கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் விதிகளைமீறி 4 மாடி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.கொடைக்கானல் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கட்டுமானங்களுக்கு பல விதிமுறைகள், மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. கட்டுமான பணிகளுக்கு, மலைப் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு, கிராம பகுதியில் விவசாயத்திற்கு பயன்பாடற்ற நிலம் என வி.ஏ.ஓ., முதல் தாசில்தார் வரையான வருவாய் அதிகாரிகள் சான்று பெற வேண்டும்.கட்டுமான பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லவில்லை என மின்சார வாரியத்திடமும், நிலச்சரிவு ஏற்படாத பகுதி என விவசாயத்துறையிலும் சான்று பெற வேண்டும்.
இதுதவிர மாசுக்கட்டுப்பாடு வாரியச் சான்று, நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், கட்டட வரைபடம் போன்ற ஆவணங்களுடன் ஊராட்சித் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின், ஊராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றி வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சியினர் ஆய்வு செய்து உதவி இயக்குனர் பார்வைக்கு வைக்க வேண்டும். பின்னர் ஒருங்கிணைந்த கோப்புகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட குழு கூடி ஊரமைப்பு இயக்குனர் ஆய்வு செய்து, ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.
அதிலும், தரைத்தளம் மற்றும் மேல்தளம் கட்டுவதற்கு மட்டுமே மலைப்பாதுகாப்பு குழுவின் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் மீறி வில்பட்டி, அட்டுவம்பட்டி உட்பட மேல்மலை பகுதிகளில் கட்டுமான பணிகள் நடக்கின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளோ, அதிகாரிகளோ இவ்விதி மீறல்களை கண்டு கொள்வதே இல்லை.
அழகுமிகு பூம்பாறை பகுதியில் பிரசித்தி பெற்ற குழந்தை வேலப்பர் கோயில்உள்ளது. அதே போல சுற்றுலா பயணிகள் அதிகம்விரும்பிச் செல்லும் மகாலட்சுமி கோயிலும் உள்ளது.
இவற்றின் அருகே ரிசார்ட்ஸ் (ஓய்வு விடுதிகள்) பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகின்றன.அனுமதி பெற்றதைவிட கூடுதலாக 4 மாடி கட்டடங்களாக கட்டப்படுகின்றன. இதுதொடர்பாக யூனியன் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கிராம பகுதியில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை 30 அடிஉயரத்தில்தான் கட்ட வேண்டும். ஆனால் அரசியல் பின்னணியுடன் பலர் வருவதால் தடுக்க இயலவில்லை” என வேதனை தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
மலை பிரதேசங்கள் சரிவுகளை இப்படி JCB வைத்து குடைந்து எடுத்து பல மாடி வீடுகள் ரிசார்ட்கள் கட்டி இப்போது லாபம் பெறலாம். ஆனால் அடுத்த மழை சீசனில் இப்படி மலை பகுதிகளை தாக்கி கெடுத்து கட்ட பட்ட இடங்களில் நிச்சியம் நிலச்சரிவுகள் வரும். இப்படிதான் உத்தர்காண்ட் போன்ற இடங்களிலும் பல மாடி கட்டிடங்கள் கட்டி அங்கே நிலச்சரிவுகள் அதிகரித்து உள்ளன.நம்மவர்கள் மற்றவர்களை பார்த்தாவது கற்று கொள்வார்களா?
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்