சேலம், விழுப்புரம், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில், கல்வராயன் மலை பரந்து, விரிந்து காணப்படுகிறது. கல்வராயன் மலை வனப் பகுதியில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், மூங்கில் மரங்கள் வளர்ந்துள்ளன.
40 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த, முதிர்ந்த மூங்கில் மரங்களில், மூங்கில் நெல் விளையும்.இந்தாண்டு, மூங்கில் நெல் அமோகமாக விளைந்துள்ளதால், கல்வராயன் மலை பகுதிகளில் வாழும் மலை கிராம மக்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மூங்கில் நெல்லை சேகரித்து, பதப்படுத்தி, உமியை நீக்கி, ‘மூங்கில் அரிசி’யை உற்பத்தி செய்யும் மலைகிராம விவசாயிகள், மருத்துவ குணம் மிக்கதாக கூறி, கடந்த சில நாட்களாக, வாழப்பாடி பகுதியில், விற்பனை செய்கின்றனர். ஒரு, ‘படி’ 100 ரூபாய்க்கு விற்கும் நிலையிலும், கிடைத்தால் போதும் என, மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
மருத்துவ குணம் உள்ளதா?
“மூங்கில் அரிசியை, மற்ற சாதாரண அரிசியை போல், எந்த வடிவத்திலும், விருப்பத்திற்கு ஏற்ப சமைத்து சாப்பிடலாம்.இதை சாப்பிடுவதால், உடலில் சர்க்கரை அளவு குறையும்; ஆண்மை அதிகரிக்கும்; நோய் எதிர்ப்பு சக்தி கூடும்; உடல் பருமன் ஆவதை கட்டுப்படுத்தும்.இப்படி, மூங்கில் அரிசிக்கு, பல மருத்துவ குணங்கள் உள்ளன. இயற்கையாக கிடைக்கும் மூங்கில் அரிசியை, எந்த வயதினரும் சாப்பிடலாம்.
கல்வராயன் மலை வனப்பகுதியில், இந்தாண்டு, மூங்கில் நெல் அமோகமாக விளைந்து உள்ளது. குடும்பத்தோடு முகாமிட்டு, இரண்டு மூட்டை நெல்லை சேகரித்து பதப்படுத்தி, ஒரு மூட்டை மூங்கில் அரிசி உற்பத்தி செய்துள்ளோம். வனப்பகுதியில் முகாமிட்டு, மூங்கில் நெல்லை சேகரிப்பது கடினமானது. பார்ப்பதற்கு, கோதுமையை போல காணப்படும் மூங்கில் அரிசி, உடலுக்கும், எலும்புக்கும், வலு சேர்க்கும். அதுமட்டுமின்றி, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையும் உண்டு. “என்கிறார்
டாக்டர் செந்தில்குமார்
சித்தா பிரிவு மருத்துவ அலுவலர்,
ஆரம்ப சுகாதார நிலையம்,
வாழப்பாடி, சேலம் மாவட்டம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்