மூங்கில் சாகுபடி – ஓர் அலசல் ஆலோசனை!

லகின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, மழை குறைந்து வருகிறது, பருவநிலை மாற்றம், காற்று மாசடைந்து வருகிறது என இந்தப் பூமியை நெருக்கும் பிரச்னைகள் ஏராளம். இவற்றுக்கெல்லாம் ஒற்றைத் தீர்வாக அனைவரும் முன்வைப்பது பூமியைப் பசுமையாக்க வேண்டும் என்பதுதான். அதற்கு முதல் தேர்வாக இருக்கிறது மரம் வளர்ப்பு. அதுவும் அதிக ஆக்ஸிஜனை வெளியிடும் மூங்கிலைப் பெரும்பான்மையோர் தேர்வு செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார் குரோமோர் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் என்.பாரதி.

அவரிடம் பேசினோம். “அடிப்படையில் நான் ஒரு பயிர் மரபியல் விஞ்ஞானி. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் என்னுடைய ஆராய்ச்சிப் படிப்பை முடித்தேன். பல்வேறு பயிர்களைப் பற்றிய மரபியல் விஷயங்களை ஆய்வு செய்து வந்தேன். அப்படித்தான் 2004-05-ம் ஆண்டுவாக்கில் மூங்கில் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது, நம்ம ஊர் மூங்கில்கள் அதிக எடையில்லாமலும், மிகக் குறைந்த அளவில் விளைச்சல் கிடைத்துக்கொண்டிருப்பதையும் அறிந்தேன். அப்போது பம்பூசா பால்கோவா (Bambusa balcooa) என்ற ரகம் நல்ல தடிமனாகவும், விரைவாக வளரும் இயல்பு கொண்ட மூங்கிலாகவும் இருந்தது. இதை பீமா மூங்கில் என்ற பெயரில் திசு வளர்ப்பு முறையில் வளர்த்து தமிழகத்தின் பல இடங்களுக்

சாதாரண மூங்கிலுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசமென்றால் இந்த மூங்கிலில் முள் இருக்காது. தென்னிந்தியாவில் வளரும் மூங்கிலில் முள் அதிகமாக இருக்கும். அதனால் பாம்புகள் அதிகம் சேர்வது, வெட்டுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போன்ற பிரச்னைகள் இருந்தன. இந்த மூங்கில் வளர்ந்து, அதை அறுவடை செய்வது எளிது. இன்னொன்று சாதாரண மூங்கிலின் ஆயுள்காலம் அதிகபட்சம் 60 ஆண்டுகள்தான். அது எப்போது பூக்கும் என்றே தெரியாது. பூத்துவிட்டால் பிறகு, அதுவாகவே பட்டுப்போய்விடும். பீமா மூங்கிலில் இந்தப் பிரச்னை இருக்காது. பூ பூக்கும். ஆனால், விதையிருக்காது. இதை ஒருமுறை வாங்கி நடவு செய்துவிட்டால் போதும். திரும்பத் திரும்ப வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

கரும்பு ஒரு பணப்பயிர். ஒரு வருடத்தில் சராசரியாக 40 டன் தருகிறது. அதைப் போலவே ஒரு மூங்கிலில் ஒரு ரகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் இது. இதுவும் ஒரு ஏக்கருக்குச் சராசரியாக 40 டன் தருகிறது. இந்த மூங்கிலை சிமென்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் வாங்குகின்றன. சிமென்ட் தயாரிப்பில் கரியானது முக்கிய மூலப்பொருள். அதற்காக இதை வாங்குகின்றன.

என்.பாரதி, டொமினிக் சேவியர், குமார்

என்.பாரதி, டொமினிக் சேவியர், குமார்

தமிழ்நாட்டில் நிறைய சிமென்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. அவை ஒரு டன் கரி 5,000 – 6,000 ரூபாய்க்கு வாங்குகின்றன. நிலத்திலிருந்து தயாராகும் மூங்கில் ஒரு டன் 4,000 ரூபாய்க்கு விற்றால்கூட 40 டன்னுக்கு 1,60,000 ரூபாய் கிடைக்கும். இதில் செலவு 60,000 ரூபாய் போனாலும் 1 லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும். இதையே தடிமரம், மூங்கில் பிரஷ் பயன்பாட்டுக்குக் கொடுத்தால் ஒரு டன் மூங்கில் 3 லட்சங்களுக்கு மேல் விற்பனையாகிறது. இந்த மூங்கிலை நடவு செய்த இரண்டரை வருடங்களில் மகசூல் எடுத்துவிடலாம். இதற்குத் தண்ணீர் மிகவும் முக்கியம். தண்ணீர் வசதி இல்லாமல் இந்தப் பீமா மூங்கிலைச் சாகுபடி செய்ய வர வேண்டாம். மூன்று நாள்கள் அல்லது வாரத்துக்கு ஒரு நாள் கட்டாயம் தண்ணீர் கொடுக்க வேண்டும். சில நேரங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை இருந்தாலும் மரம் ஒன்றும் வாடிவிடாது. இலைகளை உதிர்க்கும். பிறகு, தண்ணீர் கொடுத்தால் தானாகவே வளர ஆரம்பித்துவிடும். நல்லா தண்ணீர் கொடுத்து வளர்த்தால், ஒரு நாளைக்கு ஒன்றரை அடி உயரம் வரை வளரும் இயல்புடையது. காட்டிலிருக்கும் மூங்கில் நல்ல தடிமனுக்கு வர 7 வருஷங்கள் ஆகும். ஆனால், இது இரண்டரை வருடத்தில் வந்துவிடும். முறையாகச் சாகுபடி தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது’’ என்று ஆலோசனை வழங்கினார்.

குப் பயிர் செய்ய அனுப்பினோம். அங்கு இது நன்றாக வளரவே தொடர்ந்து இதைப் பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். திசு வளர்ப்பு முறையில் மூங்கில் உற்பத்தி செய்தது முதலில் நாங்கள்தான்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பாலாஜி நாலு ஏக்கரில் மூங்கில் சாகுபடி செய்து வருகிறார். அதில் ஒரு பகுதியில் பீமா மூங்கில் சாகுபடியையும் மேற்கொண்டு வருகிறார். அவரிடம் பேசினோம். “இதை நான் நடலை. எங்கப்பாதான் இதைப் பத்திக் கேள்விப்பட்டு நட்டாரு. இந்தப் பீமா மூங்கில் நல்லா வளருது. ஆனா, தினமும் தண்ணீர் கொடுக்கணும். தண்ணீர் வசதி இருந்தாதான், இந்த மூங்கில் சாகுபடியிலேயே ஈடுபட முடியும். கன்னு கொடுக்குறவங்க நாலு, ஏழு அடி இடைவெளியில நடுங்கன்னு பரிந்துரைக்கிறாங்க. ஆனா, 15-க்கு 15 அடி இடைவெளிதான் விவசாயத்துக்குச் செட்டாகுது. இந்த இடைவெளியில 150 கன்னுகளுக்கு மேல நட முடியும். பீமா மூங்கிலோட வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆனா, அதற்கான பராமரிப்புச் செலவு அதிகம். ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் செலவாகுது. இவ்வளவு செலவு பண்ணி விளைவெச்சாலும் அதற்கான விலை கிடைக்குறதே சிரமமா இருக்கு. அதனாலதான் ‘விவசாயிங்க மூங்கில் சாகுபடி செய்றதுக்கு முன்னாடி நல்லா விசாரிச்சு யோசனை பண்ணிட்டு இறங்குங்க’ என்று சொல்லி வருகிறேன். ஏக்கருக்கு அவ்வளவு கிடைக்கும், இவ்வளவு கிடைக்கும்னு சொன்னாலும் ஏக்கருக்கு 25 டன்தான் கிடைக்குது. மூங்கிலை விலைக்குக் கேக்குறவங்க மொத்தமாக கேக்குறாங்க. நம்ம மாதிரி விவசாயிக விளைவிக்கிறது ஒரு டன் ரூ.2,200-க்குத்தான் கேக்குறாங்க. அதனால, மூங்கில் சாகுபடியில கவனம் வேண்டும்” என்று எச்சரித்தார்.

மூங்கில் சாகுபடி

மூங்கில் சாகுபடி

சென்னையைச் சேர்ந்த சூழல் ஆர்வலரான பொறியாளர் குமார் நிறைய இடங்களில் பீமா மூங்கிலை நட்டு வளர்த்துள்ளார், “மூங்கில் சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியமான ஒரு தாவரம். ஒரு வருஷத்தில் 450 கிராம் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது மூங்கில். 350 கிராம் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு வருஷத்துக்குத் தேவையான ஆக்ஸிஜனின் அளவு 280 கிராம்தான். மூங்கிலை நீர்நிலையோரங்களில் நட்டு வளர்த்தால் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க முடியும். மூங்கிலானது தண்ணீரில் உள்ள கார்பன் அளவைக் குறைக்கும். தன்மையுடையது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள போலீஸ் பயிற்சி நிலையங்கள், அலுவலகங்களில் பீமா மூங்கிலை நட்டு வளர்த்திருக்கிறோம். கழிவுநீரைப் பாய்ச்சிக்கூட இந்த மரங்களை எளிதாக வளர்க்கலாம். காற்று மாசு அதிகமுள்ள நகர்புறங்களுக்கு ஏற்ற மூங்கில் ரகம் இது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, இதை வெட்டி வருமானமும் பார்க்கலாம். நம் வீடு, அலுவலகம், தோட்டம் என எங்கே இடம் கிடைத்தாலும் இந்த மரங்களை நட்டு வளர்த்தால் சுத்தமான காற்று கிடைக்கும்” என்றார்.

மூங்கில் சாகுபடி, விற்பனை குறித்துக் கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானி டொமினிக் சேவியரிடம் பேசினோம். “இந்தியாவில் மூங்கிலில் 130 ரகங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 2 வகைகள் முக்கியமானவை. அவை பெருவாரை, சிறுவாரை. மூங்கில், புல் வகையைச் சேர்ந்தது. மற்ற மரங்களின் வேர்கள் பூமிக்குள் 10 அடி, 15 அடி போகும். மூங்கில் அதிகபட்சம் 4 அடிதான் போகும். நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. வனத்துறை வெளியிட்ட முள் இல்லா மூங்கில் ரகத்தில் ஒரு ரகம்தான் பால்கோவா. இதுதான் பீமா என்ற பிராண்டு பெயரில் விற்பனையாகிறது. தேசிய மூங்கில் இயக்கம் சார்பில் மூங்கில் வளர்ப்புக்கு ஒரு ஹெக்டேருக்கு (400 மூங்கில்களை நடவு செய்தால்) 50,000 ரூபாய் மானியம் வழங்கப் படுகிறது” என்றவர் நிறைவாக விற்பனை சம்பந்தமாகப் பேசினார்.

மூங்கில் சாகுபடி

“காய்கறிகளுக்கு இருப்பதைப் போன்று மூங்கிலுக்கு அமைப்பு ரீதியான சந்தை இல்லை. அது இருந்தால், மூங்கில் விற்பனையும் அதிகரிக்கும். அந்தியூர், சென்னை போன்ற நகரங்களில் சிலர் வாங்குகிறார்கள். மூங்கில் சாகுபடி எங்கே நடக்கிறது என்பது வியாபாரி களுக்கும் எங்கே வாங்குகிறார்கள் என்பது விவசாயிகளுக்கும் தெரியாததாலேயே மூங்கில் விற்பனையில் பிரச்னை இருக்கிறது.

இன்னொன்று சவுக்கு மாதிரி மொத்தமாக மூங்கிலை விற்பனை செய்ய முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிதான் விற்பனை செய்ய முடியும். ஏனென்றால் எளிதில் பூச்சி, வண்டு தாக்குதலுக்கு உள்ளாவதால் மற்ற மரங்களைப் போல் மூங்கிலை இருப்பு வைப்பது சிரமம். நாங்கள் மூங்கில் விற்க முடியாத விவசாயிகளுக்கு எங்கள் நிறுவனத்தின் மூலம் வழிகாட்டுகிறோம். அதேபோல மூங்கில் சாகுபடி செய்யவும் வழிகாட்டுகிறோம்.

எங்கள் நிறுவனத்தின் சார்பாகச் சி.ஜே.9 என்ற ரகத்தையும் வெளியிட்டிருக்கிறோம். தேவைப்படும் விவசாயிகள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்” என்றார்.

தொடர்புக்கு, டொமினிக் சேவியர், செல்போன்: 94425 59017

நன்றி: விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “மூங்கில் சாகுபடி – ஓர் அலசல் ஆலோசனை!

  1. Rsenthilkumar says:

    மூங்கில் சாகுபடி செய்ய அதன் செய்முறை பயன்கள் மற்றும் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

  2. SARAVANAKUMAR says:

    வணக்கம். என் பெயர் சரவணக்குமார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா இலுப்பையூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் வீட்டின் பின்புறம் பீமா வகை மூங்கில் வளர்க்க வேண்டும் என விரும்புகிறேன். எனது கிராமத்திற்கு அருகில் இவ்வகை மூங்கில் கிடைக்கவில்லை. இந்த பீமா மூங்கில் எங்கு கிடைக்கும் அல்லது பார்சலில் அனுப்ப முடிந்தால் அதற்கான செலவை நான் ஏற்று கொள்கிறேன். ஓரிரு பீமா மூங்கில் வகை கிடைத்தால் போதும். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *