாழ்ப்பாண முருங்கை வகை மரத்தில் இப்போது காய்த்திருக்கும் முருங்கை 100 செ.மீ அளவு நீளமாக வளர்ந்திருக்கிறது. முதல்முறையாகப் பார்க்கிறேன்.
இதற்குக் கொடுப்பவை எல்லாமே இயற்கை இடுபொருள்கள்தான். அதனால்தான் நீளமாக வளர்ந்துள்ளது என நினைக்கிறேன்” என்றார்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ஐயா இவருடைய தொலைபேசி எண் கொடுக்கவும் விதைகள் எதாவது கிடைக்குமா