'மீண்டும் நியூட்ரினோ' திட்டம்

கடந்த ஒன்றே கால் ஆண்டாக அமுங்கிக் கிடந்த தேனி நியூட்ரினோ ஆய்வக விவகாரம் மீண்டும் வேகம் எடுத்துக் கிளம்புகிறது. ஆய்வகம் அமைவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராது என மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சிபாரிசு செய்திருப்பதே இதற்குக் காரணம்.

நியூட்ரினோ ஆய்வில் இந்தியா

அமெரிக்கா, ஜப்பான், சீனா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து நியூட்ரினோ ஆய்வில் இந்திய அணுசக்திக் கழகமும் முழுவீச்சில் களத்தில் இறங்கி இருக்கிறது. 1965-ல் கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கம் பகுதியில் முதன் முதலாக ஆய்வு மேற்கொண்டு நியூட்ரினோ துகள்களை அடையாளம் கண்டது இந்தியா. எனினும், தங்கச் சுரங்கப் பகுதியில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் இருந்ததால் ஆய்வகம் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2009-ல் நீலகிரி மாவட்டம் சிங்காராவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

இதற்காக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், 2010-ல் அந்த வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதனால், சிங்காரா ஆய்வகம் கைவிடப்பட்டது. அடுத்ததாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிப்புரத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்த செய்திகள் வெளியானதுமே ஆய்வகத்தின் ஆபத்துகளை பட்டியலிட்டு எதிர்ப்பு குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன.

போராட்டங்களும் வைகோ வழக்கும்

குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அணு ஆலைகளுக்கு எதிரான போராட்டக் களத்தில் உள்ள முகிலன் போன்றவர்கள் நியூட்ரினோ ஆய்வகத்தின் பாதிப்புகளை அடுக்கி ஆய்வகத்துக்கு எதிராக மக்களைத் திரட்டினர். இதற்காக தேனி மாவட்டத்தில் பிரச்சாரப் பயணங்களையும் போராட்டங்களையும் அவர்கள் வழிநடத்தினர்.

சுற்றுச் சூழல் போராளியான மேதா பட்கரையும் அழைத்து வந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர். ஆயினும், ஆய்வகம் அமைப்பதில் இருந்து அணு சக்திக் கழகம் பின்வாங்கவில்லை. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தொடுத்த வைகோ, தானே ஆஜராகி வாதாடினார்.

வைகோவின் இரண்டரை மணி நேர வாதத்தின் முடிவில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறும் வரை நியூட்ரினோ ஆய்வகப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என கடந்த ஆண்டு மார்ச் 26-ல் இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம்.

வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த வாரம், தேனி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி அளிக்கலாம் என வாரியத் தலைமைக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது.

ஆய்வகம் எப்படி அமையப் போகிறது?

மலை உச்சியில் இருந்து சுமார் 1,500 மீட்டர் ஆழத்தில், 132 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 20 மீட்டர் உயரம் கொண்ட குகை அமைக்கப்பட்டு அதில் 50 ஆயிரம் டன் எடை கொண்ட காந்தமயப்படுத்தப்பட்ட இரும்புக் கலோரி மீட்டர் நிறுவப்படும். அதனருகே இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் குறிப்பிட்ட இடைவெளியில் அறைகள் போல் அமைக்கப்படும்.

படம்: நியூட்ரினோ ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.

காந்தத்தின் செயல்பாடுகளையும் மின்தட்டு அறைகளின் செயல்பாடுகளையும் தூண்டுதல் செய்து அதனிடையே நியூட்ரினோ துகள்கள் ஆய்வு செய்யப்படும். நியூட்ரினோ துகள்களானது அண்டவெளி கதிர்கள் (Cosmic Rays) ஊடே பயணிப்பதால் அவற்றை தனியே வடிகட்டிப் பிரித்துதான் ஆய்வு செய்ய வேண்டும்.

நியூட்ரினோ ஆய்வகப் பணிகளில் இந்திய அணுசக்திக் கழகத்துடன் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 25 அமைப்புகள் கைகோர்த்துள்ளன. 1,500 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே ரூ.500 கோடி. இதற்கான நிதிப் பொறுப்பை இந்திய அணுசக்திக் கழகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுவே பலரது சந்தேகத்துக்கும் ஆட்சேபத்துக்கும் இடமளித்துவிட்டது.

1,000 டன் எடையுள்ள ஜெலட்டீன் வெடிமருந்தை 800 நாட்கள் வெடிக்க வைத்து அதன் மூலம் 11 லட்சத்து 25 ஆயிரம் டன் பாறைகளை தகர்த்துத்தான் இந்த ஆய்வகத்துக்கான குகையை அமைக்க முடியும்.

இப்படி தொடர்ச்சியாக அதிக அளவில் பாறைகளை வெடிக்கச் செய்வதால் மலையில் உள்ள நீர் அடுக்கு பகுதிகள் நிலைகுலைந்து நீரியல் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று அச்சம் தெரிவிக்கும் வைகோ, ஆய்வகத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மிகக் கடுமையான கதிரியக்கத் தாக்கம் இருக்கும் என்ற நியூட்ரினோ அறிவியலாளர் ஜெ.ஜெ.பெலக்காவின் அறிக்கையையும் மேற்கோள் காட்டுகிறார்.

குடிநீர், வேளாண்மை பாதிப்படையும்?

நியூட்ரினோ ஆய்வகக் கட்டுமானப் பணிகளுக்காக ஆரம்பத்தில் தினமும் 40 கிலோ லிட்டர் தண்ணீரும் ஆய்வகம் செயல்பட தொடங்கிய பிறகு தினமும் 340 கிலோ லிட்டர் தண்ணீரும் தேவைப்படும் என்கிறது இந்த ஆய்வகத்தை நிர்வகிக்க இருக்கும் டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம்.

ஆனால், ஆய்வகத்தில் ஏற்படும் வெப்பத்தை குறைப்பதற்காக தினமும் 16 லட்சம் லிட்டர் தண்ணீரை சுருளி ஆற்றில் இருந்து 35 கிலோ மீட்டருக்கு குழாய்கள் வழியாக எடுத்துவர இருப்பதால் நூற்றுக் கணக்கான கிராமங்களின் குடிநீர் மற்றும் வேளாண் ஆதாரம் பாதிக்கப்படும் என்பது வைகோவின் வாதம்.

மூடப்பட்ட நியூட்ரினோ ஆய்வகங்கள்

இதுகுறித்து விரிவாக பேசிய வைகோ, “போகிற போக்கில் யாரோ சொல்வதைக் கேட்டுக்கொண்டு நாங்கள் நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கவில்லை. இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் தந்துள்ள ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையிலேயே நாங்கள் இது ஆபத்தானது என்கிறோம். இந்த ஆய்வகத்துக்காக இமயமலை தொடங்கி வடநாட்டின் பல பகுதிகளையும் கோலார் தங்கச் சுரங்கத்தையும் ஆய்வு செய்தார்கள். ஆனால், அங்கெல்லாம் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் நம் தலையில் கை வைத்திருக்கிறார்கள்.

இத்தாலியில் கிரான் காசோ நியூட்ரினோ ஆய்வகம் அறிவியலாளர்கள், பொதுமக்கள் எதிர்ப்பால் 2011-ல் மூடப்பட்டு பிறகு திறக்கப்பட்டது. அந்த ஆய்வகத்துக்கு எதிராக இத்தாலி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அமெரிக்காவின் நியூமெக்சிகோ பாலைவனத்தில் இயங்கி வந்த Exo200 என்ற செறிவூட்டப்பட்ட Xenon ஆய்வகத்தில் 2014 பிப்ரவரியில் ஏற்பட்ட கசிவு காரணமாக கதிரியக்கத் தாக்கம் ஏற்பட்டு ஆய்வகம் மூடப்பட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதன் அருகே யாரும் செல்ல முடியாது.

அசாதாரண விளைவுகளை ஏற்படுத்தும்

ஜப்பான், அமெரிக்கா நாடுகளில் இருந்து நியூட்ரினோ கற்றைகளை பொட்டிப்புரம் ஆய்வகத்துக்கு அனுப்பி மேற்கொள்ளப்பட இருக்கும் ஆய்வுகள் அசாதாரணமான விளைவுகளை ஏற்படுத்தும். நியூட்ரினோ கற்றைகளை அனுப்பி இன்னொரு நாட்டின் அணு ஆயுதங்கள் இருப்பைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்கவும் முடியும் என்கிறார் கள். நியூட்ரினோ ஆலையில் சிறு கதிரியக்க கசிவு ஏற்பட்டாலும் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த ஆய்வகங்களைச் சுற்றி 340 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த உயிரினமும் வசிக்கக் கூடாது என ஆய்வுகள் சொல்கின்றன.

யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்க முடியாது. ஆய்வகம் அமைக்கப்படும் இடத்தில் தான் கேரளத்தின் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா வருகிறது. தேசியப் பூங்காவுக்கு 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த உடைப்பையும் மேற்கொள்ளக் கூடாது. தென் மாவட்டங்களின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணையும் கேரளத்தின் இடுக்கி அணையும் 12 தடுப்பு அணைகளும் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு அருகிலேயே இருப்பதால் இவற்றுக்கும் ஆபத்து காத்திருக்கிறது.

தடுத்தே தீருவோம்

இதுகுறித்து, கேரளத்தின் முன்னாள் முதல்வர்கள் உம்மன் சாண்டியையும் அச்சுதானந்தனையும் சந்தித்துப் பேசி ஆபத்தை விளக்கிச் சொன்னேன். அவர்களும் இந்தத் திட்டத்தை முழு அளவில் எதிர்ப்போம் என்று வாக்குறுதி தந்தார்கள். இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் தேனி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வகத்துக்கு ஆதரவாக அறிக்கை அளித்திருப்பது விபரீத முடிவாக இருக்கிறது. யார் அனுமதி கொடுத்தாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எப்பாடுபட்டாவது பொட்டிப்புரம் நியூட்ரினோ ஆய்வகத்தைத் தடுத்தே தீருவோம்.

நியூட்ரினோ ஆய்வகம் வரக்கூடாது என தேனி மாவட்ட மக்கள் தீவிரமாய் இருக்கிறார்கள். ஆனால், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்று பொய்யான வாக்குறுதிகளைத் தந்து அந்த மக்களை மூளைச் சலவை செய்திருக்கிறார்கள். இப்போது அந்த மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

எனது முயற்சியாக கடந்த ஒன்றேகால் ஆண்டாக இந்த ஆய்வகம் அமைக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரூ.1,500 கோடிக்கான திட்டம் என்பதால் பெரிய அளவில் பணத்தைச் செலவு செய்து எதிர்ப்புக் குரல்களை அடக்கப் பார்க்கிறார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் கெயில் திட்டத்தை நிறுத்தி வைத்தது போல் இந்தத் திட்டத்தையும் ரத்து செய்ய முதல்வர் முழு முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.

ஆதரிக்கும் அறிவியல் இயக்கம்

நியூட்ரினோ ஆய்வகத்தை ஆதரித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் பொதுமக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆதரிப்பதற்கான காரணங்கள் குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் எஸ்.தினகரன், “நியூட்ரினோவின் துணை அணுக்கள் நமது உடம்பிலேயே (பொட்டாசியம் 40) உள்ளன. நமது நகங்கள் வழியாக லட்சக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் ஊடுருவிக் கொண்டேதான் இருக்கின்றன. சொல்லப் போனால் நாமெல்லாம் நியூட்ரினோ கடலில் நீந்திக்கொண்டு இருக்கிறோம்.

படம்: தேனி மாவட்ட பொதுமக்களிடையே நடைபெற்ற நியூட்ரினோ ஆதரவு பிரச்சாரம்.

ஆய்வகத்தால் என்ன பலன்?

நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதால் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர் பெருக்கத்துக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை. இந்தப் பகுதியில் ஓரிட வாழ்விகள் கிடையாது, புலம் பெயரும் உயிரினங்களும் பெரிய அளவில் இல்லை என ‘சலீம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம்’ ஆய்வறிக்கை தந்துள்ளது. கட்டுமானப் பணிகள் நடக்கும்போது வேண்டுமானால் சிறிய அளவில் மாசு ஏற்படலாம். அதுகூட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின்போது நடக்கும் அளவுக்குத்தான்.

சிகாகோவில் உள்ள ஃபெர்மி ஆய்வகத்தின் கூட்டுப் பொறுப்புடன் தான் பொட்டிப்புரம் நியூட்ரினோ ஆய்வகம் செயல்பட இருக்கிறது. அந்த ஆய்வகத்துக்காக இங்கே சில ஆய்வுகள் நடக்க உள்ளன. நியூட்ரினோ ஆய்வகப் பணிகள் முழுமை பெற்றுவிட்டால் இணைய வேகத்தை பல மடங்கு அதிகரித்துக்கொள்ள முடியும்.

அண்டை நாடுகளில் உள்ள அணு ஆயுதங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவற்றை இங்கு இருந்தபடியே செயலிழக்கச் செய்ய முடியும். அணு ஆராய்ச்சியில் நமக்கு ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளாது’’ என்றார்.

அறிக்கை அளித்தது உண்மையே

அறிக்கை அனுப்பி இருப்பது உண்மைதானா என்பதை அறிய தேனி மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் டிவிஷனல் இன்ஜினீயர் பாண்டியனை நாம் தொடர்பு கொண்டபோது, “நியூட்ரினோ திட்டத்தால் அந்தப் பகுதியின் சுற்றுச் சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பது ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வகப் பகுதியில் வாகனங்களைக் குறைத்தல், முறையான திட்டமிடுதலுடன் கழிவுகளை வெளியேற்றுதல், ஆய்வகப் பகுதியில் தங்கும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்தல் இவற்றை சரியாக கடைபிடித்தால் சுற்றுச் சூழல் மாசுபடுவதை வெகுவாகக் குறைக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் வழிகாட்டல்படி நாங்களும் அதுகுறித்து ஆய்வுகளை நடத்தினோம். அதன் அடிப்படையில், ஆய்வகம் அமைப்பதால் சுற்றுச்சூழல் மாசடையாது என நாங்கள் கடந்த வாரம் அறிக்கை அளித்திருக்கிறோம். எனினும் இறுதி முடிவை வாரியத் தலைமைதான் எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் விதமாக அமைய இருக்கும் நியூட்ரினோ ஆய்வகத்தை எதிர்ப்பது நமது வளர்ச்சிக்கு நாமே முட்டுக்கட்டை போடுவதுபோல் ஆகிவிடும்’’ என்று சொன்னார்.

 

எவ்வித ஆபத்தும் இல்லை

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் எஸ்.தினகரன் கூறியதாவது: நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக பலமுனைத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகிறது. கதிரியக்க அபாயம் ஏற்படும் என்று சிலர் பதறுகிறார்கள். இதுகுறித்த ஆதாரப்பூர்வமான ஆய்வறிக்கைகள் இல்லாமல் சும்மா காற்றில் மாளிகை கட்டுவதை ஏற்கமுடியாது.

உடம்புக்கு பிரச்சினை என்றால் நாம் ஸ்கேன் எடுக்கிறோம். நம் உடம்புக்குள் கதிரியக்கம் பாயும் என்பதால் ஸ்கேன் எடுக்காமல் இருக்கிறோமா? அப்படிப் பார்த்தால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு யாரும் வசிக்கக் கூடாது. ஆனால் எதார்த்தம் அப்படியா இருக்கிறது?

பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்களைப் பெறமுடியும். பிரபஞ்சத்தின் உண்மையை தெரிந்துகொண்டால் மக்களுக்கு இறை நம்பிக்கை போய்விடும் என்று சிலர் பதறுகிறார்கள் என்றார்.

நன்றி: ஹிந்து

புவியின் கருத்து:

நியூட்ரினோ திட்டத்தால் கேடு ஏதும் இருக்காது என்பதே உண்மை.  ஆனால்,இந்த திட்டம் செயல் படுத்தும் போது பெரிய குகைகளை குடைய வேண்டும். அதில் வெளியேறும் 11 லட்சத்து 25 ஆயிரம் டன் பாறை கற்களை எங்கே கொட்ட போகிறோம்? இந்த நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் தீர்வுக்கு ஏங்கும் போது பிரபஞ்சத்தின் உண்மையை தெரிந்து கொள்வது இந்திய முக்கிய பிரச்னையாயா? இருக்கும் நிலத்தையும் நீரையும் வளங்களையும் காப்பதை விட்டு விட்டு இப்படி பட்ட 1,500 கோடி செலவுகளை நம்மை போன்ற ஏழை நாடு செய்ய வேண்டுமா?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *